சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்
: எம்
. கிரிஜா
)
மதச்சார்பின்மை என்பது பிற மதத்தின்பால் சகிப்புத்தன்மையுடன் இருப்பது
என்ற குறுகிய வரம்பிற்குட்பட்டே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்தியச் சூழலில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை, இத்தகைய சகிப்புத்தன்மை
என்பதனைத் தாண்டி மிகவும் பரந்துபட்டதொரு பொருளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது
என்ற கருத்தினை முன்வைத்து துவங்குகிறேன். எனினும், இன்று நமக்கு
கவலையளித்து வருகின்ற மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும்
சகிப்புத்தன்மை ஆகியன “இந்தியா குறித்த கருத்துருவம்” (Idea of India)
என்பதன் முக்கியமான அம்சங்களாகும். ஆங்கிலேயரின் அடிமைத் தளையிலிருந்து
விடுபட வேண்டுமென்பதற்காக மக்கள் போராடிய காலத்தில் இக்கருத்துருவம்
தோன்றியது. இந்தியா குறித்த கருத்துருவம் என்றால் என்ன? மிகுந்த சிக்கலான
இதனுடைய பன்முக பரிமாணம் குறித்து உணர்ந்திருந்தாலும், எளிதான
வார்த்தைகளில் சொல்வதானால், வேற்றுமைகளையும், பிரிவினைகளையும் தாண்டி
மக்கள் அனைவரின் நலன்களையும் உள்ளடக்குகிற ஒற்றுமையை நோக்கி இந்தியா
முன்னேறுவது என்ற எண்ணத்தையே இந்தியா குறித்த கருத்துருவம்
குறிப்பிடுகிறது.
உலகில் வேறு எந்த நாட்டோடும் ஒப்பிட இயலாதபடி இந்தியாவில் மிகப்
பெரியதொரு அளவில் மொழி, மதம், கலாச்சாரம், இனக்குழு உள்ளிட்ட பல்வேறு
வேறுபாடுகள் உள்ளன. அதிகாரபூர்வமாகவே இந்தியாவில் குறைந்தது
1618 மொழிகளும், 6400 சாதிகளும்
6 பெரும்பான்மை மதங்களும் (இவற்றில் நான்கு மதங்கள் இந்த மண்ணிலே தோன்றியவை), மனித இன ஆராய்ச்சியாளர்களின் வரையறையின்படி
6
இனக்குழுக்களும் இருக்கின்றன. இவையெல்லாம் ஒன்றிணைக்கப்பட்டுதான் அரசியல்
ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. மத மற்றும் கலாச்சாரம் சார்ந்த
29 முக்கிய விழாக்களை
இந்தியா கொண்டாடி வருகிறது என்பது இத்தகைய வேறுபாட்டின் ஓர் அளவீடாகும்.
அநேகமாக உலகில் உள்ள நாடுகளிலேயே மிக அதிகமான எண்ணிக்கையிலான மத
விழாக்களுக்கான விடுமுறை நாட்களை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது.
தன்னகத்தே உள்ள எண்ணற்ற வேறுபாடுகளை களைந்து இவ்வாறு இந்தியா
ஒன்றுபட்டதற்கு ஆங்கிலேயர்களே காரணம் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால்,
பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்து, மிகப் பெரிய
அளவில் மக்கள் மதரீதியாக நாடு விட்டு நாடு குடிபெயர்ந்திடச் செய்தது எது?
அது ஆங்கிலேயர்கள் செயல்படுத்திய தேசப்பிரிவினையின் விளைவு தான் என்பதனை
இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்திய துணைக்கண்டம் மட்டுமல்லாது, தங்களது
காலனியாதிக்கத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்ட பாலஸ்தீனம், சைப்ரஸ்,
ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றை தேசப் பிரிவினை வாயிலாக ஆங்கிலேய
ஏகாதிபத்தியம் சீரழித்தது. அத்தகைய நடவடிக்கைகள் போன்று பல இன்றும்
புரையோடிக் கொண்டிருக்கும் அவமானகரமான பாரம்பரியங்களைக் கொண்டது தானே
ஆங்கிலேய ஆதிக்கம்? தேசவிடுதலைக்கான இந்திய மக்களின் பரந்துபட்ட போராட்டமே,
இந்த வேறுபாட்டை களைந்தது. மேலும், 660க்கும் மேற்பட்ட நிலப்பிரபுத்துவ
சமஸ்தானங்களை நவீன இந்தியாவாக ஒன்றிணைத்து பரந்ததொரு இந்தியா குறித்த
எண்ணத்திற்கு வடிவம் கொடுத்தது. இந்தியா குறித்த கருத்துருவம் உருவாவதற்கான
நடைமுறையில் இடதுசாரியினர் மிக முக்கியமான பங்கினை ஆற்றினர். உண்மையில்,
விடுதலைக்கான நீண்ட போராட்டம் நடைபெற்ற காலத்தில் இடதுசாரியினரின்
தொலைநோக்குடனும் அர்ப்பணிப்புடனும் கூடிய பங்களிப்பைப் பார்க்கும் போது,
இன்றைய நிலைமைகளில் இந்தியா குறித்த கருத்துருவத்தினை நனவாக்குவதற்கு,
இடதுசாரியினரின் இத்தகைய பங்களிப்பு மையமாக இருக்கிறது.
நிலத்திற்கான போராட்டங்கள்
இந்தியா குறித்த கருத்துருவத்திற்கு மையமாக தற்போதும் நீடித்து வருகிற
மூன்று பிரச்சனைகளை மேற்கோள் காட்டி இதனை விளக்கிட விரும்புகிறேன். இந்திய
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்திற்கான போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளால்
கட்டவிழ்த்து விடப்பட்டன. கேரளாவில் புன்னப்புரா வயலார், வங்காளத்தில்
தெபாகா இயக்கம், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு இயக்கம், மகாராஷ்டிரத்தில்
ஓர்லி எழுச்சி மற்றும் ஆந்திராவில் தெலுங்கானா. இவற்றுள் தெலுங்கானாவில்
நடைபெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டமென்பது முக்கியமானதாகும். இப்போராட்டங்கள்
நிலச்சீர்திருத்தம் தொடர்பான பிரச்சனையை முன்னுக்கு கொண்டு வந்தன.
இப்போராட்டங்களையடுத்து ஜமீன்தாரி முறையும், பண்ணை முறையும் ஒழிக்கப்பட்டன.
இதன் காரணமாக இந்தியா குறித்த கருத்துருவத்தினை ஏற்படுத்தும்
திட்டத்தின்பால் பெருமளவிலான இந்திய விவசாயிகள் ஈர்க்கப்பட்டனர். உண்மையில்
சொல்வதானால், நிலப்பிரபுக்களிடம் அடிமைப்பட்டிருந்த கோடிக் கணக்கான மக்களை
விடுவிப்பதில் இத்தகைய போராட்ட இயக்கங்களே பெரும் பங்காற்றின. அத்தோடு
இந்திய நடுத்தர வர்க்கத்தினை உருவாக்குவதிலும் இந்த இயக்கங்கள் கணிசமான
பங்கினை ஆற்றின.
சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கான மாபெரும்
இயக்கங்களை இடதுசாரியினரே முன்னின்று நடத்தினர். விசாலாந்திரா, ஐக்கிய
கேரளா மற்றும் சம்யுக்த மகாராஷ்டிரா ஆகியவற்றிற்கான போராட்டங்களுக்கு தலைமை
தாங்கியவர்களில் பின்னாளில் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களாக
உருவானவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்தியா குறித்த கருத்துருவத்தினை
ஏற்படுத்திடும் நடைமுறையில் பல்வேறு மொழிவாரி தேசிய இனங்களை
ஒருங்கிணைத்திடவும் இப்போராட்டங்கள் வழிவகுத்தன.
மேலும், மதச்சார்பின்மை குறித்த இடதுசாரியினரின் உறுதிப்பாடு,
இந்தியாவின் எதார்த்த நிலைமையை அங்கீகரிப்பதனை அடிப்படையாகக் கொண்டே
இருந்தது. இந்திய நாட்டில் காணப்படும் வேற்றுமைகளின் இடையே உள்ள பொதுவான
பிணைப்புகளை வலுப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையை
தொடர்ந்து பாதுகாத்திட இயலும். மாறாக, இத்தகைய வேற்றுமையின் மீது ஒரே
மாதிரியான விஷயங்கள் ஏதேனையும் திணிப்பதன் வாயிலாக ஒற்றுமையை பாதுகாத்திட
இயலாது. இந்தியாவின் சமூக வாழ்வியலின் அனைத்து குணாம்சங்களுக்கும் இது
பொருந்தும் என்கிற அதே நேரத்தில், மதம் குறித்த விஷயத்தில் இது மிகுந்த
முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேசப்பிரிவினை மற்றும் அதன்பின் நடைபெற்ற
பயங்கரமான மதக்கலவரங்களை அடுத்து, மதச்சார்பின்மை என்பது இந்தியா குறித்த
கருத்துருவத்தை அடைந்திடுவதன் பிரிக்க முடியாத இன்றியமையாத பகுதியானது.
எனினும், மதத்தை அரசிலிருந்து விலக்கி வைப்பதே மதச்சார்பின்மை என வரையறை
செய்திடும் இடதுசாரியினரின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இந்திய ஆளும்
வர்க்கங்கள் முழுமையாக ஈடுபடவில்லை. நடைமுறையில், மதச்சார்பின்மை என்பதனை
அனைத்து மதங்களுக்கும் சம அந்தஸ்து அளிப்பது என்றே ஆளும் வர்க்கங்கள்
வரையறை செய்திருக்கின்றன. சொல்லப்போனால், இதுவே இன்றைக்கு மதவாத மற்றும்
அடிப்படைவாத சக்திகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் அம்சமாக
உள்ளது.
இவை எல்லாம் இந்தியா குறித்த கருத்துருவத்தின் சில கூறுகளுக்கான
எடுத்துக்காட்டுக்களே ஆகும். கிராமப்புற இந்தியாவில் சுரண்டப்படும்
பெரும்பான்மை மக்கள், எண்ணற்ற மொழிவாரி தேசிய இனக்குழுக்கள் மற்றும் பல
மதங்களைச் சார்ந்த இந்திய மக்கள் ஆகியோரை ஈர்ப்பதே, அனைவரின் நலனையும்
உள்ளடக்கிய இந்தியா குறித்த கருத்துருவத்தின் இன்றியமையாத அம்சமாகும்.
கண்ணோட்டங்களுக்கு இடையிலான போராட்டங்கள்!
1920களில் சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்த
எண்ணம் கருக்கொள்ள ஆரம்பித்தது. அதுகுறித்து மூன்று விதமான
கண்ணோட்டங்கள் தோன்றின. அந்தக் காலக் கட்டத்திலேயே
இக்கண்ணோட்டங்களுக்கிடையிலான தொடர் போராட்டத்திலிருந்து இந்தியா குறித்த
கருத்துருவமும் வெளிப்பட்டது.
சுதந்திர இந்தியா ஓர் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்க வேண்டும்
என்பதனை பொதுநீரோட்டத்திலிருந்த காங்கிரஸ் கண்ணோட்டம் தெளிவாக முன்வைத்தது.
இத்தகைய நோக்கத்துடன் இடதுசாரியினரும் ஒத்துப் போனார்கள். எனினும்,
சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதனைத் தாண்டி,
தேசத்தின் அரசியல் சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி நபரும் பொருளாதார
சுதந்திரத்தை அடைந்திடும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும், சோசலிசத்தின்
கீழ் மட்டுமே இது சாத்தியமாகும் என்ற கண்ணோட்டத்தை முன்வைத்தனர்.
இவ்விரண்டு கண்ணோட்டங்களிலிருந்தும் முரண்பட்டிருந்த மூன்றாவது
கண்ணோட்டம். சுதந்திர இந்தியாவின் சிறப்பியல்புகள் இந்திய மக்களின்
மதரீதியான இணைப்புகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை
முன்வைத்தது. இந்த கண்ணோட்டம், சுதந்திர இந்தியா ஒரு “இஸ்லாமிய நாடு“ என்ற
கருத்தை முஸ்லீம் லீக் கட்சியினரும், “இந்து ராஷ்டிரம்“ என்ற கருத்தை
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பினரும் முன்வைக்கக் கூடிய
வகையில் இரட்டைத் தன்மை கொண்டதாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த முஸ்லீம் லீக்
கட்சியினர் இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டதன் மூலம் தங்களது நோக்கத்தை
ஈடேறச் செய்வதில் வெற்றி கண்டனர். ஆனால், இத்தகைய தேச பிரிவினையால் ஏற்பட்ட
விளைவுகள் அனைத்தும் நாளது தேதி வரை நீடிக்கச் செய்து வருகின்றன. நாடு
விடுதலை அடைகின்ற தருணத்தில் தங்களது நோக்கத்தை ஈடேறச் செய்வதில்
தோல்வியடைந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர், மதச்சகிப்புத்தன்மையற்ற வெறி பிடித்த
பாசிச “இந்து ராஷ்டிரமாக” நவீன இந்தியாவை மாற்றுவதற்கான தங்களது முயற்சியை
தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு விதத்தில் சொல்லப் போனால், சமகால இந்தியாவில் காணப்படும்
தத்துவார்த்த போராட்டங்களும், அரசியல் மோதல்களும் மேற்கூறப்பட்ட மூன்று
கண்ணோட்டங்களுக்கு இடையிலான போராட்டங்களின் தொடர்ச்சியே ஆகும்.
இப்போராட்டங்களின் ஏற்ற இறக்கங்களே இந்தியா குறித்த கருத்துருவ
ஒருங்கிணைப்புக்கான திசைவழியையும், உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கும்
என்பதனை சொல்லத் தேவையில்லை.
மேலும் சுதந்திர இந்தியா, ஏகாதிபத்தியத்துடனான தனது இணைப்பை
துண்டித்துக் கொள்ளாமலும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை உடைத்தெறியாமலும்,
காங்கிரசின் பொதுநீரோட்டக் கண்ணோட்டம் நீடித்திருக்க இயலாது என அப்போது
இடதுசாரியினர் வாதிட்டனர். தற்போதும் அத்தகைய நிலைபாட்டையே இடதுசாரியினர்
கொண்டுள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் கூட்டணி
அமைத்துள்ளனர். அந்தக் கூட்டணிக்கு பெரு முதலாளிகளே தலைமை தாங்குகின்றனர்.
இந்த ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவகம் செய்வதைத் தாண்டி,
காங்கிரசால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே அதனுடைய பலவீனம். விடுதலைப்
போராட்டத்தினை, சுதந்திர இந்தியாவின் இலட்சியங்களை நோக்கி தர்க்க ரீதியாக
நகர்த்தும் பணியில் காங்கிரசின் இந்த பலவீனம் தடையாய் மாறியது.
இதுவே ஓர் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் அடித்தளத்தை பலவீனமடையச்
செய்கிறது. முதலாவதாக, சுதந்திர போராட்ட காலத்தில் மக்களை ஒன்றுபடுத்திய
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இரண்டாவதாக,
சுரண்டப்படும் வர்க்கத்தின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வரும்
வேளையில், காங்கிரஸ் அவர்களை வளர்ச்சி வட்டத்திற்கு வெளியிலேயே நிறுத்தி
விட்டது. அனைவரின் நலனையும் உள்ளடக்கியதொரு இந்தியாவை
வலுப்படுத்திடுவதற்கான முயற்சிகள் எதுவும் காங்கிரசிடம் இல்லை. இது
குறித்து பின்னர் பார்ப்போம்.
சுதந்திரத்திற்குப் பின்னர் கடந்த அறுபது ஆண்டுகளில் நமக்கு கிடைத்த
அனுபவமகிதனை முற்றிலும் சரியென நிரூபித்துள்ளது. மூன்றாவது கண்ணோட்டம்,
அதாவது, மதவெறிச் சக்திகள் வளர்வதற்கும், வலுப்படுவதற்கும் காங்கிரஸ்
மற்றும் தொடர்ந்து வந்த அரசுகள் உதவியிருக்கின்றன. இதன் விளைவாக, அவை
தொடர்ந்து கடைப்பிடிக்கும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்து
வரும் மக்களின் அதிருப்தியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னை
வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மதவெறிச் சக்திகளுக்கு
கிடைத்திருக்கிறது.
அரசையும் மதத்தையும் பிரித்தல்
இந்தியாவில் அரசியல் மற்றும் அரசியல் பொருளாதாரத்திற்கு இடையேயான
உறவுகள் என்ற தலைப்பில் நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலுள்ள
மனிதவியலுக்கான ஹேமென் மையத்தில்
2010ல் ஓர் கருத்தரங்கம்
நடைபெற்றது. அப்போது இம்மையத்தின் தலைவராக இருந்த பேராசிரியர் அகீல்
பில்க்ராமி, இக்கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் திருத்தப்பட்ட
மொழிபெயர்ப்புகளைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பான ஓர் புத்தகத்திலே அறிமுக
உரையை எழுதியுள்ளார். அதில் அக்கருத்தரங்கிலே உரையாற்றுகிறபோது இந்தியா
குறித்த கருத்துருவம் பற்றி நான் முன்வைத்த வாதத்தை குறிப்பிடுகிறார்.
(அதனுடைய சாராம்சத்தினை இங்கு தொகுத்தளிக்கிறேன்) :
“யெச்சூரி இங்கு தெளிவுபடுத்திய தேசம் பற்றிய செழுமையான கருதுகோல்,
வெஸ்ட்பாலியன் அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான தேசம்
பற்றிய கருத்தினை முற்றிலும் நிராகரிப்பது போல் தோன்றக்கூடும். (
1644 மற்றும்
1648
ஆகிய ஆண்டுகளுக்கிடையே ஐரோப்பாவின் பெரும்பான்மை சக்திகளினிடையே
வெஸ்ட்பாலியன் அமைதி குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்
அடிப்படையில், தேசிய அரசுகள், இறையாண்மை, தேசங்களுக்கிடையிலான சர்வதேச
சட்டங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாகின.) ஆட்சி என்பது
அரசர்களுக்கு ‘இறைவன் அளித்த உரிமை” (Divine Right Theory) என்ற
கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டன. ‘குடிமக்கள்’, ‘தேசம்’ போன்ற புதிய
கருத்தாக்கங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் உளப்பாங்குகள் உருவாகின. இந்த
உளப்பாங்கே ‘தேசியம்’ என அழைக்கப்பட்டது. குடிமக்கள் என்ற வகையில், இது
மக்களின் மனதில் விதைக்கப்பட வேண்டியிருந்தது. மக்களிடம் அப்படி புதிய
உளப்பாங்கினை உருவாக்கும் போது, ஐரோப்பாவில் ஒரு பொதுவான நடைமுறை
கடைப்பிடிக்கப் பட்டது. தத்தம் நாடுகளில் சில பிரிவினரை “இதரர்கள்”
(others) என்று, அதாவது உள்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு எதிரிகள்
(எடுத்துக்காட்டாக, ஐரிஷ்கள், யூதர்கள்) என அடையாளம் காட்டும் நடைமுறையே
அது. அத்தகையவர்கள் வெறுக்கப்பட வேண்டும், அடிமைப்படுத்தப்பட வேண்டும்
என்பதே தேசியத்தின் நோக்கம். பிற்காலத்தில், எண்ணிக்கை, புள்ளி விவரம் என
பல நவீன கணக்கீட்டு முறைகள் வந்த நிலையில், அவர்கள் “சிறுபான்மையினர்” என
அழைக்கப்பட்டனர். இந்த உணர்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியம்
“பெரும்பான்மை வாதம்” (Majoritarianism) என அழைக்கப்பட்டது.” (சோஷியல்
சயன்டிஸ்ட் – ஜனவரி – பிப்ரவரி,
2011) .
இந்தியா குறித்த கருத்துருவம் உருவானபோது, அனைவரின் நலன்களையும்
உள்ளடக்கிய ஒரு தேசியத்தை ஊக்குவிக்க முயல்வதே அதன் சாராம்சமாக இருந்தது.
தேச விடுதலைக்கான போராட்டம் நடைபெற்ற காலத்தில் ஏகாதிபத்திய/காலனியாதிக்க
எதிர்ப்பு என்பதே இதன் அடிப்படையாக இருந்தது. அதே நேரத்தில், இது
முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் அனைத்து விதமான சுரண்டல்கள்
மற்றும் அவற்றின் சமூக அமைப்புகளுக்கும் எதிரானவையாக இருக்க
வேண்டியிருந்து. இத்தகைய புரிதலின் மையக் கருத்தினை கொள்கைப் பிடிப்புடன்,
உள்ளார்ந்த உணர்வுடன் எவ்வித சமரசமுமின்றி இடதுசாரியினர் மட்டுமே
முன்னெடுத்துச் சென்றனர். அனைவரின் நலன்களையும் உள்ளடக்கிய இத்தகைய
கருத்துருவம், நமது நாட்டின் பெரும்பாலான மக்களின் பொருளாதார நலன்களையும்
உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது.
மேலே குறிப்பிட்டபடி, விவசாய சீர்திருத்தங்கள், கூட்டாட்சி அரசியல்
மற்றும் அரசையும் மதத்தையும் பிரிப்பது ஆகிய அனைவரின் நலன்களை உள்ளடக்கிய
அம்சங்களே இந்தியா குறித்த கருத்துருவத்தை எட்டுவதற்கு தொடர் தேவையாக
இருந்து வருகின்றன.
நாம் மேலே குறிப்பிட்ட மூன்றாவது கண்ணோட்டத்துடன் மட்டுமின்றி,
காங்கிரசின் கண்ணோட்டமான மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை உருவாக்குவது என்ற
வெற்று அறிவிப்பாலும் அனைவரது நலன்களையும் உள்ளடக்கிய இந்தியா குறித்த
கருத்துருவத்தை எட்ட இயலாது போனது.
இந்திய பூர்ஷ்வாக்கள் மற்றும் அவர்களது தலைமை, இந்திய ஏகபோக
முதலாளித்துவம் ஆகியன அவற்றின் குறுகலான சமூக அடித்தளம் ஏற்படுத்திய
நிர்ப்பந்தங்கள் காரணமாக, சுதந்திர இந்தியாவில் தங்களது வர்க்கத்தை ஆட்சிப்
பொறுப்பில் நிலைநிறுத்திக் கொள்ள நிலப்பிரபுக்களுடன் கூட்டு சேர
நேர்ந்தது. இத்தகைய கூட்டணியே ஒரு புதிய வடிவத்திலான முரண்பாடுகளை
தோற்றுவிக்கத் துவங்கியது. இம்முரண்பாடுகளே இந்தியாவின் சமூக-அரசியல்
மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உள்ளடக்கத்தையும், திசை வழியையும்
தீர்மானிப்பவையாக நீடித்து வருகின்றன.
சுதந்திரப் போராட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை
படிப்படியாக துடைத்தெறிந்து, ஒருபுறம் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார
கிடுக்கிப் பிடியிலிருந்து இந்திய ஆளும் வர்க்கங்கள் முற்றிலும் விடுபட
இயலாததையும், மறுபுறம் நிலவுடைமை சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், இந்திய
மக்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான அதன் பிடியையும் அகற்ற
இயலாமல் போனதையும் இத்தகைய கூட்டு உணர்த்துகிறது.
சமீபகாலமாக நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றபோதும்,
உள்நாட்டு சந்தை தொடர்ந்து சுருங்கி வருவதில் அது பிரதிபலிக்கிறது.
நிலவுடைமை சமூக அமைப்பின் உற்பத்தி உறவுமுறைகளை முற்றிலுமாக
அழித்தொழிக்காமல் முதலாளித்துவம் வளர்ந்ததாகவோ, வளர்ச்சி பெற முடிந்ததாகவே
வரலாறு இல்லை. ஏகாதிபத்தியத்துடனான இத்தகைய சமரசம் ஒருபுறமும்,
நிலப்பிரபுத்துவத்துடனான சமரசம் மறுபுறமும் சுதந்திர இந்தியாவில் இந்திய
முதலாளிகள் விரும்பிய பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக மாறியது. அதற்கான
அடித்தளத்தை உருவாக்க இயலாமல் செய்து விட்டது.
நிலவுடைமை சமூக கட்டமைப்பின் மிச்ச சொச்சங்கள் மீது முதலாளித்துவ
கட்டமைப்பை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளின் காரணமாக
நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களை அகற்ற இயலாமல் போனது. ஆளும்
வர்க்கங்களின் பெருத்த முயற்சிகளுக்குப் பிறகும் கூட “பசுமைப் புரட்சி”
என்பது ஒரு சில பகுதிகளிலே மட்டுமே, குறிப்பாக ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்
இருந்த “ரயத்வாரி“ குடியிருப்புகளில் மட்டுமே சாத்தியமானது என்பதிலிருந்து
இதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
அடிப்படையான நிலச்சீர்திருத்தங்கள் வாயிலான முழுமையான விவசாயப்
புரட்சியை செயல்படுத்திட ஆளும் வர்க்கங்களால் இயலாமல் போனது. இதன் காரணமாக
கோடிக் கணக்கான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி குறைந்து, உள்நாட்டு சந்தை
சுருங்கியது. இதன் காரணமாக, ஆளும் வர்க்கங்கள் விரும்பியவாறு முதலாளித்துவ
பொருளாதார வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவது கட்டுப்படுத்தப்பட்டது.
அனைவர் நலன்களையும் உள்ளடக்கிய பார்வை
!
இந்தியா என்ற கருத்துருவத்தில் அனைவரின் நலன்களையும் உள்ளடக்கிய
கண்ணோட்டம் முக்கிய இடம் பெற்றிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது,
இடதுசாரி சக்திகளுக்கு அப்பாற்பட்டு, இத்தகைய தெளிந்த கண்ணோட்டத்துடன்,
குரல் எழுப்பும் வேறு பலரும் இருந்து வந்திருக்கின்றனர்.
அத்தகையவர்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மிக உயர்ந்து நிற்கிறார்.
1949 நவம்பர் 25ம் நாளில் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலுக்காக இந்திய
அரசியல் சாசனச் சட்ட முன்வரைவினை சமர்ப்பித்து அவர் ஆற்றிய உரையிலிருந்து
ஒரு சில வாசகங்கள் இதோ:
“1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளில், நாம் ஒரு முரண்பட்ட வாழ்க்கைக்குள்
கால் எடுத்து வைக்கப் போகிறோம். அரசியலில் நமக்குள் சமத்துவம் இருக்கும்.
ஆனால், சமூக – பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை நிலவும். அரசியலில்,
ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பு என்பதை நாம்
அங்கீகரிப்போம். ஆனால் நமது சமூக – பொருளாதார வாழ்க்கையில்,
சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்கனவே நிலவும் ஏற்றத்தாழ்வுகள்
காரணமாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு என்ற கோட்பாட்டினை ஏற்க
தொடர்ந்து மறுப்போம்.
“எத்தனை காலம் இத்தகைய முரண்பாடுகள் கொண்ட வாழ்க்கையினைத் தொடரப்
போகிறோம்? எத்தனை காலம் நமது சமூக-பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை
மறுக்கப் போகிறோம்?
“அத்தகைய மறுப்பினை நீண்ட காலம் தொடர்வோமெனில், நமது அரசியல்
ஜனநாயகத்தினை அபாயத்திற்கு உள்ளாக்கி விடுவோம். இந்த முரண்பாட்டினை எவ்வளவு
விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து விட
வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த
அரசியல் நிர்ணய சபை மிகவும் அக்கறையுடன் உருவாக்கியிருக்கும் அரசியல்
ஜனநாயகக் கட்டமைப்பினை வெடித்துச் சிதறடித்து விடுவார்கள்.”
அத்தகைய முரண்பாடுகளைக் களைவது என்ற பணி நாடு சுதந்திரம் பெற்ற போது
இருந்ததை விட இன்று கடினமாக ஆகியுள்ளது. அதாவது இந்தியா என்ற கருத்துருவம்
பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று பொருள். மதசார்பற்ற ஜனநாயகத்தினை
மீட்டெடுக்க வேண்டும் எனில், இந்தியா என்ற கருத்துருவம் இன்று மீண்டும்
உறுதியுடன் நிலை நாட்டப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கங்கள் பின்பற்றி வரும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் உள்ள
முரண்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். இவைகளைத் தவிர, இதே அளவு
முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு அம்சமும் உள்ளது. நிலவுடைமைச் சமுதாயத்தின்
மிச்ச சொச்சங்கள் குறித்த அம்சமே அது. சமூகத்தின் மேல் கட்டுமானத்தில்
இருந்து வரும் இந்த மிச்ச சொச்சங்கள் முழுவதும் அகற்றப்படாமல், நிலவுடைமைச்
சமூகம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலைமைகள் தொடரும் நிலையில்,
சமூக உணர்வுகளும் அத்தகைய பிற்போக்கான தன்மையினையே பிரதிபலிக்கின்றன.
முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உணர்வுகளுடன் கை கோர்த்துக் கொண்டு,
வகுப்புவாதமும் சாதியவாதமும் இன்று இந்தியச் சமூகத்தில் பெருமளவில்
செல்வாக்கினைச் செலுத்தி வருகின்றன. நிலவுடைமைச் சமூக அமைப்பின் மீது
முதலாளித்துவத்தை மேல் கட்டுமானம் செய்வதற்காக செய்யப்பட்ட முயற்சிகள், ஒரு
குறிப்பிட்ட சூழ்நிலையினை உருவாக்கியிருக்கின்றன. நிலவுடைமைச் சமூகத்தின்
பிற்போக்கான சமூக உணர்வுகளும், முதலாளித்துவத்தின் சீரழிந்து வரும் போட்டி
உணர்வுகளும் இன்று கை கோர்த்து நிற்கின்றன.
இத்தகைய குறுகலான வரையறைகளுக்குள் இந்திய முதலாளித்துவம் வளர்ந்து
வருவதன் விளைவாக, வர்க்க உருவாக்க நிகழ்வானது – வரலாற்று ரீதியாக நிலைத்து
நிற்கும் சாதிப் பிரிவினைகள் நிறைந்த சமூகத்தின் வரையறைக்கு உட்பட்டுத்
தான் அமைந்துள்ளது. இதுவெல்லாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக
உறவுகளைச் செப்பனிட்டு மாற்றியமைக்கப்படுவதற்கு பதிலாக, அவற்றுடன் சமரசம்
செய்து கொண்டே வளர்ந்திருக்கிறது. இதன் காரணமாக, இன்றைய இந்தியாவில்,
பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் வர்க்கங்கள், சமூக ரீதியாக ஒடுக்கப்படும்
சாதிகள் ஆகியவற்றிற்கிடையில் ஒரு பொதுவான அடிப்படை உருவாகியுள்ளது.
இவ்வாறாக, சமூகத்தின் மேல் கட்டுமானத்தில் நிலவும் நிலவுடைமைச்
சமூகத்தின் அழுகல் நிலையுடன், முதலாளித்துவத்தின் சீரழிந்து வரும் நிலையும்
இணைந்து ஒரு மோசமான சூழ்நிலையினை உருவாக்கியிருக்கின்றன. அது சமூகத்தையும்
மேலும் மேலும் குற்றமயமாக்கி வருகிறது. சாதி, மத உணர்வுகளுடன் சேர்ந்து
இது மேலும் வளர்கிறது. ஆளும் வர்க்கங்கள் இத்தகைய உணர்வுகளை தங்களது
அரசியல் மற்றும் தேர்தல் தேவைகளுக்காக நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
நிலவுடைமை அழுகல் சிந்தனைகளும், சீரழிந்து வரும் முதலாளித்துவச்
சிந்தனைகளும் இணைந்து இந்திய அரசியலின் ஜனநாயக உள்ளடக்கத்தினை சீர்குலைத்து
வருகின்றன. அதன் விளைவாக இன்றைய நடைமுறை அரசியல் ஒரு கோரமான பரிமாணங்களைப்
பெற்று நகர்ந்து வருகிறது. வெட்கமின்றி
இந்திய வாக்காளர்களிடையே நிலவும் சாதி மத உணர்வுகளைப் பயன்படுத்தி
‘வாக்கு வங்கி’ அரசியல் உருவாக்கப் படுகிறது. இதன் மூலம், கொள்கை
அடிப்படையில் ஜனநாயகபூர்வமாக தங்களது அரசியல் தேர்வுகளைச் செய்யும்
வாய்ப்புகள் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கப்படுகிறது.
இத்தகைய அம்சங்களின் கூட்டுக் கலவை, சமூகத்தை குற்ற மயமாக்குகிறது. இதன்
விளைவாக பண பலமும், புஜ பலமும் தேர்தல் அரசியலில் ஆதிக்கம் செய்கின்றன.
இவ்வாறு, நமது குடியரசின் அரசியல் சாசனத்தில் இருக்கும் ஜனநாயக உள்ளடக்கம்
பெருமளவில் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அனைவர் நலன்களையும் உள்ளடக்கிய
இந்தியா என்ற கருத்துருவ இலட்சியங்களை அடைவதற்கு தங்களது சக்திக்குத்
தகுந்தாற் போல் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். மக்களின் அத்தகைய
பங்ககளிப்புச் சக்தி இன்று தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
இந்தியா என்ற கருத்துருவ இலட்சியங்களை அடைவதற்கான பயணத்தினை –
ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க முன்வைக்கிற மூன்றாவது கண்ணோட்டம் பின்னுக்குத்
தள்ளுகிறது. அவர்களது இந்த முயற்சிகளுக்கு, இந்திய பூர்ஷ்வாக்களின் பெரும்
பகுதி, குறிப்பாக ஆளும் வர்க்கங்களுக்கு தலைமை தாங்கும் ஏகபோக முதலாளிகள்
தடையற்ற ஆதரவினை அளித்து வருகின்றனர் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி கடுமையாக இருக்கும் தற்போதைய வேளையில்,
தங்களது லாபத்தினை பெருமளவு உயர்த்த வேண்டும் என்ற கார்ப்பரேட் உலகத்தின்
கூக்குரல் உச்சத்தினைத் தொட்டிருக்கிறது. தங்களது சூறையாடும் லாப
வேட்டைக்கு வழிகொடுப்பதை ‘உறுதியாகச் செயல்படுத்தும்” “வலிமையான” தலைவர்
ஒருவரைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
‘தீவிரங்களின் சகாப்தம்’ ( Age of Extremes ) என்ற தனது நூலில், புகழ்
பெற்ற வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம் பெரு முதலாளிகள் குறித்து பின்
வருமாறு குறிப்பிடுகிறார்: “ தங்களது உடைமைகளைப் பறிக்காத, தங்களுடன்
இணக்கமாக இருக்க விரும்பும் எந்த ஆட்சியுடனும் அவர்கள் சமரசம் செய்து
கொள்வார்கள்…. பிற ஆட்சிகளை விட பாசிச ஆட்சியில், அவர்களுக்கு
குறிப்பிடத்தக்க பெரிய அனுகூலங்கள் உண்டு.” அவர் அத்தகைய பல
அனுகூலங்களையும் பட்டியலிடுகிறார். அவற்றில் தொழிற்சங்கங்களை
அழித்தொழிப்பது, இடதுசாரிகளை பலவீனப்படுத்துவது அல்லது தோற்கடிப்பது ஆகியவை
எல்லாம் அடங்கும். 1930களில், ஐரோப்பாவில் பெரு வீழ்ச்சி
நெருக்கடியிலிருந்து மீண்டு வெளிவருவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம்
முதலாளிகளுக்குத் தேவைப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உள்நாட்டில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள்
எதுவும் இல்லை. உலகப் பொருளாதாரமும் தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருந்து
வருகிறது. இத்தகைய நிலையில், உயர்ந்த பட்ச லாபத்தினை உறுதி செய்வதற்கு
இந்தியக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒரு “இரட்சகர்” தேவைப்பட்டார். 2014
நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் ஓராண்டு ஆகி விட்ட நிலையில், அந்த
நம்பிக்கைகள் பொய்க்கத் தொடங்கி விட்டன. பொருளாதார நெருக்கடி முற்றி 1929
பெரு வீழ்ச்சி நிலவிய காலத்தில், உலக முதலாளிகள், குறிப்பாக அமெரிக்க
கார்ப்பரேட் முதலாளிகள் பாசிச உருவாக்கத்தில் எத்தகைய முக்கிய பாத்திரத்தை
வகித்தனர் என்பதற்கும், அப்போது அவர்களுக்கு ஒரு ‘இரட்சகர்’ தேவைப்பட்டார்
என்பதற்கும், வரலாற்றில் சான்றுகள் உள்ளன.
ஜெர்மனியில் அன்று பாசிசம் எழுந்த சூழ்நிலையும், இன்று நம் நாட்டில்
நிலவும் சூழ்நிலையும் ஒன்றல்ல. எனினும், இந்தியாவில் இன்று
கடைப்பிடிக்கப்படும் பிரச்சார முறைகள் சிலவற்றில் ஜெர்மனியில்
கடைப்பிடிக்கப்பட்ட பிரச்சாரத்தோடு ஒத்த தன்மையுடையதாய் இருப்பதைக் காண
முடிகிறது.
ஜெர்மனியில் பாசிசம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்தும், அதன் தன்மை
குறித்தும் அறிவியல் பூர்வமான ஒரு ஆய்வினை ‘ஐக்கிய முன்னணி’ என்ற தனது
நூலில் ஜார்ஜி டிமிட்ரோவ் முன் வைக்கிறார். “பாசிசம் அதி தீவிர ஏகாதிபத்திய
வாதிகளின் நலன்களுக்காகவே செயல்படுகிறது. எனினும், மோசமாக நடத்தப்பட்ட
நாட்டை மீட்டெடுக்கும் மக்கள் தலைவனாக தன்னைக் காட்டிக் கொண்ட பாசிசம்,
கிளர்ச்சியூட்டும் தேசிய உணர்வுகளை பெருமளவில் தட்டி எழுப்பியது”. மேலும், “
பாசிசம் மிகவும் ஊழல் நிறைந்த மோசமான நபர்களின் பிடியில் மக்களைச் சிக்க
வைத்தது. ஆனால், மறு புறத்தில், தங்கள் அரசு மிக நேர்மையான, ஊழல் நெருங்க
முடியாத அரசு என்ற முழக்கத்தையும் முன் வைத்தது. மக்கள் விரக்தி
அடைந்திருக்கும் நிலையில், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரத்தியேகச்
சூழ்நிலையினையும் பயன்படுத்தி, அதர்கேற்ப மக்களின் உணர்வுகளைக்
கிளர்ந்தெழச் செய்தது” என அவர் கூறுகிறார்.
டிமிட்ரோவ், இன்றைய ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க குறித்து பேச வேண்டும் எனில்,
அவர் என்ன பேசுவார்!. ஆட்சிப் பிழைகளையும், ஊழலையும் அவர்கள் அப்பட்டமாக
நியாயப் படுத்துகிறார்கள். தங்களது தேர்தல் வாக்குறுதிகளை தயக்கமின்றி
மீறுகிறார்கள். நவீன தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளை மேலும் விரிவு
படுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வெளிப்படையாகவே கருத்து
தெரிவிக்கின்றனர். அத்தகைய வளர்ச்சிப் போக்கில், சர்வதேச நிதி மூலதனத்தின்
ஆதரவான ஒப்புதலைப் பெற பேரம் பேசப்படுகிறது. அவர்கள் சர்வதேச மூலதனத்துடன்
அந்த முறையில் மேலும் அதிகமாக ஒத்துழைக்கிறார்கள். “அவமதிக்கப்
பட்டிருக்கும் தேசிய உணர்வுகளை (இந்து உணர்வுகள் என்று கொள்க) சரி செய்வது”
என்ற பெயரில், பா.ஜ.க நடத்தும் இந்துத்துவா பிரச்சாரங்கள் மதவாதத்
திரட்டலைக் கூர்மைப்படுத்துகின்றன. இவையெல்லாம் ஒட்டு மொத்தத்தில் மிகவும்
வெறுக்கத்தக்க வகையில் பாசிச வழிமுறைகளுடன் பொருந்துகின்றன.
பிற்போக்குத் திட்டம்:
இந்தியாவில் அத்தகைய பிற்போக்குத் திட்டத்தை நிறைவேற்றிட,
வரலாற்றிற்குப் பதிலாக இந்து மதப் புராணங்களையும், தத்துவத்திற்குப் பதிலாக
மதக் கருத்தியலையும் சமயக் கோட்பாடுகளையும் முன்வைக்கும் பணியே,
ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வின் பிரதான முயற்சிகளாக உள்ளது. பாஜக அரசால்
உயர்த்திப்பிடிக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்களின் அபத்தமான
அறிக்கைகளும், வாதங்களும் மேற்சொன்னதில் உள்ள முதலாவதை நமக்கு
வெளிப்படையாக்குகின்றன. இந்தியாவின் பண்டைக்காலத்தில் முகம் மாற்று அறுவை
சிகிச்சை அறிவியலில் நாம் எட்டியிருந்த உயரத்தை அறிந்துகொள்வதற்கான
வெளிப்பாடுதான் கடவுள் கணேசன் என்று பிரதமர் நரேந்திர மோடியே
வெட்கமில்லாமல் பேசியுள்ளார் . மகாபாரத காலத்திலேயே ‘‘சோதனைக் குழாய்
குழந்தைகள்” இருந்திருக்கிறார்கள் என்றும், கர்ணன் இவ்வகையில் பிறந்தவன்
தான் என்றும் கூச்சமில்லாமல் கூறியுள்ளார்.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை வெளியிடுவதுடன், மாணவர்களுக்கும்,
இளைஞர்களுக்கும் கற்பிக்கப்படும் அறிவியல் பாடத் திட்டங்களிலேயே திட்டமிட்ட
விதத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. உயர் கல்வி நிறுவனங்களில்
இந்துத்துக் கருத்தியலாளர்கள் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டு
வருகின்றனர். எண்ணிலடங்காத அத்தகைய முயற்சிகளைப் பற்றிய விவரிப்பு இங்கே
தேவையில்லை. கருத்தியல் தளத்தில், மூடக்கருத்துக்களை மீட்டுருவாக்கும்
வேலைகளும் நடைபெறுகின்றன.
‘பகுத்தறிவை அழித்தொழித்தல்’ (Destruction of Reason) என்ற தன்னுடைய
நூலில் ஜார்ஜ் லூகாக்ஸின் (Georg Lukacs), தத்துவ தளம் குறித்த விளக்கம்,
இந்தியாவில் மூடக் கருத்துக்களை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில்
நினைவில் கொள்ளத்தக்கவொன்று. ஹிட்லரை நோக்கிய ஜெர்மானிய தேசத்தின்
தத்துவாத்தத் துறையின் பயணத்தை, மற்ற அனைவரைப் போலவே, லூகாசும்
கண்டறிகிறார். ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அவர் எழுதத்
தொடங்கிய இந்த நூல், பனிப்போர் உச்ச கட்டத்தில் இருந்த போது
வெளியிடப்பட்டது. அவரின் மையக் கருத்து, சுறுக்கமாக “ஏகாதிபத்திய உலகத்தில்
மூடக் கருத்துக்களின் பரவல் ஒரு சர்வதேச இயல் நிகழ்வு” என்பதாகும்.
மூடத்தனம், என்பதை மிக எளிமையாகப் புரிந்துகொண்டால் பகுத்தறிவுக்கு
விரோதமானவை என்று சொல்லலாம். தன் எல்லா இயக்கத்திலும், ஐரோப்பாவின்
அறிவொளிக் காலம் தொடங்கி, இன்றைய ஏகாதிபத்திய உலகமய காலம் வரை, மனிதர்களின்
வாழ்விலும், உண்மை நிலைமைகள் குறித்த சரியான ஆய்வுகள் மேற்கொள்வதற்கு
எதிர் நிலை எடுப்பதே, பகுத்தறிவற்ற வாதங்களின் மையம். முழுமையான உண்மைகளை
அறிவைக் கொண்டு மட்டுமே விளங்கிக் கொள்ள முடியாது. ஆனால்,
பகுத்தறிவின்மையானது உண்மைக்கும் அறிவிக்கும் இடையில் நிகழும் தர்க்கவாத
உறவினையே நிராகரிக்கிறது. லூகாஸ் சொல்வதைப் போல, புறவய யதார்த்தமானது நாம்
அறிந்து வைத்திருப்பதை விட அதிக செலுமையும், சிக்கலும் கொண்டது. எனவே,
எப்போதும் சிந்தனைக்கும் (Thought), இருத்தலுக்கும் (Being) இடையில் ஒரு
இயற்கை விஞ்ஞான தத்துவ அடிப்படையிலான முரண்பாடு (Ontological
Contradiction) இருக்கவே செய்யும். இதனால், உடனடியாக தீர்வு காண முடியாத
பிரச்சனைகளை ஒருவர் ஒவ்வொரு தருணத்திலும் சந்திக்கிறார். மூடத்தனம் என்பது,
இப்படியான தீர்க்கப்படாத பிரச்சனைகள் எல்லாம், தீர்க்கவே முடியாதவை என்ற
முன் முடிவிலிருந்து எழுகிறது. இதன் காரணமாக, ஒருவர் ஒட்டுமொத்த உண்மைகளைப்
பற்றிய பகுத்தறிவை எக்காலத்திலும் பெறவே முடியாது என்ற முடிவிற்கு
வந்துவிடுகிறது. ஒட்டுமொத்த உண்மைகளை உள்வாங்க முடிந்த ஒரே விசயம்
‘நம்பிக்கை’ (Faith) அல்லது ‘இயல்பு நாட்டம்’ (Intuition), எனவே அவற்றையே
மிக உயர்ந்த அறிவாகக் கொள்ள வேண்டும். தத்துவங்களின் யுகங்கள் தோரும்
இத்தகைய முன் முடிவுகள் இருந்துகொண்டுதான் உள்ளன.
லூகாஸ், அப்படியான தத்துவ அனுமானங்களை விமர்சித்தபடியே, இயக்கவியலே
சரியான தீர்வுகளைக் கொடுப்பதையும் செய்து காட்டுகிறார். சரியாகச் சொன்னால்
இது தத்துவார்த்தத் தளத்தில் கருத்து முதல் வாதத்தின் மேல்
பொருள்முதல்வாதம் பெற்ற வெற்றியினைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்தில் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை, எந்தக் காலகட்டத்திலும்
புரிந்துகொள்ள முடியாது என்று பொருளில்லை, எனவே புரிந்துகொள்ள
முடியாததுதான் அறிவு என்ற கருத்து முதல்வாதத்தின் நிறுவுதல் சரியானதல்ல.
உண்மையான அறிவுக்கு மேலாக, ‘நம்பிக்கை’, ‘பரமன்’ என்று வாதிடுவதும்
அவ்வகையே.
லூகாக்ஸ் மேலும் ஒரு முக்கியமான அம்சத்தினை வலியுறுத்துகிறார்:
“மூடத்தனத்தின் ஒரு முக்கியமான அம்சம் வெளிப்படையாது, பிற்போக்கு
முதலாளிகளின் பார்வையில் மனிதர்களுக்கு முழு விடுதலையின் சாயலைக் கொண்ட தனி
நபர் சுதந்திரம், தார்மீக மற்றும் அறிவார்ந்த மேன்மையுடன் கூடிய ஒரு
கருத்தியல் ‘ஆறுதலை’ வழங்குவது மூடத் தனத்தின் மிக முக்கியமான பணியாகும் –
பிற்போக்கு முதலாளிகளிளின் அன்றாட நடவடிக்கைகளுடன் அவர்களை ஒன்றிணைத்து
வைத்திருப்பதுடன், அவர்களுக்கு பணிந்து நடக்கவும் தயார்ப்படுத்துகிறது.” [
கூடுதல் விவரங்களுக்கு 1984 ஏப்ரல் மாத சோஷியல் சயன்டிஸ்ட் இதழில், ஆசாத்
ஜைதியின் நூல் விமர்சனத்தைப் படிக்கவும்.]
அறிவெதிர் நிலை சகாப்தம்
!
ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆட்சியின் கீழ், பகுத்தறிவுக்கு எதிரான இந்தத்
தத்துவம் தான் இந்திய வாழ்க்கையின் சமூக-அரசியல்-கலாச்சார அம்சங்கள்
அனைத்திலும் பற்றிப் பரவி நிற்கிறது. சுறுக்கமாக இதுவொரு அறிவெதிர்நிலை.
அனைவரின் நலன்களையும் உள்ளடக்கிய பொருளாதார செயல் திட்டத்தின் வழியாக,
இந்தியா என்ற கருத்துருவத்தை வலுப்படுத்துவது ஒரு அறிவார்ந்த செயல்.
இந்தியப் பொருளாதாரத்தினை அபரிமிதமான லாப வெறிக்கு சேவகம் செய்யும்
நோக்கத்துடன், சர்வதேச நிதி மூலதனத்துடன் ஒத்துழைத்து, நவீன தாராளவாத
பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினால் அது பகுத்தறிவற்ற
நடவடிக்கை.
ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட தேசிய உணர்வுகள் நிராகரிக்கப் பட்டு,
இந்தியா ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றப் படுகிறது. அது
மட்டுமல்லாமல், வறியவர்களை மேலும் வறுமைப்படுத்துவது, செல்வந்தர்களை மேலும்
செல்வந்தர்களாக்குவது என்று இரண்டு இந்தியாக்களை உருவாக்குவதும்,
அவற்றிற்கு இடையிலான இடைவெளியினை மேலும் பெரிதாக்குவதும் பகுத்தறிவற்ற
நடவடிக்கை. அனைவரின் நலன்களையும் உள்ளடக்கும் (Inclusive) இந்தியா என்ற
கருத்துருவத்தின் செயல் திட்டத்திற்கு எதிராக, பெரும்பான்மையான மக்களை
ஒதுக்கி வைக்கும் (Exclusivist) செயல் திட்டமே அது.
தலித்துகள், ஆதிவாசிகள், மத சிறுபான்மையினர், பெண்கள் என விளிம்பு
நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பிரிவினரின் சமூக – பொருளாதார வாழ்க்கையினை
மேம்படுத்தும் வகையில் திட்டமிட்டால், அது அறிவார்ந்த நடவடிக்கை. விளிம்பு
நிலை மக்களை மேலும் ஓரம் கட்டினால் (கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு துணை
நிற்பது அண்மைய எடுத்துக்காட்டுக்களில் ஒன்று), அது அறிவெதிர் நடவடிக்கை.
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது அறிவார்ந்தது.
சமூக-பொருளாதார எதார்த்தங்களை முற்றிலும் ஒதுக்கி வைத்து விட்டு, திறமை
குறித்தெல்லாம் வறட்டுத் தனமாகப் பேசுவது அறிவெதிர் வாதம்.
அரசியல் சாசனம் உறுதியளித்திருக்கும் அடிப்படையில், “சாதி, மதம்,
பாலினம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, குடிமக்கள் அனைவரின் சமத்துவத்தைக்
கோருவது” அறிவார்ந்த செயல். அவற்றை மறுப்பது, டாக்டர் அம்பேத்கர்
எச்சரிப்பது போல, அறிவெதிர் நிலை. இன்றைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு
தான், அத்தகைய சமத்துவ மறுப்பு, அத்தகைய அறிவெதிர் நிலை.
அரசிடமிருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும் என்பது அறிவார்ந்த நிலை.
அனைவரின் நலன்களையும் உள்ளடக்கி வளர்த்தெடுப்பதற்கு மாறாக, அராஜக
வகுப்புவாத அடிப்படையில் ஒருமுனைப்படுத்தி தனி விசேஷ நிலையில் வைப்பது
அறிவெதிர் நடவடிக்கை. அரசியல் சாசனம் மதச் சிறுபான்மையினருக்கு உத்தரவாதப்
படுத்தியிருக்கும் உரிமைகள் மீது நேரடியான தாக்குதல் தொடுக்கின்ற,
வாழ்வுரிமை மற்றும் வாய்ப்புக்களுக்கான பாதுகாப்பினைப் பறிக்கின்ற,
வகுப்புவாத வன்முறைகளுக்கு அவர்களை இரையாக்குகின்ற நடவடிக்கைகளே அறிவெதிர்
நடவடிக்கைகளாகும்.
இந்தியா என்ற கருத்துருவத்தினை வலுப்படுத்தும் வகையில், சமூக
மதிப்பீடுகளை உயரச் செய்வது அறிவார்ந்த செயல். அனைவருக்கும் கல்வியென்பது
அனைவரையும் சென்றடையாமல் தடுத்து, பகுத்தறிவு வாதத்தினையும் அறிவியல்
பார்வையினையும் பின்னுக்குத் தள்ளி, கல்வி முறையில் விஷத்தைக் கலப்பது
அறிவெதிர் நடவடிக்கை. இந்தியாவில் ஒத்திசைவாக செழித்து வளர்ந்திருக்கும்
பன்முகக் கலாச்சாரத்திற்குப் பதிலாக, இந்துப் புராணங்களின் அடிப்படையிலான
ஒற்றைக் கலாச்சாரத்தினைத் திணிப்பது அறிவெதிர் நடவடிக்கை.
நமது செழுமையான பன்முகத்தன்மையினைக் கொண்டாடுவதன் மூலம் அனைத்து
மக்களின் நலன்களையும் உள்ளடக்கி அவர்களை ஒன்றுபடுத்த முயல்வது அறிவார்ந்த
செயல். அத்தகைய பன்மையின் மீது, இந்து மேலாதிக்க நோக்கில் ஒற்றைக்
கலாச்சாரத்தினைத் திணிப்பது அறிவெதிர் நிலை.
அனைவரின் சுபிட்சத்திற்காகவும் செயல்படுவது அறிவார்ந்த நிலை. சலுகை
முதலாளித்துவத்தையும், அத்துடன் இணைந்து மேல்மட்டத்தில் மகா ஊழல்களையும்
ஊக்குவிப்பது அறிவெதிர் நிலை.
இந்தியா என்ற கருத்துருவத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் பரந்து பட்ட
இந்திய தேசியத்தினை மேம்படுத்துவது அறிவார்ந்த செயல். இந்து என்ற
அடிப்படையில் மக்களைத் திரட்டுவதற்காக தேசியவாதம் என்று கூக்குரல் இடுவது ,
ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளும்
அறிவெதிர் நடவடிக்கைகளேயாகும்.
இந்தப் பட்டியலை இப்படி நீட்டிக் கொண்டே போகலாம். இப்போது விஷயம்
என்னவென்றால், இந்த போராட்டத்தில், அறிவெதிர் நிலையினைத் தோற்கடித்து,
அறிவு வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியின் மூலம் உருவாகும் புதிய செயல்
திட்டம் தான் மதச்சார்பற்ற ஜனநாயகத்தினை மீட்டெடுக்க முடியும். இது தான்
சாராம்சத்தில் இந்தியா என்ற கருத்துருவம்.
அறிவுசார்நிலைக்கும் அறிவெதிர் நிலைக்குமிடையில் நடக்கும் போராட்டத்தில்
அறிவு வெற்றி பெற்றால் மட்டுமே, இந்தியா என்ற கருத்துருவம் வெற்றி
பெறும். அந்த வெற்றியை நோக்கிய போராட்டத்தில், இந்திய மக்களின் ஒற்றுமையைப்
பலப்படுத்துவது மிகவும் தேவை. மக்கள் போராட்டங்களின் மூலம் இந்த
ஒற்றுமையினை உருவாக்கி, பலப்படுத்தும் கடமையில் இடதுசாரிகள் தங்களை
அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
[சிந்தா ரவீந்திரன் நினைவு நான்காவது சொற்பொழிவு
– கோழிக்கோடு
– 2015 ஜூலை
4 ]
படம்: நன்றி: தி இந்து
நன்றி: பிரெண்ட் லைன் (ஆகஸ்ட் 7, 2015 )