புரட்சிகர அரசியல் முதன்மைபெற…
இலங்கைமக்கள் அனைவரும், சாதி, மத, வேறுபாடு
களைக் கடந்து, இன, மொழி, இனவிய, மதவிய ஆழ் தைக் குழிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இம்
மக்களுடன் சேர்த்து பன்முக ஜனநாயமும் குழிதோன்றிப் புதைக்கப் பட்டுவிட்டத்து. இம்மக்களைத்
தொடர்ந்தும் இப்புதை குழிக்குள் அமிழ்ந்து கிடக்கச் செய்வதே நடைபெற வுள்ள தேர்த்தலின்
குறிக்கோளாகும். இச்சந்தர்ப்பத்தில் கடந்தகாலத்தை மீழப்பார்க்கும் சில கட்டுரைகளைப்
பதிவேற்றுகிறேன்.
இந்தக்கட்டுரையை
எழுதுவதற்கு உடனடி உந்தலாக அமைந்தது தமிழீழ தேசிய விடுதலை முன்னணி NLFT. இன் அரசியற்தட்டமாகும். இந்த இயக்கம் சுருக்கமாகவும், தெளிவாகவும் தனது கொள்கைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. தமிழ் மக்களின்
விடுதலைப் போராட்டத்தின் பிரதான சக்திகள், அதன் இலக்குகள் விடுதலை
பெற்ற சமூகத்தின் முதல் கட்டத்தின் அரசியற்திட்டத்தில் தெளிவாக் கப்பட்டிருப்பதால்
இதை ஒரு விமர்சன ரீதியான பார்வைக்கு உட்படுத்தல் சாத்தியமாகிறது. அளவு ரீதியில் NLFT இன்னும் பாரிய
இயக்கமாக மலராத போதும், இந்த அரசியற்திட்டம் சகோதர இயக்கங்களின் கவனத்தையும்
ஈர்க்கும் என நம்பலாம். அது நம்மிடையே ஆக்கபூர்வமான விவாதங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற ஒரு அடிப்படையாக விளங்கவல்லது என்பது எனது
கருத்து எனவேதான் அவ்வியக்கத்தின் முக்கியத்துவம் அதன் ஸ்தாபன
வரம்புகளுக்கும் அப்பால் செல்கிறது.
NLFTயின் அரசியல் திட்டத்தின் பிரகடனங்கள் விடுதலைப் போராட்டத்தின் பல அம்சங்களைத்
தொட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் பற்றி இங்கு கருத்து தெரிவிப்பது கடினம், ஆயினும்
சகல விடுதலை இயக்கங்களுக்கும் பொதுவான முக்கியத்துவம்த வாய்ந்த சில விடயங்கள்
பற்றிய ஒரு வியாதத்தை நோக்கி சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
விடுதலைபற்றி
மக்கள் சார்ந்து ஒரு முழுமையான கோட்பாடு, போராட்டத்தின் ஆரம்பக்கட்டங்களில்
இருந்தே உணர்வு பூர்வமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது சமீப தசாப்த்தங்கள்
நமக்குத்தரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடமெனலாம். போஷ்லவிக் புரட்சியில்
இருந்து சமீபத்திய சிம்பாப்வே, நிக்கராருவா புரட்சிகள்
வரை விடுதலையின் கருத்துரீதியான, கொள்கைரீதியான அர்த்தங்கள், விளக்கங்கள் என்பனவற்றிற்கும் நடைமுறைக்குமிடையே பல முரண்பாடுகள் இருப்பதைக்
காண்கிறேம். புரட்சிக்குப் பின் தோன்றிய அரசின் தலைமைகள் பல சந்தர்ப்பங்களில் இந்த
முரண்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக அவற்றை மூடிமறைத்தோ அல்லது அவற்றிற்கு
தம்வசதிக்கேற்ற போலி விளக்கங்களைக் கொடுத்தோ (இதற்கு மார்க்சையும், லெனினையும் மேற்கோள் காட்டுவதும் வழக்கமாகிவிட்டன) நிலைமைகளை நியாயப்படுத்தி
வந்துள்ளன. காலப்போக்கில் தவறான விடுதலை விரோதமான-போக்குகள் ஸ்தாபன ரீதியாக பலம்
பெற்று சமூக நியதிபோல் ஆகிவிடுகிறன்.
மூன்றாம் உலக
விடுதலைப் போராட்டங்களில் மக்கள் எண்ணற்ற தியாகங்களை செய்திருக்கின்றனர்
செய்துவருகிறனர். ஆயினும் புரட்சிகர அரசியல் மாற்றத்தின்பின் மக்களின் விடுதலை
ஆவல்களுக்கும் ஆபிலாசைகளுக்கும் உருவமும் உள்ளடக்கமும் கொடுக்கும் சமூக உறவுகளை, ஸ்தாபனங்களை உருவாக்குவதில் எல்லாப் புரட்சிகளும் பல தோல்விகளை
சந்தித்திருக்கின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கட்டத்தில்
தொழிலாளர்,
விவசாயிகள், பழைய சமூக உறவுகளினால்
நசுக்கப்படுவோர், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள், நடுத்தர வர்க்கத்தினர்யோர் ஆகிபுதிய
சமூகம் பற்றி பல கனவுகளைக்கட்டி எழுப்புகிறனர். இவை இயக்க ரீதியானஅரசியல்
கல்வியாலும் அவரவர் அபிலாஷைகளாலும் உருப்பெறுகின்றன.
ஒடுக்குமுறையில்
இருந்து விடுதலை பெறுவதென்பது இப்போதுள்ள ஒடுக்கும் சக்திகளை தூக்கியெறிவது
மட்டுமாகாது புதிய முடுக்குமுறைத்தன்மைகள் தோன்றாமலும் வளராமலும் இருப்பதற்கு
வேண்டிய வழிவகைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும். இந்த வழிவகைகள்
விடுதலைப்புரட்சியின் காலத்திலேய உயிரூட்டமாக மக்கள் ஸ்தாபனங்களில் இணைக்கப்பட
வேண்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் சோஷலிச அமைப்புக்களைப்பார்க்கும் போது இக்
கருத்து அடிப்படையான முக்கியத்துவம் பெறுகிறது. விடுதலை என்பது மக்கள்
உணர்வுபூர்வமாக நடத்தும் ஒரு மாபெரும் நீண்ட பயணம் அதற்கு வரலாற்றுக்கட்டங்கள்
இருக்கலாம், ஆனால் ஒரு இறுதிப்புள்ளி கிடையாது.
தமிழ் மக்கள்
விடுதலைபற்றி கொள்கைரீதியில் சிந்திக்கும்போது இந்த வரலாற்றுப் பாடங்களை மனதில்
நிறுத்தல் அவசியம். NLFTயின் அரசியற் திட்டத்தில் நேரடியாக இவை குறிப்பிடப்படாத போதும் அதன் ஆக்கத்தில்
இவை பற்றிய கவனம் இருந்திருக்கலாம் என நம்ப முடிகிறது. NLFT சுதந்திர ஈழத்தின் ஆரம்பக்கட்டத்தினை பின்வருமாறு விளக்கியுள்ளது.
“சுதந்திரமும் சுயாதிபத்தியமும் கொண்ட மக்கள், ஜனநாயக
சமூகஅமைப்பின் அடிப்படையிலான தமிழீழ மக்கள் குடியரசை அமைத்தல்.”
இதன்படி
ஈழவிடுதலைப்புரட்சி உடனடியாக மக்கள் ஜனநாயக அமைப் பொன்றினை உருவாக்க வேண்டும்.
எங்கும் “சோஷலச ஈழம்”
என்பதே பேச்சு. பல இயக்கங்கள் இதையே தமது உடனடி
இலக்கெனக்கூறுகிறன. சோஷிசமே நமது இலட்சியமாக இருக்க வேண்டுமென்பதில் சந்தேகமில்லை.
ஆனால் சோஷலிசத்தை
எப்படி விளக்குவது?
சோஷலிசம்=அரசுடமை+கட்சித்
தலைமையின் மையவாதம் என்பதா?
அரசுகடைமையாக்கல்களாலும், சட்டத்தின்மூலம் சந்தையை கடதாசியில் இல்லாதொழிப்பதாலும், கட்சியின்
தலைமையாலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது பிறந்துவிடுமா? இது போன்ற அமைப்புகளால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உயிரூட்டமன அம்சமான
பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தைத் தோற்றுவிக்க முடியுமா? கடந்த அறுபத்தேழு வருட நடைமுறை சோஷலிசத்தின் வரலாற்றை நாம் காணாவேண்டும்,
அவற்றை விமர்சனத்துக்குள்ளாக்காமல் விடமுடியாது.
அவ்விதம் நோக்கும்
போது பின்தங்கிய நாடுகளில் சோஷலிச நிர்மாணம் என்பது சுலபமன காரியமில்லை உற்பத்தி
சக்திகளே சர்வமும் என்ற வாதம் தவறானது. ஆனால் அதே நேரத்தில் அவற்றிற்குக் கொடுக்க
வேண்டிய முக்கியத்தைக் கொடுக்காது சோஷலிச மாற்றம் பற்றிப் பேசிப்பயனில்லை.
இலங்கை ஒரு
குறைவிருத்தி அமைப்பைக்கொண்டது. அதிலும் தமிழ்ப் பிரதேசங்கள்-அதாவது தமிழ்
ஈழம்-நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்கு உற்பத்தி சக்திகளின்
வளர்ச்சி,
மூலதனக் குவியல் ஆகியவை மிகவும் குறைவு. நமது சமூகத்தின்
வர்க்க உருவாக்கத்தின் போக்குகள், மட்டங்கள் ஆகியன இதை
நன்கு பிரதிபலிக்கின்றன. யாழ்பாணத்தில் பணப்புழக்கம் இருக்கும் அளவுக்கு உற்பத்தி
மூலதனம் வளரவில்லை. இது குறைவிருத்தியின் பொதுஅம்சம் கிழக்கு மாகாணத்து நிலைமைகள்
இன்னும் பின்தங்கியவை. இதனால் சமூக மயப்படுத்தப்பட்ட நகர்ப்புற தொழிலாள வர்க்கம்
வளரவில்லை. தமிழ்ப்பிரதேசங்களின் தொழிலாளர்களில் பெரும் பங்கினர் தனித்தனியானோரே,
தொழிற்போக்கினால் சமூகரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட வர்க்கமாக்கப்படும் நிலைமைகளை
அடையாதோர். சிறுபண்ட் உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்வோர்.
இந்த உற்பத்தியே, நமது விவசாயம், மீன்பிடி கைத்தொழில்,
வர்க்கத்துறைகள் முதலானவற்றின் மிகப்பரந்த குணாம்சமாகிறது. இந்தக்கட்டத்தில்
இருந்து சோஷலிச உற்பத்தி உறவுகள். சோஷலிச நிர்வாக அமைவுகள் கொண்ட ஒரு
அமைப்புக்குத்திடீரென பாயமுடியாது. அது நடைமுறையில் அதிகாரத்துவ உறவுகள் மிகுந்த
ஒரு சமூகத்திற்கும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் பின் உற்பத்தி சக்திகளின் ஸ்தம்பிப்பிற்குமே
வழிவகுக்கும். இது வரலாறு தரும் பாடம். சுருக்கக்கூறின் ஈழத்தின் குறைவிருத்திப்
பொருளாதார சமூக நிலைமைகள் சில இடைக்காலக்கட்டங்களை (Transectional Stage) அவசியப்படுத்துகிறன. இவை சரியாகக்கிரகிக்கப்படா விடில் சோஷலிசம் என்ற ஒரு
தெளிவற்ற கருத்தமைவு ரீதியான (Ideoigical) சுலோகத்தின் பெயரில்
நாம்பல சோஷலிசவிரோத தவறுகளை இழைக்க நேரிடும்
உண்மையான,
விஞ்ஞான பூர்வமான சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்ட இயக்கங்கள்
இத்தகைய தவறுகளை விட நியாயமில்லை.
இங்கு
விடுதலைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடு.
முக்கியத்துவமடைகிறது. மனிதரின் ஆக்க சக்தியினதும் அவர்களின் தன்மை ரீதியான
ஆளுமையினதும் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய, அதேநேரத்தில் சகல
பொருளாதாரத்துறைகளிலும் உற்பத்தி சக்திகளை வளர்க்கவல்ல உற்பத்தி உறவுகளை
வளர்க்கவேண்டும். இம் முரண்பாட்டை நீண்ட காலநோக்கில் கையாளுதல் அவசியம். அத்துடன்
இம் முரண்பாட்டைக் கையாள்கையில் வெறும் “சோஷலிச” அபிவிருத்தி வாதப்போக்கில் நிலைமைகளையும் எதிர் காலத்தையும் ஆராய்வதையும்
தவிர்க்க வேண்டும். இப்போதைய கட்டம் சிங்கள இராணுவத்தை எப்படியும் வெளியேற்றல்
மற்றவை பின்னர் என்றும்,
பின்னர் (சிங்கள இராணுவத்தை வெளியேற்றிவிட்டோம் என
வைத்துக்கொள்வோம்) இப்போது உடனடி தேவை பொருளாதார வளர்ச்சி மற்றவை (ஜனநாயக உரிமைகள்
புதிய கலாச்சார உற்பத்தி போன்றவை) அடுத்த கட்டத்தில் என்றும் பிரித்துப்
பார்க்கும் பார்வை இராணுவவாதம். பொருளியல் வாதம் என்பனவற்றின் பிரதிபலிப்புக்களே
ஒழிய சோஷலிச புரட்சியின் தன்மைகள் அல்ல. வெகுசனங்கள் சார்ந்த இயக்கங்கள் இத்தகைய
சிந்தனைகளைக் கொண்டிருக்க முடியாது.
இடைக்கால நோக்கில்
விடுதலைப்போராட்டத்தை அணுகும் போது, விடுதலை பொருளாதர வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும்
இடையேயான இயங்கியல் உறவின் தன்மைகள் தெளிவாகின்றன. தனித்தனியாக இயங்கும் சிறுபண்ட
உற்பத்தி அமைவுகளின் சமூகரீதியான சீர்திருத்தத்தின் உடனடி நோக்கம் சந்தையின் பங்கினை
முற்றாக இல்லாதொழிப்பதல்ல,
இது நடைமுறையில் சாத்தியற்றது. இங்கு வேலைத்திட்டங்களின்
முக்கிய அடிப்படைகள் ஜனநாயகமயப்படுத்தல், கூட்டுறவு அமைவுகளை
அடிமட்டத்திலிருந்து படிப்படியாக உருவாக்கல், இவற்றுக்கிணைந்த கலாச்சார
விழுமியங்களை உருவாக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் ஆகியன எனலாம். இவை
அனைத்தும் கிராமிய நகர்ப்புற பகுதிகளின் உறவுகளில் இருந்து நாட்டின் அரசியல்
நிர்வாகம் வரை தொடர்புள்ளவை. புதிய சமுதாயத்தின் உற்பத்தி தேவைகளை இனங்காணுதல்
வேண்டும். இவை மக்களின் தேவைகளாக எழவேண்டும். இவற்றின் அரசியல் கலாச்சார
அடிப்படைகள்,
விழுமியங்கள் மக்களின் அபிலாசைகளின் அம்சங்களாக வேரூன்ற
வேண்டும். கற்பனா சோஷலிஸ அபிவிருத்திவாதிகள் இவற்றை யெல்லாம் வெறும் கருத்து
முதல்வாதம் என்று தட்டிக்கழித்துவிடுவார்கள். இது புதிய ஆளும் குழுக்களின் மேலாதிக்கத்தை
நியாயப்படுத்த ஒரு சுலபமான வழியாகி விடுகிறது.
பின்தங்கிய
ஈழப்பொருளாதாரத்தை மக்கள் ஜனநாயக விழுமியங்களைமைந்த ஒன்றாக மாற்றியமைப்பது எப்படி
என்பது இன்னமும் விடுதலை இயக்கங்கள் மத்தியில் விவாதிக்கப்படாத ஒரு விடயமாகும்.
பலர் நமக்குச் சுலபமாகக் கூறுவது சோஷலிசம் பற்றியே ஆயினும் ஈழத்தின் சோஷலிசப்
பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும் என்பதுபற்றி விளக்கங்கள் இல்லை. எனது
அபிப்பிராயத்தில் மக்கள் ஜனநாயக இடைக்காலம் (இதுமிக நீண்டதாக இருக்கலாம்) பற்றிய
ஆழ்ந்த கொள்கை ரீதியான,
நடைமுறை சார்ந்த கிரகிப்பும் விளக்கமும் இன்றி சோஷலிச ஈழம்
பற்றிப் பேசமுடியாது. இப்படி நான் கூறுவது சோஷலிசம்தான் இறுதிக்கட்டம் என்ற
கருத்தில் இல்லை. அதுவும் ஒரு இடைநிலைக்கட்டம்தான் ஆயினும் அதன் ஆரம்பநிலைக்கு
வேண்டிய, உற்பத்தி சக்தி சார்ந்த, உற்பத்தி உறவுகள் சார்ந்த, தேவைகளைப் பூர்த்தி
செய்யும் கட்டம் பற்றியே இங்கு நாம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். பண்ட
உற்பத்தி முக்கியத்துவம் பெறும்வரை, உழைப்பாளர் அன்னிய மயமாக்கலுக்கு உள்ளாகும்
வரை, சோஷலிச நிர்மாணம் பற்றிப் பேசமுடியாது. சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைத்
திருப்திகரமாக உற்பத்தி செய்யும் சமூக பொருளாதா ஆற்றல் மிகுந்த அமைப்புகள்
இல்லாதவரை சந்தை உறவுகளை வெறுமனே சட்டத்தால் அழித்துவிட முடியாது. குறைவிருத்தி
சமூகங்களின் புரட்சி இந்தக் காரணங்களால் பல சவால்களை எதிர்நோக்குகிறது. இவற்றில்
சில தோல்வி கண்டுள்ளன.
சமச்சீரற்றதுமாய்,
குறைவிருத்தி மிகுந்ததுமாய், இருக்கும் தமிழ் ஈழப் பொருளாதாரத்தின்
புரட்சிககரமாற்றம் பல்வேறு உற்பத்தி உறவுகள் கொண்ட ஒரு நிலைக்கே உடனடியாக
எடுத்துச் செல்லும். இந்த மக்கள் ஜனநாயக சட்டத்தில் சில துறைகளில் தனியார் சிறு
உற்பத்தியும் வேறு சிலவற்றில் தனியார்-அரசு இணைந்த உற்பத்தியும் முக்கியத்துவம்
பெறலாம். அரசுடமையும் கூட்டுடைமையும் சில துறைகளில் முக்கியத்துவம் பெறும்.
இவற்றின் தேர்வு பல அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப,
இயற்கைக்காரணங்களால் நிர்ணயிக்கப்படும்.
இங்கு
முக்கியமானது என்னவெனில், இவற்றையெலாம் சோஷலிச ஆரம்ப நிலைக்கு ஏற்றவகையில்
நெறிப்படுத்தி வழிநடத்தும் ஸ்ததாபன ரீதியான வழிமுறைகளாகும். இங்கேதான் சரியான
அரசியல் மேலாதிக்கம் எப்போதும் வேண்டும். இதுவே சோஷலிச அரசியலின், கல்வியின், கலாச்சாரப்புரட்சியின் சவாலாகும். இதைச்சாதிக்கப் பரந்த, நீண்ட பார்வை கொண்ட புரட்சிகர அரசு வேண்டும். இதனால்தான் சோஷலிச புரட்சி ஒரு
தொடர் புரட்சியாக நிரந்தரமாக இயங்கவேண்டும். மார்க்ஸ் புரட்சியின்
நிரந்தரம்பற்றிக்கூறிய கருத்தும் லெனினின் தொடர்புரட்சிக் கோட்பாடும் மாஓவின்
தொடர்ச்சியான புரட்சிக் கோட்பாடும் இந்தப் பார்வையிலேயே நமது நிலைமைகளுக்கு ஒப்பப்
பிரயோகிக்கப்படவேண்டும்.
ஈழவிடுதலைப்
போராட்டத்தின் கட்டங்களை NLFT
தற்காப்பு, தாக்குதல், உள்நாட்டு யுத்தம் என மூன்றாக பிரித்துள்ளது. உள்நாட்டுயுத்தம் எனும்
கட்டத்திற்கான தயாரிப்புகள் மக்களின் அத்தியாவிசியத் தேவைகள் சம்பந்தப்பட்ட ஒரு
பொருளாதார சுயசார்புத்திட்டத்தையும் கொண்டிருக்க வேண்டும். வேறுபல நாடுகளின்
உள்நாட்டு யுத்த அனுபவங்களில் இருந்தும் குறிப்பாக தோல்விகண்ட புரட்சிகளின்
அனுபவங்களில் இருந்தும், இன்று தமிழ் ஈழத்தில் ஏற்கனவே தலையெடுக்கும் சில
பிரச்சனைககளில் இருந்தும் நாம் சில பாடங்களை படிக்கத் தவறக்கூடாது.
உள்நாட்டு யுத்தம்
இடம்பெறும் போது பொது மக்களின் அன்றாட வாழ்வு முற்றாகச் சீர்குலைக்கப்படுகிறது.
அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப்
பெறுதல்-குறிப்பாக மிகவும் அடிப்படையான உணவு, உடை,
மருந்துகள் போன்றவை மிகவும் கடினமாகிறது. இந்த நிலையில்
சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் பல வடிவங்களைப் பெறுகின்றன.
உதாரணமாக பாசிசம் வெற்றி கொண்ட நிலைமைகளிலெல்லாம் (இங்கு இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளையும் சமீப காலத்தில் பல மூன்றாம் உலக நாடுகளையும்
மனதிற்கொள்ளலாம்) நடுத்தர சக்திகள் பாசிசத்தின் பக்கமே சென்றன. இந்த நடுத்தர
சக்திகளே பாசிசத்ததின் வெகுஜன அடிப்படையாகியது. அத்துடன் நம்பிக்கையிழந்த நிலையில்
கீழ்மட்ட வர்க்கத்தினர் நியதி வாதத்திற்குப் பலியானார்கள். சமூக சக்திகளின்
சமன்பாடு எதிர்ப் புரட்சிக்கு சாதகமாகியது. ஆரம்பகட்டத்தில் நம்பிக்கையுடன்
முன்னேறிய புரட்சி, எதிர்ப்புரட்சியினால் தோற்கடிக்கப்பட்டது. எனவே உள்நாட்டு
யுத்தத்தின் விளைவு எப்படி அமையுமென்பதை ஆரம்ப நிலைகளை வைத்துச்சொல்வது சுலபமில்லை, போதியளவு அரசியல் உணர்வும், ஸ்தாபனமயமாக்கலும் அடிப்படைத் தேவைகளின் ஆகக்
குறைந்தளவு பூர்த்தியும் இல்லாத நிலையில், பரந்துபட்ட சமூகப்பிரிவுகள் குறிப்பாக
நடுத்தரவர்க்கத்தினர் சிறு உற்பத்தியாளர்கள் தீவிரவாதத்தாலும், மக்களிடமிருந்து பிரிந்து செயற்படும் இராணுவவாதப் போக்குகளினாலும், எதிர்ப்
புரட்சியின் பக்கம், பாசிசத்தின் பக்கம் போய்விடும் அபாயம் எப்போதும் உண்டு.
வரலாறு மீண்டமொருதடவை புரட்சிக்கு அதேசந்தர்ப்பத்தைக் கொடுப்பதில்லை என்பது
பொதுவிதி. உள்நாட்டு யுத்தம் விடுதலைக்கு வழிவகுக்குமா
அல்லது நீண்டகால பாசிசத்தின் ஆரம்ப நாடகமா என்பதை அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக சக்திகளின்
பலமும் பலவீனமும் தான் நிர்ணயிக்கும். புரட்சி வாதிகளுக்குக் கனவுகள் வேண்டும்
ஆனால் அவர்கள் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடாது.
தமிழீழ மக்கள்
ஏற்கனவே உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்ப நிலைகளின் தாக்கங்களை அனுபவிக்கத்
தொடங்கியுள்ளனர். ஆனால் இராணுவ நடைவடிக்கைகளில் தீவரமாக செயற்படத்தொடங்கியுள்ள
விடுதலை இயக்கங்கள், இந்த நிலைமைகளின் அதிபாதகமான தாக்கங்களிலிருந்து மக்களைப்
பாதுகாக்கக்கூடிய வேலைத்திட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. தெற்கிலிருந்து
சிங்கள இனவாத அரசின் ஸ்தாபனங்களுக்கூடாகவும் தனியார் துறைக்கூடகவும் வரவேண்டிய
அத்தியாவசிய நுகர் போருட்களின் போதாமை நிரந்தர பிரச்சனையாகிவிட்டது. வெளியே
இருந்துவரும் காசோலைகளைப் பணமாக்க முடியாத நிலைமை. இந்நிலை நமது பொருளாதாரத்தின்
சுயசார்பற்ற தன்மையையும்,
அடிப்படைப் பலவீனங்களையும் வெளிப்படுத்துவது மட்டுமன்றி
இதற்கு மாற்றுவழியை நாம் இயக்க ரீதியில் காணாத பட்சத்தில் இதுவே நமது மக்களின்
திட்டத்தையும் ஆர்வத்தையும் உடைக்கவல்ல ஆயுதமாக எதிரியினால் பயன்படுத்தப்படும்.
மாற்றுவழி இல்லாத பட்சத்தில் மக்களின் நம்பிக்கை படிப்படியாக மழுங்கி
மறைந்துவிடும் ஆபத்து உண்டு, இது ஒரு கசப்பான ஆனால் மறுக்கமுடியாத உண்மை.
உள்நாட்டு
யுத்தத்தை விடுதலைப்புரட்சியின் வெற்றிக்கு இட்டுச் செல்ல சிறந்த இராணுவத்திட்டம்
மட்டும் போதாது ஒரு யுத்தகால சுயசார்புப் பொருளாதாரத் திட்டமும் வேண்டும்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்திசெய்யவல்ல வழிகள்பற்றி இயக்கங்கள்
சிந்தித்துச் செயலாற்றாத பட்சத்தில் தமிழ் சமூகத்தின் குட்டிமுதலாளித்துவ
அம்சங்கள் மேலோங்கி விடுதலை போராட்டத்திற்கு உள்ளார்ந்த எதிர்ப்பு சக்திகள்
வளரக்கூடிய ஆபத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆகக்குறைந்த பட்சம் உணவு
உற்பத்தி பங்கீடு பற்றிய ஒரு யுத்தகால சுயசார்புத்திட்டம் உடனடியாக வகுக்கப்பட்டு
அமுலாக்கப்படுதல் அவசியம். விடுதலை இயக்கங்களின் தலைமையில் உணவு அடிப்படை பரந்த
அளவில் விஸ்த்திரமாக்கப்பட்டால் விடுதலைப் போரின் பரந்த வெகுஜன அடிப்படையை எதிரி
உருக்குலைப்பது கஷ்டம். ஆகவே இராணுவத்திட்டம, யுத்தகால பொருளாதார
சுயசார்புத்திட்டம், வெகுஜன அணிதிரட்டலுக்கான புரட்சிககரக் கலாச்சாரத்திட்டம் இவை
மூன்றையும் ஒன்றிணைத்து தன்கட்டுப்பாட்டில் வழிநடத்தவல்ல அரசியல்தான் விடுதலை
அரசியலாகும். தெளிவான அரசியலுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட இத்தகைய ஒருங்கிணைந்த
பன்முக ரீதியான புரட்சிகரத் திட்டம் வெகுஜனங்களின் பங்குபற்றலை பல மட்டங்களிலும்
அவசியப்படுத்தும். உதாரணமாக சிறு உற்பத்தியாளர்களான நமது விவசாயி களையும், மீனவர்களையும் புரட்சிகர யுத்தகால சுயசார்பு உணவு உற்பத்தித் திட்டத்திற்கு
அணிதிரட்டுவது பெரும் அரசியல் வேலையாகும். இது உற்பத்தியின் சமூகத்தன்மைகளைப்
படிப்படியாக மாற்றும் வேலையை மக்களின் பங்குபற்ற லுடன் சாத்வீகமாக செய்யும்
வாய்ப்பினையும் தருகிறது. இதற்கு உடனடி உந்துகோலாக இருப்பது யுத்த காலத்தில்
மக்களின் அடிப்படைத் தேவைகளாகும்.
இந்த நோக்கில்
நாம் செயல்ப்படுவோமாயின் எதிரி விடுதலைப் போராட்டத்தைச்
சீர்குலைக்கப்பயன்படுத்தும் ஆயுதத்தை நாம் அவனைத் தோற்கடிக்கும் ஆயுதமாக
மாற்றமுடியும். அடக்குமுறை, விடுதலை எனும் முரண்பாட்டில் விடுதலை, அதாவது மக்கள்,
வெற்றிபெற இத்தகைய தேவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும். அரச
பயங்கரவாதம் பொருளாதாரச் சீர்குலைவு போன்றவை மக்களின் கணிசமான பிரிவினரைப்
புரட்சிகரத் திட்டங்களுக்கு வென்றெடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இன்று கொடுக்கின்றன.
இதை இப்போது கைப்பற்றாவிடில் மக்களின் அகநிலை எப்படி மாறும் என்பதைக்கூறமுடியாது
இதற்கு பிரதேச ரீதியான கிராமரீதியான ஸ்தாபனங்களும் நடைமுறைகளுக்கேற்ற வேலைத் திட்டகளும்
வேண்டும். இது நமது விடுதலை இயக்கங்களின் கவனத்தை மிகவும் ஆழமாக ஈர்க்க வேண்டும்.