Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Thursday, 27 December 2018

மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள் தொடர்-2



பூரண மதுஒழிப்பும், அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும்.

          இந்தியளவிலான பிரதான இரு முதலாளித்துவ தேசியக் கட்சிகளும், பூரணமது ஒழிப்பு சாத்தியமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்திவிட்டன. ஆனால் அவர்களின் மாநிலக் கிழைகளும், ஆளும் கட்சி தவிர்ந்த அனைத்து பிற மாநில முதலாளித்துவக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளாக இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நடுத்தரவர்க்கக் கட்சிகளும் மதுஒழிப்புப்பற்றி அதிகம் முழங்கிவருகின்றன. கட்சிகளின் தலைவர்களுக்கும் அதன் நெருக்கமான தொண்டர்களுக்கும், கட்சிகளின் சிந்தனைப் பட்டறைகளுக்கும் தெரியும், இது நடமுறைச் சாத்தியம் அற்றதென்று. தாம் நன்றாக நடிக்கின்றோம் என்பதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் நடித்தேயாக வேண்டும் என்பது அவசிய மானதாய் உள்ளது. இந்த நடிப்பும், ஆவேசப் பாவனையும் வெறுமனே வாக்குத் தேடுவதற்கானதல்ல. நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள சின்னக் கட்சிகளின் குறிக்கோள் இவ்விதமானதாக இருக்கலாம், இதில் அவர்கள் சிற்சில வெற்றிகளைப் பெறவும் கூடும். ஆனால் பெரிய கட்சிகளின் குறிக்கோள் வெறுமனே வாக்குச்சீட்டுகள் அல்ல. மதுவின் அரக்கத்தனத்துக்கு எதிரான மக்களின் இயல்பான, கபடத்தனமற்ற கோபத்துடனும், மது பயன்பாட்டுக்கும் வினியோகத்துக்கும் எதிரான அவர்களது வேலைத் திட்டங்களுடனும் ஒத்தோடுவதுபோல் பாசாங்கு பண்ணி இவற்றிற்கு எதிரான மக்களின் போராட்டங்களை நீத்துப் போகச்செவது, முடியாத பட்சத்தில் அவற்றை திசைதிருப்புவது ஆகியவைதான் இவர்களின் குறிக்கோளாகும்.
             ஏனெனில், பூரண மதுவிலக்கு, மதுவிலக்கு, அரைகுறை மது ஒழிப்பு, படிப்படியான மதுஒழிப்பு ஆகிய இவற்றில் எதையுமே சாத்தியமற்றதாக் குவதற்கான காரணிகளில் இக்கட்சிகளும் ஒன்றாகும். நீண்டு நின்று பிடித்துச் செயல்படும் காரணி இவ் அரசியல் கட்சிகளல்ல. இதற்கான வேறோர் அடிப்படைக் காரணியுண்டு. அவ் அடிப்படைக் காரணி  இவர்களின் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இவர்கள் நிஜமாகவே மது ஒழிப்பை விரும்பினாலுங்கூட அது சாத்தியமில்லை. சந்தையில் போதைப் பொருட்களுக் கான தேவை இல்லாது போகும்வரை போதைப் பொருட்களும் இருக்கும். தேவைபெருகப் பெருக போதைப்பொருடகளின் உற்பத்தி விற்பனவு ஆகியனவும் பெருகும். தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாயென்பது போதைப் பொருட்களுக்கும் பொருந்தும்.(necessity is the mother of invention). இக்கூற்றுக்கு ஆதரவாக மூன்று முக்கிய எடுத்துக் காட்டுகளை பார்ப்போம்.

          முதலாவது எடுத்துக் காட்டு:- சீனக் கம்யூனிட் கட்சி போதைப் பொருட் பாவனை யைத் தடுப்பதில் முழு மனதுடன் மிகக் கண்டிப்பாகவே நடந்து கொள்கிறது. அந்நாட்டில் போதைப்பொருள் உற்பத்தியும் விநியோகமும் தடைசெய்யப் பட்டுள்ளன. இருந்தும் இன்று சீனாவில் போதைப்பொருள் பயன்பாடு மிகத்துரிதமாக வளரத்தொடங்கியுள்ளது. ------------- நடந்த அபினி யுத்தத்தை சீனர்கள் மீண்டும் நினைவுகூறத் தொடங்கியுள்ளனர். சீனாவில் மீண்டும் ஒரு அபினியுத்தம் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. போதைப் பொருள் தேவைக்கான ஒரு சந்தையாக சீனா மாறியது எவ்விதம்? அதற்குத் துணைபுரிந்த அக, புறக் காரணிகள் என்ன?
          எடுத்துக்காட்டு 2:-சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸக் கொள்கையை கைவிடுவதற்காக நடத்திய திறந்த கொள்கை இயக்கத்தின் போது வொட்கா(ருஷ்ய மது) பயன்பாட்டை அதிகரிப்போம் எனக் கூறவில்லை. டாஸ்மார்க் கடைகள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், சோவியத் யூனியன் சிதைய முன்னரேயே ருஷ்யர்கள் வொட்கா விற்கு அடிமையாகிவிட்டார்கள். உலகின் முன்னணிக் குடிகார நாடுகளில் ருஷ்யாவும் ஒன்றாகி இருந்தது.
        எடுத்துக்காட்டு 3:- ஐக்கிய அமெரிக்க குடியரசில் மதுபானத்துக்கு எந்தத் தடையும் இல்லை. போதை ஏற்படுத்தும் தன்மை மது பானத்துக்கும் உண்டு. ஆனால் அப்போதையால் திருப்திப்படாத அமெரிக்கமக்கள் நவீன போதைப்பொருட்களுக்கான மிகப்பெரும் சந்தையாக மாறினார்கள். ஆனால் அமெரிக்க அரசு போதைப்பொருள் உற்பத் தியையும் விநியோகத்தையும் தடைசெய்தே உள்ளது. துப்பாக்கியைக் கூடத் தடைசெய்யாத அமெரிக்க அரசு போதைபொருட்களை தடைசெய்துள்ளது. அயல் நாடுகளில் இருந்தே போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகின்றன. ஆனால் எந்த அயல் நாடும் தமது நாடுகளில் போதைப்பொருள் உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் எந்தச் சட்ட அங்கிகாரமும் வளங்கவில்லை. அமெரிக்காவும், அதன அயல்நாடுகளும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கமுடியவில்லை. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாடற்ற ஒரு அரசாகவே செயல் படுகிறார்கள். நவீன கருவிகளைக் கொண்ட தரைப்படையும் கடற்படையும் அவர்களிடம் உண்டு. போதைப் பொருள் உற்பத்தியிலும் விற்பனவிலும் கிடைக்கும் இலாபம் கொட்டிக் குவிகிறது.
           மது உட்பட போதைப் பொருள் பாவனைக்கான நீடித்து நின்றுபிடித்திச் செயற் படும் அடிப்படைக் காரணி அந்நாட்டின் அரசியல் கட்சிகளல்ல. இக்காரணி கட்சிகளின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. சந்தைத் தேவையை உருவாக்குவது இவர்களல்ல. அவ்விதமானால் அது எது என்பது பற்றிய கருத்தைக் கூறுவது இக்கட்டுரையின் இவ்விடக் குறிக் கோளல்ல. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மது ஒழிப்பைச் சாத்திய மற்றதாக்கும், அதாவது மதுவுக்கான சந்தயைப் பேணிப்பாதுகாக்கும் காரணிகளில் அரசியல் கட்சிகளும் அடங்குவர் என்பதை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
தொடரும்.     
                                                                               
அ.கௌரிகாந்தன்: 19/08/2015 திங்கள்

மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள். தொடர்-1



    மது ஒழிக!, மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கு எனக் கூட்டத்தோடு கூட்டமாக நின்று முழங்குவதற்குப் பதிலாக, மதுவின் கோரத்தாண்டவம் பற்றி பேச முற்படுவது ஏன்? பூரண மது ஒழிப்பின் ஓங்காரத்தை பலவீனப் படுத்தத் தானே? அதன் வீரியத்தைக் குறைப்பதற்காகத்தானே? மது ஒழிப் பாளர்களிடையே குளப்பத்தை உருவாக்குவதற்காகத்தானே? எனப் பல கேள்விகள் எழுவது இயல்பு. ஆம், அப்படித்தான் என்று எடுத்துக் கொண் டால் அதில் ஒன்றும் தப்பில்லை.
       ஏனெனில், மது ஒழிப்பு என்பது வெறுமனே ஒரு திட்டமல்ல; அது ஒரு தொடர் சமூக-செயற்பாடாகும் (Social-phenomenon). ஆனால், டாஸ்மார்க் கடைகளை மூடல்/ சீர்திருத்தல்/ ஒழுங்குமுறைப்படுத்துதல்/ அமைவிட ங்களை நெறிப்படுத்தல் ஆகியன சமூக-செயற்பாடுகளல்ல, மாறாக அவை வெறுமனே வேலைத்திட்டங்கள் மாத்திரமேயாகும். நிச்சயமாக இவை எளிமையான வேலைத்திட்டங்களல்ல பல தடைகளைக் கொண்ட சிக்க லான(complicated but not complex) வேலைத்திட்டங்களாகும்.
    இருந்தும் இவை நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களல்ல. அரசும், அரசாங்கமும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், மக்களும் உறுதியாக இருந்தால் இவற்றை நடைமுறைப்படுத்துவது தென்பது முடியாத காரியமல்ல. மிக எழிமையான திட்டங்களான, மணல் அள்ளுவதை நெறிப்படுத்தல், ஏழைகளுக்கான பங்கீட்டுப் பொருட்கள் கள்ளச்சந்தைக்கு செல்வதைத் தடுத்தல், கல்விமான்களே காமுகர்களாக இருப்பதைத் தடுத்தல், அரசியல் வாதிகளில் இருந்து அதிகாரிகள்வரை ஊளல் பேர்வளிகளாக இருத்தல், மோட்டார் சயிக்கிள் தலைக்கவசம் அணிதல் ஆகியவற்றையே நிறை வேற்றுவதில் தள்ளாடும் தமிழகம், டாஸ்மாக்கை நெறிமுறைப் படுத்தும் திட்டத்தை முறையாக நிறைவேற்றுமா என்பது சந்தேகந்தான். நம்புவோம், அதற்காகப் போராடுவோம்.
       ஆனால், மது ஒழிப்பு அல்லது பூரண மதுவிலக்கு என்பதோ ஒரு சமூக-செயற்பாடாகும். அதுவும் இது ஒரு எழிமையான சமூக செயற்பாடல்ல (simple Social-phenomenon).மாறாக அது அதிக தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாடாகும் (Much more complex Social-phenomenon). அது மட்டுமல்ல இது தனித்த ஒரு தொகுப்புத்தன்மை மிகு சமூக செயற்பாடல்ல, பல தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்குகளின் கூட்டுச்சேர்க்கையாகும்(compound).
        திட்டத்திற்கும், சமூக தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற் போக்குக்கும் இடையேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எடுத்துக்காட்டு; சுதந்திரப்போராட்டத்தின் போது நடைபெற்ற “உப்பு அள்ளுதல்”,“கதர் ஆடைகள் தரித்தல்”, அந்நிய ஆடைகளைக் கொளுத் துதல் ஆகியனவை வேலைத்திட்டங்களாகும். இவை எழிமையான வையல்ல(simple). பல தடைகளைக் கொண்ட சிக்கலான (complicated but not complex) வேலைத்திட்டங்களாகும். ஆனால், சுதந்திரப் போராட்டம் அவ்விதமானதல்ல.   அது தொகுப்புத்தன்மை மிகு சமூக  செயற்பாடாகும்.
        திட்டங்களைப் பற்றிய புரிதல்களை மட்டும் வைத்துக்கொண்டு காந்தி, நேரு, சவாக்கர், அம்பேத்கர், ஜின்னா, சுபாஷ் சந்திரபோஷ், பகவத் சிங், இடதுசாரிகள் ஆகிய வெவ்வேறு முனைகளைப் பற்றியும் அம்முனைகளுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியாது. சுதந்திரப் போராட்டம் எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாடைப் புரிந்து கொண்டால்தான் இவை முடியும்.
           மது உற்பத்தியையும் விநியோகத்தையும் மேலும் மேம்படுத் துவதற்கான வேலைத்திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு மதுஒழிப்பு, பூரண மதுஒழிப்புப் பற்றிப் பேசுபவர்களை வஞ்சகர் என்று அழைக்காமல் வேறு எவ்விதம் அழைப்பது. இவ் வஞ்கர்கள் பல அணிகளாகப் பிரிந்துள் ளார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வேலைத்திட்டம் உண்டு. அவை ஒன்றுடன் ஒன்று ஒத்துவராதவையாகவும் இருக்கலாம், அல்லது அத்திட்டங்கள் மூலம் கிடைக்கும் பண லாபத்தையும் பிற சமூக இலாபங் களையும், எனைய அணிகளுடன் பங்கிட்டுக் கொள்வதை இவர்கள் விரும்பாமலும் இருக்கலாம். குறைந்தது டாஸ்மாக்கை கண்டிப்பதில் கூட பேரளவுக்குக்கூட ஒன்றாகச் சேரமுடியாதுள்ளார்கள். இவர்களுடன் இணைந்து கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து மதுஒழிப்புக் கோஷமிட சமூக நேயமுள்ள எவனும் சம்மதிக்கமாட்டான்.
         அடுத்த பக்கத்தில், மது ஒழிப்பை நேர்மையாகவும் , உண்மையாகவும் விரும்பி டாஸ்மார்க கடைஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோர், மற்றோர் தனி அணியாகத் திரண்டு வருகிறார்கள். இவர்கள் போலிகளும் அல்ல, வஞ்சகர்களும் அல்ல. இவர்கள் சமூகத்தை உண்மையாக நேசிப்பாளர்களாகும். ஆனால், டாஸ்மாக கடையகற்றல் மது ஒழிப்பு எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாட்டின் வெற்றியாக மாறும் என இவர்கள் நம்புவது ஒரு வெற்றுக் கற்பனை யேயாகும். இயல்பான கோபமும், அதை அடியொற்றி எழும் இயல்பான எழுச்சிகளும் நிலவும் சமநிலையைக் குலைக்க உதவக்கூடும், ஆனால் கீழ்வரும் நிபந்தனை நிறைவேறாவிட்டால், இவ் எழுச்சிகள் புதிய சமநிலையை உருவாக்க உதவமாட்டாது. அழிவு சாத்தியமாகலாம் ஆனால் ஆக்கம் சாத்தியமல்ல. தொகுப்புத்தன்மை மிகு புதிய சமூக சமூக செயற்பாடுகளை உருவாக்கவும், பழையன்வற்றை அழிக்கவும் வல்லமை மிக்க சமூக-அரசியல் அமைப்புகள் உருவாகவேண்டும் என்பதே அவ் நிபந்தனையாகும். இது உடனடி சாத்தியமில்லை தொடர் எழுச்சிகளினூ டாகவே சாத்தியமாகும்.
         ஆகவே மது ஒழிப்பு எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூக சமூக செயற்பாட்டை வெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவேண்டும். டாஸ்மாக் கடை எதிர்ப்பு அதற்கான வேலைத் திட்டங்களில் ஒன்றாகும். ஆனால் அது மட்டும் போதாது. இத்திட்டம் மது விநியோகத்தை நெறிப்படுத்துவதில் மட்டும் முடியக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக உண்டு. வேறு திட்டங்களும் வேண்டும்.
       அதற்கு முன்னர் மது பற்றிய மனிதர்களின் புரிதல் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்குவோம். மது எமக்குப் புறத்தேயிருந்து வந்த ஒரு இயற்கை அனர்த்தமல்ல. அது நாம் எமக்காக உருவாக்கிக் கொண்டது. சுமார் 5000வருடங்களுக்கு முன்னரே நாம் அதை உருவாக்கிவிட்டோம். 5000வருடங்களாக நாம் அதைப் பயன்படுத்தியும் வருகிறோம். சிற்சில சந்தர்ப்பங்களில் நாம் அதை தவறுதலாகப் பயன் படுத்தியும் உள்ளோம். சிற்சில சந்தர்ப்பங்களில் மாத்திரந்தான் என்ப தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பிராமணியம் இந்திய சமூகத்தை தனது ஆதிக்கத்துக்கு கொணர்வதற்க்கு முற்பட்ட காலத்தில் இத் தவறு நடந்துள்ளது. ஆனால் இந்திய சமூகம் அத்தவறுகளைத் திருத்திக் கொண்டது, மதுவுக்கு அடிமையாகும் நிலையில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டது. மனிதர்கள் மீண்டும் மதுவை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தார்கள். இந்திய மக்கள், பௌத்த, ஜைன சமயங்களுக்கு காலாதி காலமும் நன்றி சொல்லக் கடமைப்பட்ட வர்களாகும். இதனால், பௌத்த இந்தியா மிகப்பெரும் வளர்திசைப் பண்பாட்டையும், பாரிய அறிவியல் தத்துவங்களையும் படைத்தது.  பௌத்தம் வீழ்ந்ததன் பின்னர் முழு நிறைவான பிராமணிய இந்தியா தோற்றம் பெற்றது. சதுர் வர்ண சாதியம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் கடைசிப் படிகளில் அமுக்கிவைக்கப்பட்டிருந்த, கீழ்க்குடி இந்தியர் மதுவுக்கு அடிமையாக்கப் பட்டார்கள். மேட்டுக்குடி இந்தியா இது விடயத்தில் கணக்காக நடந்து கொண்டது. 
     அதைத் தொடர்ந்து வந்த இஸ்லாமிய இந்தியா கீழ்க்குடியின் கணிசமான பகுதியை மதுவின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டது. மது மீழவும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால், இந்தியாவின் சதுர்வர்ண சாதியக் கட்டுமானத்தில் பாரிய வளர்திசை மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கடுத்ததாக வந்த பிரித்தானிய-இந்தியா மதுவில் மனிதர்களை மூழ்கி எடுத்தது. மனிதன் மதுவுக்கு அடிமையானான். மதுப்பழக்கம் மதிப்பூட்டப்பட்டது, அது உயர்ந்த தோர் நாகரிகமாக அறிமுகமானது. மனிதர்கள் மதுவுக்கு அடிமையா னார்கள். அதை நாகரிகமாகவும் கருதினார்கள். சுதந்திர இந்தியாவில் மனிதர்கள் மதுவிலிருந்து மீட்கப்பட்டார்கள். மீண்டும் மது மனிதர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொணரப்பட்டது. இன்று நாம் வாழும் இந்தியா காப்ரேட் இந்தியாவாகும். இவ்விந்தியா மனிதர்களை மதுவுக்கு அடைமைப்படுத்துவதில் மிகவும் வினைத்திறனுடன் செயல்பட்டு வருகின்றது. எந்த மனிதர்கள் காப்ரேட் இந்தியாவின் சமூக சமநிலை யைக் குலைக்கக் கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் மதுவால் அவர்கள் வளைத்துப் போடப்படுகிறார்கள். பிராமணிய இந்தியாவின் அனுபவங்கள் மதிப்பூட்டப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்விதம் வளைத்துப் போடுவதற்கான வலையின் தமிழ்நாட்டு வடிவங்களில் ஒன்றுதான் டாஸ்மார்க் கடை வலைப்பின்னலாகும். வேறு வடிவங்களும் தமிழ் நாட்டில் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

   இதனால்தான் மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள் என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.
தொடரும்……….




Wednesday, 26 December 2018

துறவறத்தானுக்குரிய இலக்கணங்கள்


துறவறத்தானுக்குரிய இலக்கணங்கள்

                   பௌத்த மரபின்படி, துறவி என்பவன் சமுகத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன். இன்றைய சொற்பயன்பாட்டில் இலட்சியவாதியாகும். புலவன் என்பவன் சமூகப் பிரச்சனைகளை இலக்கிய நடையில் கூறும் புத்திஜீவி. இவ் இருவரினது குணாம்சங்களும் எவ்விதம் இருக்கவேண்டுமென பௌத்த-சமண வழித் தோன்றலான நாலடியார் கூறும் கருத்துக்கள் என்ன என்பதை பார்ப்போம்.
அதற்கான அவசியம் என்ன?
                1950களில் இருந்து 2009வரை இலங்கை அரசியல் தொடர்ச்சியான பல போராட்டங்கள் நிறைந்த நாடாகவே இருந்தது.
             மலையகத் தொழிலாளர்கள் சிங்களத்தொழிலாளர்ள் ஆகியோர் தமது தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், தொழில் முறைமைகளுக்காவும், ஊதிய நிர்ணயங் களுக்காகவும் கூட்டாகவும் தனித்தனியாகவும் நடத்திய போராட்டங்கள். 1960 களின் பின் தொழிற்சங்கவாதப் போராட்டங்களாக குறுகிவிடுகின்றன.
           விவசாயப் போராட்டங்கள் என பெரியளவில் நடைபெறாவிட்டாலும் புரட்சிகர சிந்தனையுடன் அவர்களை அணிதிரட்டுவதற்கான முயற்சிகள் சிங்கள தமிழ் விவசாயிகள் இருசாராரிடையேயும் நடந்து கொண்டேயிருந்தன.
          தமிழரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் தலைமையில் மாணவர்கள் அணிதிரண்டும், முதலாளித்துன ஜனநாயகப் போராட்டங் களுக்காக அணிதிரண்டும் வந்தனர்.
        பிரித்தானிய காலனியல் ஆதரவுக் கட்சிகளான யு.என்.பி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் ஆகியன இணைந்தும் தனித்தனியாகவும் முதலாளித்துவ தேசிய இயக்கங் களை உருவாக்கி வேகமாக வளர்த்துவந்தன.
        சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சமத்துவத்துக்காக நடத்திய முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டங்கள். யாழ் குடாநாட்டில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
       1970களின் பின் தமிழ், சிங்கள, முஸ்லீம் இழைஞர்கள் தனித்தும் இணைந்தும் உருவாக்கிய இன-தேசிய இயக்கங்கள்.
            இவ்விதமாக 2009வரை இலங்கை அரசியல் களம் போராட்டங்களின் கொதிநிலைக் களமாக இருந்தது. அன்றில் இருந்து இன்றுவரை(2018) இலங்கை அரசியல் களம் போராட்டங்களின் உறங்குநிலைக் களமாகவே உள்ளது. உழைக்கும் வர்க்க இலட்சியம் என்ற நிலையில் இருந்து நோக்கினாலும், ஒடுக்கப்படும் இனவழி, சாதியவழி, பாலினவழி சமூகக் குழுமங்களின் சமத்துவத்திற்கான போராட்டம் எனும் நிலையில் இருந்து நோக்கினாலும், உறங்கு நிலையே பொதுவான போக்காக உள்ளது. முஸ்லீம்கள் விதிவிலக்கு, அவர்கள் தமது உறங்குனிலையில் இருந்து விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
       இலங்கையின் இந்த அறுபதுகால தொடர் போராட்டவரலாற்றில் ஈடுபட்ட பல இலட்சியவாதிகள் இன்னமும் உயிரோடும் இலட்சியத்தோடும் உள்ளார்கள். இழைஞர்கள்-முதியோர்கள்; ஆண்கள்-பெண்கள், தமிழர்-சிங்களவர், ஊனமுற்றோர்கள்-ஊனமுறாதோர்கள் ஆகிய பலரையும் உள்ளார்கள். புதிய இலட்சியவாதிகள் உருவாக வேண்டியது அவசியமாய் உள்ளது. ஆனால், இலங்கை சமூகம் அதற்கான தயார் நிலையை இன்னமும் எட்டவில்லை. விரைவில் எட்டுமா என்பதையிட்டு எதுவும் சொல்லமுடியாத நிலை. எவ்விதமிருந்தாலும் இலட்சிய வாதி களை சமூகம் தமது சொத்தாக மதிக்கவேண்டும், அவர்களும் அடுத்தகட்ட நகர்வுக்குரிய இலட்சிய வாதிகளாக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது புதியவர்களை உருவாக்க வேண்டும்.

அதை உணர்த்தவே இப்பதிவு.

எடுத்துக்கொண்ட நூல்:- நாலடியார், கு.மதுரை முதலியார் தெழிவுரையுடன்.

பக்-10-4 அறம் செய்
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின வொன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
       முதலியார் உரை:- உயிர் உட்போடு கூடி வாழ்கின்ற நாள்கள் செல்கின்றன, செல்கின்றன; யமன் கோபித்து விரைந்து வருகிறான், வருகிறான்; ஆதலால், நிலைபெற்றன நிலை பெற்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற செல்வப் பொருள்கள் எல்லாம் நிலைபெறா என்ற உண்மையை அறிந்து, உம்மால் செய்வதற்குக் கூடிய அறங்களையெல்லாம் செய்ய நினைப்பீராயின், விரைந்து செய்க.
யக்ஞத்தின் விளக்கம்:-
பக்-11-6 மரணத்தை வெற்றிகொள்ள, இசைபடவாழ் பகிர்ந்துண்டு மகிழ்!
இழைத்தநாள் எல்லை யிகவா பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துயரந்தார் ஈங்கில்லை-ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர வழங்குமின் நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.
முதலியார் உரை:- மிகப் பெருஞ்செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாட்கள் அவ்வளவில் தவறிப்போய்த் தம் அளவைக்கடவா. யமனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர் பிழைத்திருப்பவர் இவ்வுலகத்தில் இல்லை. நாளைக்கே இறந்தவர்க்குரிய சாப்பறை தழீஇம் தழீஇம்என்னும் ஓசை உண்டாகும்படி அடிக்கப்படும். ஆதலால், விரைவாக அறம் செய்யுங்கள்.
பக்-12-9 இசைபடவாழ் பகிர்ந்துண்டு மகிழ்!
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும்.
முதலியார் உரை:- ஒருவன் நல்ல உணவுகளை உண்ணாமலும், மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், பெறுகின்ற புகழைச் செய்து கொள்ளாமலும், பெறலரிய உறவினரது வறுமைத் துன்பத்தை நீக்காமலும், கைம்மாறு வேண்டாமலே இரப்பவர்க்குக் கொடாமலும், பொருளைக் காத்திருப்பானாயின், ஐயோ! அவன் அப்பொருளை இழந்தான் என்று யாராலும் எண்ணப்படுவான்.
யக்ஞத்தின் விளக்கம்:- இசைபட வாழவும், பகிர்ந்துண்டு மகிழவும் தயாரில்லாதவனிடம் செல்வம் இருந்தென்ன பயன்.

பக்-22-40 செய்யும் தொழிலல்ல உயர்வுதாழ்வு, மனத்தின் வளத்தில்தான் உயர்வுதாழ்வு.
மான அருங்கலம் நீக்கி யிரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
முதலியார் உரை:- இழிவான தொழில்களினாலும் உணவு முதலியவற்றை கொடுத்து வளர்த்த இடத்தும், மனமாகிய பெறுதற்கரிய அணியைவிட்டு, இந்த உடம்பு வலிமையைப் பெற்றுப் பல்லாண்டு நிலைபெற்று நிற்குமானால், பிச்சையெடுத்தல் என்று சொல்லப்படும் இழிவைத் தரும் தொழிலினால் உயிர் வாழ்வேன்.
யக்ஞத்தின் விளக்கம்:-மனச்சாட்சியைக் கொன்று, பெரும்இழில்தொழில் செய்து பேர் வாழ்வு வாழ்வதைவிட, சாவைத்தடுக்க பிச்சை எனும் இழி தொழில் செய்வது மேல்.
பக்-21-37 உடல் செழுமையின் குறிக்கோள் மனச் செழுமையே
மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால்-தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது உம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
முதலியார் உரை:- மக்கட் பிறப்பினால் உண்டாதற்குரிய சிறந்த பயன்களும், ஆராயும் இடத்து, மிகவும் அநேகம் ஆதலினால், ஏழு தாதுக்களால் கூடிய உடலுக்கே ஒத்த நன்மைகளைச் செய்துகொண்டிராமல், அவ்வுடம்பைக் கொண்டு, மேல் உலகத்தில் இருந்து பேரின்பத்தை அனுபவிக்கும்படி, உயிர்க்குரிய நன்மையாகிய அறங்களைச் செய்ய வேண்டும்.
யக்ஞத்தின் விளக்கம்:-நாலடியாரும், திருவள்ளுவரும் பௌத்த, சமண சிந்தனையாளர் கள். இச்சிந்தனை மேலுலக நம்பிக்கியுள்ள பரமபௌதீகச் சிந்தனையாகும். ஆனால் இவர்களின் மேலுலகம் பிராமணிய, கிறிஸ்துவ மேலுலகங்களல்ல.
பக்-27-57 பின்னடைவுகள், தோல்விகள் ஏற்பட்டாலும் இலட்சியப் பயணம் தொடரட்டும்.
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாம்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோர நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
முதலியார் உரை:- முயன்று தாம் பூண்ட விரதங்கள் முழுவதும் கெடும்படி பொறுத் தற்கரிய துன்பங்கள் தம்மிடம் வந்து சேர்ந்தால், அத்துன்பங்களையெல்லாம் தள்ளி, அவ்விரதங்களை நிலை நிறுத்துகின்ற மனவலிமை உடையவரே, நல்ல துறவொழுக் கத்தை விடாமல் காக்கின்ற அழகிய தவமுடையார்.
பக்-51-131 அறிவுடன் கூடிய மனமே அழகானது.
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி யழகே யழக.
முதலியார் உரை:- மயிர் முடியின் அழகும், வளைவுள்ள ஆடையினது கரையின் அழகும் கலவைப் பூச்சின் அழகும், ஒருவனுக்கு அழகல்ல. மனத்தில் யாம் நற்குண முடையோம் என்று கருதுகின்ற கோணுதலில்லாத் தன்மையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு.
பக்-58-153 வறுமையிலும் சளையாமைதான் இலட்சியவாதம்.
நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார்-உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி யுளவரையால்
செய்வர் செயற்பா லவை.
முதலியார் உரை:- மேன்மக்கள் வறுமை அடைந்து, நரம்புகள் தோன்றும்படி இளைத் தாராயினும், தமது நல்லொழுக்க வரம்பைக் கடந்து, குற்றமான செயலை மேற்கொள்ளா மல், நமது அறிவையே கருவியாகக்கொண்டு, முயற்சியென்கிற கயிற்றினாலே மனத்தைக் கட்டி, பொருள் உள்ள அளவிற்கு ஏற்ப, செய்யத்தக்க நல்ல காரியங்களைச் செய்வர்.
பக்-63-169 தேடிக் கற்கா நாட்களுமில்லை, பகிர்ந்து மகிழா நாட்களுமில்லை என்று வாழ்பவனே இலட்சியவாதி
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்-ஒல்வ
கொடா அது ஒழிந்த பகலும்-உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
முதலியார் உரை:- படித்தற்குரிய நூல்களைப் படியாமல் கழிந்த நாட்களும், பெரியோர்களிடம் நுற்பொருள்களை அறியும் பொருட்டுப் போகாமல் கழிந்த நாட்களும், தம்மால் கொடுக்கக்கூடிய பொருட்களை இல்லையென்று தம்மிடம் வந்து கேட்பவர்களுக்குக் கொடாமல் கழிந்த நாட்களும், சொல்லுமிடத்து, நற்குண நற்செய்கையுடையாரிடத்து உண்டாகாவாம்.
பக்-70-192 தன் தகமையை தொடர்ந்து வளர்த்து வருபவனே இலட்சியவாதி.
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூ உம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே யொருவன்றான்
தாழ்வின்றித் தன்மைச் செயின்.
முதலியார் உரை:- துவளுகின்ற சிறு கொம்பாகி, வழியிலே நின்ற இளமரமும் உள் வயிரம் கொண்டவிடத்தே யானையைக் கட்டுவதற்கு ஆதாரமான தறியாகிவிடும். தான் தன்னை நின்ற நிலையிலிருந்தும் கீழ்ப்படுதல் இல்லாதபடி முயற்சியுடையானாகச் செய்து கொள்வானானால், அவனது வாழ்க்கையும் அப்படிப்பட்ட தன்மையையுடையதே.
பக்-72-198 வறுமைப் பிணியால் இறக்க நேர்ந்தாலும், தான் வாழ்ந்த பெருமைக்கு குந்தகம் தரும் பழிபாவங்களைச் செய்யாதவரே இலட்சியவாதி.
ஈனமாய் இல்லிருந்து இன்று விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ-யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்தான்
அரிமா மதுகை யவர்.
முதலியார் உரை:- யானையின் புள்ளிகளையுடைய முகத்தைப் புண் செய்ய வல்ல கூர்மையாகிய நகங்களையும், வலிமையுடைய கால்களையும் உடைய சிங்கத்தின் வலிமை போன்ற வலிமையுடையவர்கள், பொருள் இல்லாராகி, இல்வாழ்க்கையிலிருந்து உணவில்லாமல் இறக்கினும், பழி தம்மிடம் வருதற்குரிய சிறு முயற்சிகளைச் செய்வார்களோ?
பக்-74-205 அனைத்து உறவுகளையும் இழக்க நேர்ந்தாலும் தனது பாதையில் இருந்து விலகாதவனே இலட்சியவாதி.
இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால்-துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.
முதலியார் உரை:
      இத்தன்மையர், இவ்வளவினர், உறவினர், அயலார் என்று சொல்லுகின்ற சொல் சிறிதும் இல்லாதவராகிய தன்மையினால், சேர்ந்து துன்பத்தால் தளர்கின்ற மக்களின் வருத்தங்களை ஒழிப்பவர்களே, மேன்மக்களாகும் தன்மையுள்ளவர்.                                                                    
பக்-92-262 கீழோரின் செல்வம் நாடிச்செல்லான் இலட்சியவாதி.
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடையார் ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
முதலியார் உரை:- கைகளால் அள்ளியெடுத்துக் கொள்ளத்தக்கவை போன்ற சிறிய அரும்புகளையுடையனவாய் இருந்தாலும், அவை சூட்டிக்கொள்ளத்தக்க மலர் அல்லாமையால், உலகில் எவரும் கள்ளிச்செடியின்மேல் பூப்பறிப்பதற்குக் கையை நீட்ட மாட்டார்கள். அதுபோலவே செல்வத்தை மிகுதியாக உடையவர்களாய் இருந்தாலும், அறிவடையார் அச்செல்வத்தைப் பெறவேண்டி கீழ்மக்களை நெருங்கார்.
பக்-102-292  தன்வறுமைநிலை பகிர்வான் இலட்சியவாதி தன்னைப் புரிந்து கொண்டவனிடம் மாத்திரமே.
என்பாய்உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்-தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
முதலியார் உரை:- தமது மானத்தைத் தாமே காக்கும் இயல்புடையார், பொருள் இல்லாமை யால் உணவு கிடையாமல் தம்உடம்பு எலும்பு மாத்திரமாகிச் சிதைவதாய் இருந்தாலும், நற்குணமில்லாத செல்வரது பின்னேபோய், தமது வருத்தத்தைக் கூறுவார்களோ? தமது வருத்ததைத் தாம் சொல்லாமைக்கு முன்னே அறிந்து நீக்கவல்ல கூர்மையாகிய அறிவுடையவர்களுக்குத் தாம் அடைந்த துன்பத்தைக் கூறாதிருப்பாரா?
பக்-106-304 இல்லாமை எவ்வளவு வாட்டினாலும் அறிவிலார் பின்னே தலைகுனிந்து நிற்காதே.
திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று
எருத்திறைஞ்சி நில்லாதாம் மேல்.
முதலியார் உரை:- தன்னைத் திருமகள் கைவிட்டாலும், தெய்வம் கோபித்து வருத்தினாலும், ஊக்கம் கொண்டமனத்துடன் தம் மேன்மையை நினைத்தலே யல்லாமல், மேன்மைக் குணம் உடையவன், பொருளைச் சேர்த்துவைக்கும் அறிவிலார் பின்னே சென்று, தலைகுனிந்து நிற்க மாட்டான்.