Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Tuesday, 11 August 2015


தேசியமும் மதமும்—02-ஆசிரியர்-கைமண்


பௌத்தமும் தேசியமும்– சில தகவல்கள்

த்தலைப்பிலான ஆய்வின் அவசியம் என்னவென்பதை மேலும் வலியுறுத்துவதற்காக, தேசியம், மதம் ஆகிய இரண்டும் கடந்த கால இந்திய உபகண்ட வரலாற்றில் எவ்விதம் இணைந்திருந்தன என்பதைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்களை முதலில் அவதானிப்போம். இப்பகுதியைத் தொடர்கட்டுரைக்கான முன்னுரையாகக் கருதலாம். கட்டுரை எழுதி முடிக்கப்படமுன்னர் முன்னுரை எழுதுவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால், ஆய்வை மேற்கொள்வதில் வாசகர்களின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதால் முன்னுரை அவசியப்படுகிறது.
தெற்காசியப் பிராந்தியம் சுமார் 5000 ஆண்டுகால பாரம்பரியமுள்ள ஒரு முழுமையாகும். இம் முழுமையை ஆக்குவதிலும் இன்னமும் அதைப்பாதுகாத்து வருவதிலும் பிரதான பங்குவகித்து வருவது பண்பாட்டுக்கட்டுமானந்தான். தெற்காசியப் பிராந்தியக் கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொண்டால்தான் இலங்கையின் நிகழ்வுகளைப் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். இந்தியாதான் பௌத்ததினதும், சைவத்தினதும் தாய்மண் என்பதை மறுப்பார் உண்டா? ஆகவே முதலில் இந்தியாவை எடுத்துக் கொள்வோம்.

……“எனினும், இந்தக் கேள்வி (ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சி இந்தியாவில் ஏற்படாதது ஏன்?) இந்திய வரலாற்றில் அறிவியலின் வளர்ச்சிபற்றியது மட்டுமல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்வது போல் ‘பிரிட்டிஷ் காலத்துக்கு முந்தைய இந்தியாவின் கௌரவமற்ற, தேக்க நிலையிலான காட்டுவாழ்க்கை’ என்பதன் கேள்வியாகும். இந்தியாவின் கிராமிய சமுதாயம் (மார்க்ஸ் அவற்றைப் பார்த்தது போல்) ‘ ஜாதி மற்றும் அடிமை வேறுபாடுகளால் கறைபடுத்தப்பட்டிருந்தது.’ மார்க்ஸ் மேலும் கூறுகிறார்: அப்படிப்பட்ட மிருகத்தனமான மிருக வழிபாடு, இயற்கையின்மீது இறையாதிக்கம் செலுத்தவேண்டிய மனிதன், ஹனுமானுக்கும்(குரங்கு), பணத்திற்கும், பசுவுக்கும்(சபலா) பயபக்தியுடன், மண்டியிட்டு அடிபணிவது போன்ற உண்மைகளில், தன்னுடைய தாழ்ந்த நிலையைக் காட்டிக்கொண்டான்.’
இதனுடைய அரசியல் விளைவு, நாடு தன்னுடைய சுதந்திரத்தை இழந்ததென்று மார்க்ஸ் கூறுகிறார்.” (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-10)



“(ஐரோப்பிய) மொழிகளுக்கும், மதங்களுக்கும் ஆதராவாக இருந்ததாக மார்க்ஸ் கூறுகிற நமது நாட்டிற்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது என்பதைக் கவனிக்கும்போது, நமது நாடு பழைய நிலைகளிலிருந்து வீழ்ச்சியுற்று, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பிருந்த நிலைக்குத் தாழ்ந்த்து ஏன்? எப்படி? என்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்: ‘பிராமண மேலாதிக்கத்தின் கைகளில் ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் தோல்வி, கருத்துமுதல்வாதத்திடம் பொருள்முதல்வாதம் அடைந்த தோல்வி, ஆகியவை இந்திய நாகரிகத்தினதும் இந்தியக் கலாச்சாரத்தினதும் வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. இது இறுதியில் தேச சுதந்திரத்தை இழப்பதற்கு இட்டுச் சென்றது.” (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-10)

கருத்துமுதல்வாதத்திடம் பொருள்முதல்வாதம் அடைந்த தோல்வி, என குறிப்பிடப்படுவதன் பொருளென்ன? இ.எம்.எஸ். நம்பூதிபார்ட் அவர்களிடமே இதற்கான விளக்கத்தைக் கேட்போம்.
“மறுபுறத்தில் இந்தியாவில் இந்த இரண்டு தத்துவார்த்தப் பிரிவினருக்கு இடையேயான போர், ஒன்றன் தோல்வியிலும் (லோகாயதவாதம் / பொருள்முதல்வாதம்) மற்றதன் ஆதிக்கத்திலும் (வேதாந்தம் / கருத்துமுதல்வாதம்) முடிவடைந்தது. எனினும் இதுவோர் சமத்துவமற்றபோர். சமுக அரசியல் அமைப்பின் (ஜாதி ஆதிக்க ஆட்சி) முழுச்சக்தியும் கருத்து முதல்வாதத்திற்கு சாதகமாகவும், பொருள் முதல்வாதப்பிரிவுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. நம் நாட்டில் வெற்றியடைந்ததும், வீழ்ச்சியடைந்ததும், வெறுமனே இரண்டு தத்துவங்களல்ல; அவை இரண்டும் இரு சமுக வர்க்கங்கள். இவ் வர்க்கங்கள் முன்சொன்ன இரு தத்துவங்களையும் தமது ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயுதங்களாகப் பயன் படுத்திய இரு ஜாதிகளாகும். தோல்வி கண்ட லோகாயதவாதம் / பொருள்முதல்வாதம் அடக்கியாளப்பட்ட ஜாதியின் தத்துவார்த்த ஆயுதம். வேதாந்தம் / கருத்துமுதல்வாதம் ஆதிக்கம் செலுத்திய ஜாதியின் ஆயுதம். ஆகவே, சங்கரரினதும் அவரின் தத்துவத்தினதும் வெற்றி, பிராமணர் மற்றும் ஆதிக்கஜாதிகளின் வெற்றியாகும். இந்திய சமுகத்தின் மற்றப்பகுதியின் தோல்வியாகும். (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-11)

மற்றப்பகுதியின் தோல்விதான் இந்தியாவின் தோல்வியாகிறது. பார்ப்பனிய குடுமபத்தில் இருந்து தோன்றிய சகோதர மதங்கள் அனைத்தினதும் தத்துவார்த்த ஆயுதம் வேதாந்தமே. பார்ப்பனிய மதக்குடும்பங்களின் வெற்றி ஒரு நாட்டின் (இந்தியா) தோல்வியாக முடிகிறது.
அவரே சொல்கிறார்: “…….அதைவிட துரதிருஸ்டமானது, சமநிலையற்ற போரில் பொருள்முதல்வாதிகளுக்கு ஏற்ப்பட்ட தோல்வி, ஆயிரம் ஆண்டு அறிவுத்துறையினதும், சமுக-அரசியல் துறையினதும் பின்னடவின் ஆரம்பாமாகவும், நமது நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதிலும் முடிந்ததுதான்.” (மார்க்ஸிஸ்ட், அக்டோபர் 1989, தொகுப்பு-1, இதழ்-4, பக்கம்-13)
மதம் தேசியம் ஆகிய இவ்விரண்டுக்கும் இடையேயான இத்தொடர்பை யாராலும் மறுக்கமுடியுமா?

தோல்வி கண்ட தத்துவார்த்தங்களில் பௌத்தமும் ஒன்று என்பதை மறக்கக்கூடாது. பௌத்தத்தை தோற்கடித்ததுதான் வேதாந்தம் பெற்ற வெற்றிகளில் மிகப் பெரிய வெற்றியாகும். தொன்மைக்கால பொருள்முதல்வாதக் கருத்துப் பள்ளிகளான நியாயம், வைகசிகம், சாங்கியம், யோகம் (சாங்கியத்தின் துணைப்பள்ளி), மிமாம்சம், லோகாயவாதம் போன்றவை மதங்களாகாப்படவில்லை. இவற்றை மதங்களாக்க யாராலும் முடியவில்லை. ஆனால் பொருள்முதல்வாதத்திற்கு மிக அருகாமையில் இருந்த பௌத்தம் மதமாக்கப்பட்டுவிட்டது. முதலில், பௌதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டதின் ஊடாக பௌத்தத்தில் துளியளவிலிருந்த கருத்துமுதல் வாதக் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டன. அதில் பெருமளவிற்கு இருந்த பொருள்முதல்வாதக் கருத்துக்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. பின்னர் பௌத்தம் ஒரு மதமாக்கப்பட்டது. அதற்கடுத்ததாக, அம்மதம் உடற்பல வன்முறைமூலம் தோற்கடிக்கப்பட்டது. இந்தியாவினதும் இந்திய மக்களினதும் தோல்வியை உச்சநிலைக்குக் கொண்டு போனது பௌத்தத்தின் தோல்விதான். இரு பிறப்பாளர்களால் மறுபிறப்புக் கொடுக்கப்பட்ட பௌத்தந்தான் மஹாயன பௌத்தமாகும்.

ஸ்ரீ லங்கா தேசியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றி சற்று நோக்குவோம். ஸ்ரீ லங்கா அரசும், சிங்கள மக்களும் இந்திய எதிர்ப்புக் கொண்டவர்கள் என்பது, ஸ்ரீ லங்காவின் இந்தியத் தொடர்பை அவதானித்து வருபவர்கள் அனைவருக்கும் தெரியும். இதுவரை இந்தியா ஸ்ரீ லங்காவின் பொருளாதரத்தை சுரண்டுவதில் ஒரு பெரும் பாத்திரம் வகித்ததில்லை. இலங்கைப் பொருளாதாரத்துக்கு எதிராகச் செயல் பட்டதும் இல்லை. அவ்விதமிருக்க  இந்தியாவையிட்டு ஏனிந்த அச்சம்? ஏனிந்த சந்தேகம்?



சிங்கள மக்களின் மரபுவழி சுயசார்ப்புப் பொருளாதாரத்தை சீரழித்த பிரித்தானையாவையிட்டுக்கூட இவ்வளவு வெறுப்பில்லை. இந்திய எதிர்ப்பு ஸ்ரீ லங்காத் தேசியத்தின் மரபுவழிக் குணாச்சமாக மாறியது ஏன்? எவ்விதம்? இலங்கையின் நிலையை இந்தியாவும் புரிந்தே வைத்துள்ளது போலும். இதனால்தான் ஒரு மனநோயாளியுடனான உறவைக் கையாள்வதுபோல் மிகப்பவ்வியமாகவும். அளவுக்கு அதிகமான நிதானத்துடனும் இலங்கையுடனான உறவைப் பேணிவருகிறது போலும்.

தமிழ் நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளை ஒட்டிய வெறுப்பான நினைவுகள்தான் இதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. படையெடுப்புகள் நடந்தது உண்மை, ஆனால் அவற்றில் பல இலங்கை மன்னர்களின் ஒத்துளைப்புடன்தான் நடந்துள்ளன. அண்ணனை எதிர்க்க தம்பியும், அப்பனை எதிர்க்க மகனும், கணவனை எதிர்க்க மனைவியும், மாமனை எதிர்க்க மருமகனும் தமிழ் நாட்டு மன்னர்களின் உதவியை நாடியதாகத்தானே வரலாறுள்ளது. சிங்கள மன்னர்களிடம் தமிழ்நாட்டுத் தளபதிகளும், தமிழ் மன்னர்களிடம் சிங்களத் தளபதிகளும் பணிபுரிந்துள்ளார்கள். இலங்கையின் பாரம்பரிய குடிகளான நாகரையும் இயக்கரையும் அடக்குவதற்கு இந்தியத் தமிழ் மன்னர்களினது உதவியும் பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இவை எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை மக்கள் அனைவருமே வந்தேறுகுடிகளின் வம்சாவழியினர்தான். இஸ்லாமியர் தவிர அனைவரும் இந்திய வம்சாவழியினர்தான். அதிலும் அனைவரும் அவேதர்கள்தான். வேதர்களின் குடியேற்றங்கள் இங்கு நடைபெறவில்லை. மன்னர்கள் காலத்துக்குகாலம் பார்ப்பனியர்களை அழைத்துவந்தாக வரலாறு உண்டு. அனால் அவர்கள் இங்கு ஒரு தனிப்பரம்பரையாக உருவாகவில்லை.

யாழ்ப்பாணத்து ஐயர்மாருக்கு, இந்திய பார்ப்பனியர்களுக்கு இருக்கும் சமுக-அரசியல் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. இந்திய ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரமே இவ் ஐயர்மாருக்கும்  இருந்தது. இதிலிருந்து ஒன்று கவனிக்கப்படவேண்டும் இலங்கை பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படவில்லை. இந்தியப் பார்பனியத்தின் அகணட பாரதக் கனவு இலங்கைத்தீவில் எடுபடவில்லை. பார்ப்பனியச் சமுகக் கட்டமைப்பையும் பார்ப்பனிய மதங்களையும் இலங்கையில் நிலைநிறுத்த பார்ப்பனியம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. இலங்கையில் குடியேறிய அனைத்து இந்தியர்களும் குலங்கள் நிலையில் வளர்ச்சி அடைந்திருந்த அவேதர்களே. இன்று சிங்களக் கரையார்கள் தம்மைச் சைத்திரியர்கள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் எவருமே வேத மரபின்படியான சைத்திரியர்களல்ல. அனைவரும் சூத்திரர்களே. இதனால்த்தான் இஸ்லாமும் கிறிஸ்தவமும் இலங்கைக்கு வருமுன்னர், தமிழர் சிங்களவரென்ற பேதமில்லாமல் இலங்கை மக்களில் ஏகப்பெரும்பான்மையினர் (சிங்களவர்களில் அனைவரும், தமிழர்களில் பெரும்பான்மையினர்) பௌத்த மதத்தைத் தழுவியிருந்தனர். பௌத்தம் பொருள்முதல்வாதத்திற்கு நெருங்கிய தத்துவமாகும். அது அவேதர்களின்  தத்துவமாகும். பார்ப்பனியத்தை முழுமூச்சாக எதிர்த்து நின்ற தத்துவமாகும். பார்ப்பனிய மதத்திற்கு எதிரான நிலையில் இருந்த, தீவிர பௌத்த சார்பு களப்பிரர் ஆட்சி இலங்கைவரை பரவியிருந்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வேறெந்த வழியிலும் இலங்கையின் பௌத்தத்தை வீழ்த்த முடியாது போன இந்திய பார்ப்பனியம் பௌத்ததை வீழ்த்த தத்துவார்த்த வழியைத் தேர்ந்தெடுத்தது. இந்திய மண்ணில், பார்பனியத் திணிப்பின் முதலாவது நடவடிக்கை மக்களின் தொன்மைக்கால கடவுளர்களை புராணத்துக்குள் சிறைபிடித்து மும்மூர்த்திகளான மைய தெய்வங்களின் துணைக்கடவுள்களாக்கி கோவில் கவருவறைக்கு வெளியே காவல் தெய்வங்களாக நிறுத்தி வைப்பதுதான். இந்தத்தந்திரம் இலங்கையின் சிங்களமக்கள் மத்தியில் எடுபடவில்லை. மூல பௌத்தம் அவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாத படியால், சிங்கள மக்கள் மத்தியில் தொன்மைக் கடவுளர்கள் எவரையுமே காணமுடியாதுள்ளது. ஆனால் இலங்கைப் பௌத்தம், இயக்கர்களினதும் நாகர்களினதும் தெய்வங்களை அழித்தது. தொன்மைத் தெய்வங்களைப் பற்றிய கௌதம புத்தரின் மௌனம் பௌத்ததைத் திரிக்க துணைபுரிந்தது. இதனால் பௌத்தம், இலங்கையில் இயக்கர்களுக்கும் நாகர்களுக்கும் எதிராக பல போர்களையும் நடத்தியுள்ளது. அவர்களும் அவர்களை அடையாளப்படுத்தும் பண்பாட்டு அடையாளங்கள் வரலாற்றுச் சுவடேயில்லாமல் அழிக்கப்பட்டன. இலங்கை பௌத்தத்தின் இனச்சுத்திகரிப்பு வன்முறையின் தொடக்கப்புள்ளி இப் போர்கள்தான்.

ஆனால் இலங்கைத் தமிழரிடையே தொன்மைக்காலத் தெய்வங்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இங்கும் இயக்கர்களுக்கும் நாகர்களுக்கும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன, ஆனால் பார்ப்பனிய வழிமுறையும் பின்பற்றப்பட்டுள்ளதுபோலும். இது எவ்விதம் என்பது ஆராயப்படவேண்டும். தெய்வ சுவீகரிப்பில் அல்லது தத்தெடுப்பில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பார்ப்பனியம் தனது தத்துவார்த்த ஆயுதத்தை கைகளில் எடுத்துக்கொண்டு இலங்கைப் பௌத்ததிற்கு எதிரான தத்துவார்த்ப் போராட்டத்தில் இறங்கியது. இந்திய பௌத்த மக்களைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மஹாயான பௌத்தம் எனும் தத்துவார்த்த ஆயுதம் இலங்கையிலும்  பிரயோகிகப்பட்டது. ஆதிசங்கர் பிரசன்ன பௌத்தர் எனவும் அழைக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும். பிரசன்ன என்பது ஒழிவு மறைவான என்று அர்த்தப்படும். பௌத்ததை எதிர்கொள்ளக்கூடிய முறையில் வேதம் சுத்திகரிப்புச் செய்யப்படவேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளாத பழமைவாத வேதாந்திகள் ஆரம்பநாட்களில் ஆதிசங்கரை இவ்விதம் கேலிசெய்தார்கள். எவ்விதமோ பௌத்ததை வேதமயப்படுத்தும் மிகத் திறமைமிக்க பௌத்த வேதாந்திகள் தமிழ்நாட்டில் உருவானார்கள். தமிழ் நாட்டு பௌத்தம் மஹாயன பௌத்தமாகியது. இப்பிரிவைச்சார்ந்த பௌத்த துறவிகள், தமிழ்நாட்டிலும் தமது கருத்தைப் பரப்ப முற்பட்டார்கள், இதன் காரணத்தால் இலங்கைஇரு உள்நாட்டு யுததங்களுக்கு முகங்கொடுத்தது.

மஹிந்த தேரோ எனும் தமிழ்நாட்டு தலைமைப் தத்துவார்த்த வித்தகப் புத்ததுறவியொருவர் இலங்கையில் மரணதண்டனையும் பெற்றார். மஹாயன இலங்கையில், குறிப்பாக சிங்களவரிடையே தோல்வி கண்டது. ஹீனாயான வெற்றி பெற்றது. ஆனால் தமிழர்களின் நிலை அவ்விதம் இல்லைப்போல் தெரிகிறது இது ஆராயப்படவேண்டும். ஹீனாயான வெற்றி பெற்றது என்பதன் அர்த்தம் மூல பௌத்தம் வெற்றி பெற்றதென்பதல்ல. இலங்கையின் இன்றைய பௌத்தம் ஹீனாயானமாக இருந்தாலும், அது தனது மூலத்தை இழந்த பௌத்தந்தான். குலங்களின் அதிகார சச்சரவுகளுக்கு ஏற்ற முறையில் திரிவுபடுத்தப்பட்ட பெற்ற பௌத்தந்தான்.  ஆனாலும் பௌத்தம் இலங்கையில் தக்கவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்ததுபோல் அது துடைத்தொழிக்கப்படவில்லை. ஆனால் இத் தக்கவைப்பு, இந்தியப் பாணியிலலாமல் ஸ்ரீ லங்காப் பாணியில் சுத்திகரிக்கப்பட்ட (பொருள்முதல்வாதக் கூறுகள் அகற்றப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட) பௌத்தமாகியது. இந்தியா, பௌத்ததை அழிப்பதற்காகவே பௌத்தத்தை சுத்திகரித்தது. இந்தியா × ஸ்ரீ லங்கா என்ற வராலாற்று தொடர் நிகழ்வுக்கான அடிப்படைக் காரணம் இதுதான். ஸ்ரீ லங்கா தேசியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையேயான உறவு இதுதான். ஸ்ரீ லங்காத் தேசியத்தின் ஆணிவேர் பௌத்தத்தை இந்திய பார்ப்பனியத்தில் இருந்து பாதுகாப்பதில் இருந்தே ஆரம்பிக்கின்றது. வேதாந்தம், இந்திய ஆளும் வர்க்கத்தின் தத்துவமாக இருப்பதுபோலவே, பௌத்தம், ஸ்ரீ லங்கா ஆளும் வர்க்கத்தின் தத்துவார்த்த ஆயுதமாக உள்ளது. இரு ஆளும் வர்க்கங்களும் இருவேறு தத்துவங்களை தமது ஆயுதங்களாகக் கொண்டுள்ளன. மதம் ஆளும் வர்க்கத்தின் தத்துவார்த்த ஆயுதம் என்பதை இங்கு மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளவும். ஸ்ரீ லங்கா ஆளும் வர்க்கம் தனது தத்துவார்த்த ஆயுதத்தில் தனக்குள்ள பிடிமானத்தை எக்காரணம் கொண்டும் தானாக இழக்கிக் கொள்ளாது. அவ் ஆயுதத்தை அது மேலும் மேலும் இறுகத் தழுவிக்கொள்ளும். சுத்திகரிக்கப்பட்ட பௌத்தம் என்ற தனது சிந்தனைப்பள்ளியைவிட்டு அது ஒரு போதும் விலகிவராது.

மஹாயனவுக்கு எதிரான சமகால நிகழ்வு ஒன்று இங்கு குறிப்பிடப்படுகிறது: செப்ரம்பர், 2011-இல், கொள்ளுப்பிட்டியில் (கொழும்பு நகரின் மத்தியில் உள்ளது) அமைந்துள்ள ஜப்பானிய பௌத்த கோவில் ஒன்று சுமார் 100 பௌத்தர்களால் தாக்கப்பட்டது. தேரவாட பிரிவின் பௌத்த பிக்குகள் இத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினாரகள். ஜப்பான் பௌத்த கோவில் ஜப்பானில் பின்பற்றிவந்த மஹாயனப் பிரிவைச் சொந்ததாகும். அது இலங்கையில் வாழும் ஜப்பானியர்களுக்கானது. ‘இலங்கையில் தேரவாட பௌத்தமே இருக்கவேண்டும், மஹாயன இருக்கக் கூடாது.’ என அப்பிக்குகள் ஆர்ப்பரித்தார்கள். ஜப்பான் ஸ்ரீ லங்காவின் நட்பு நாடு என்பது கூட கணக்கில் கொள்ளப்படவில்லை. (தகவல் May 17, 2012 Colombo Telegraph)
பௌத்ததைப் பாதுகாக்க எழுந்த ஸ்ரீ லங்கா தேசியம் எவ்விதம் தமிழ் எதிர்ப்புத் தேசியமாகவும் மாறியது? மொழிவழி இனக்குழுமக் குணாம்சம் பிற்சேற்கைதான். தோற்றம் மதமே, அப்போது மொழிபேதம் இருக்கவில்லை. தமிழர், சிங்களவர் அனைவரும் ஒரு மதக்குளுவினராகவே பார்க்கப்பட்டனர். அத்துடன் வேதர், அவேதர் பேதம் இலங்கையில் காணப்படவில்லை. அனைவரும் அவேதர்களே. ஆகையினால் இந்தியாவில் இருந்ததுபோல் தெய்வீகமொழி (சமஸ்கிரதம் உட்பட ஆரிய மொழிகள்), நீசர் மொழி (தமிழ் உட்பட பிற திராவிட மொழிகள்) என்ற மொழி ஏற்றத்தாழ்வு இலங்கையில் இருக்கவில்லை. இது மிகப்பிற்பட்ட காலத்தில் வந்ததேயாகும்.
இதற்கான காரணங்கள் இரண்டாக இருக்கலாம். மீண்டும் மதமும் தேசியமும் தொடர்பு படுவதைக் காணலாம். களப்பிரர் காலத்தில், பௌத்தம் பேணிப்பாதுகாகப்பட்டது, பாளி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. பல பாளி மொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பல பௌத்த தமிழ் இலக்கியங்கள் தோன்றின. பாளிமொழியில் பாண்டித்துவம் பெற்றிருந்த பல தமிழ் பௌத்த தத்துவப் பேரறிஞர்கள், சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தாரகள். அதேபோல் பாளிமொழியில் பாண்டித்துவம் பெற்றிருந்த பல சிங்ஹள் பௌத்த தத்துவப் பேரறிஞர்களும் இருந்தார்கள். இவர்கள் தமிழ் மொழியில் புலமைத்துவம் பெற்றிருந்தமை பற்றித் தெரியவில்லை, ஆனால் தமிழைப் புறக்கணிக்கவில்லை. பாளி, தமிழையும் சிங்களத்தையும் இணைக்கும் மொழியாக இருந்தது. பாளி பௌத்த அறிவியலின், அறிவியல் மொழியாக இருந்ததேயல்லாமல், ஒரு மத ஆதிக்க மொழியாக இருக்கவில்லை. அரபு போன்றோ, லத்தீன் போன்றோ, சம்ஸ்கிரதம் போன்றோ, அது ஒரு போதும் தன்னை தெவீக மொழியெனக் கூறிக்கொள்ளவில்லை. பிறமொழிகளை நீசர்களின் மொழியெனக் கூறிக்கொள்ளவுமில்லை. நீசர்களின் (அடிமைகளின்) தத்துவமான பௌத்தம் யாரை நோக்கி “நீ நீசன்” என்று சுட்டிக்காட்ட முடியும். அது தன்னை நோக்கித்தான் அவ்விதம் சுட்டிக்காட்டமுடியும். அவ்விதமானால் ஸ்ரீ லங்காப் பௌத்த தேசியம் எங்கிருந்து மொழி அபிமானக் குணாசத்தைப் பெற்றது?
களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பௌத்தத்திற்கு எதிராக பக்தி இயக்கம் தென் இந்தியா எங்கணும் வீறுகொண்டெளுகிறது. இது படிப் படிப்படியாக இந்தியா எங்கணும் பரவுகிறது. சமண மதங்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெறுகிறது. பௌத்தத்தின் தத்துவம் ஏற்கனவே பல்வீனப்படுத்தப் பட்டிருந்தது.  ஆதிசங்கரர் அதில் வெற்றிபெற்றிருந்தார். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சியுடன் பௌத்தம் ஜைனத்தின் அரசியல் அதிகாரமும் வீழ்ந்தது. தற்பொது அதை இந்திய நிலப்பரப்பில் இருந்து துடைத்தெறியும் செயல் ஆரம்பமானது. பக்தி இயக்கம் இதில் பெரும் வெற்றி பெற்றது. பலபத்தாயிரக் கணக்கான பௌத்தர்கள் பல் வெறு இடங்களில் களுவேற்றி வதஞ்செய்யப்பட்டார்கள். தன்னால நடத்தப்பட்ட முள்ளிவளைக்காக ஸ்ரீ லங்கா அரசாங்கம் மனம் வருந்துவதாக நடிக்கின்றது. ஆனால் சைவம் நடத்திய முள்ளிவளைகளுக்காக சைவம் இன்றும்பெருமைப் பட்டுக் கொள்கிறது. அதன் நினைவுநாள் இன்றும் மதுரையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு மதவெறித் திருநாள் என்ற எதிர்ப்பு திராவிட இயக்கத்தாரிடம் இருந்துங்கூட வந்ததாகத் தெரியவில்லை. சைவம் இலங்கைத் தமிழரிடையேயும் பரவியது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில். சைவம் தமிழை முருகனின் மொழியாக அடையாளப்படுத்திக் காட்டியது. தாமிழுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்து கொடுபட்டது. வேதர்களின் வழியில் சைவர்களும் பயணித்தனர்.
சைவத்தின் எதிர்விளைவுதான் ஸ்ரீ லங்கா பௌத்தம் மொழியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டது எனக் கூறலாமா? இது ஆராயப்படவேண்டும். இதுவும் மதஞ்சார்ந்த ஒரு பிரச்சனையேயாகும்.
கடந்தகால வரலாறுகள் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், இன்றைய வரலாற்றின் பிற்போக்குக் கூறுகளை நியாயப்படுதுவதாகவும் அமையலாம். தகவல்கள் வெறுமனே தகவல்கள்தான அவற்றிற்கு உயிரில்லை. அத தகவல்களைப் பயன் படுத்துபவனின் அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் அவை உயிர் பெறுகின்றன. கத்தோலிக்க மதபீடங்கள் மத்திய காலத்தில் பல இயற்கை அறிவியலாளர்களை  கொன்றன அல்லது நடைப்பிணங்களாக்கின. இது ஒரு உண்மையான தகவல். இதற்காக இன்றைய அறிவியலாளர்கள் இன்றைய கிறிஸ்துவ மதபீடத்தைப் பளிவாங்கமுடியுமா? இவ்வித கூட்டம் ஒன்று இருக்கின்றது என்பதற்காக, வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டிருக்கும் இவ் உண்மைகளைத் தேடித் தேடி அழிப்பதோ அல்லது மறைப்பதோ முறையாகுமா? பதில் வாசகனிடமே விடப்படுகிறது. இந்திய வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி ஆராயும் ரொமிலா தாப்பர் அவர்கள், முடிவில் பின்வருமாறு கூறுகிறார்: “ வரலாற்றில் நடந்த எதையும் ஓரங்கட்ட முடியாது. அவ்வாறு செய்வதானால் பெரும் தவறு இழைக்கப்படுகிறது. வரலாற்றில் உள்ள கசப்பான நிகழ்ச்சிகளையும் வெளிக்கொணர வேண்டும். என்ன நேர்ந்தது என்றும் இந்த அணுகுமுறை ஏன் நிலவியது என்றும் விளக்க வேண்டும். போர்த்துக்கீச பாதிரிகள்தான் மசூதிகளையும் கோவில்களையும் தகர்த்தனர் என்று பழிசுமத்தும் அநாகரிகமற்றவர்கள்போல் நடந்துகொள்ளக்கூடாது. கடந்தகாலத்தை சரியாக வெளிப்படுத்துவது முக்கியமானது. அவர்கள் கோவில்களை இடித்ததனால் நாம் மசூதிகளை இடிக்கவேண்டுமெனும் வாதம் அபத்தமானது. நாம் கடந்த காலத்தை மாற்றமுடியாது. அதை முற்றிலும் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆனால கடந்ததை மேலும் அறிந்துகொள்ள முயலலாம். அதைப்பற்றித்தான் வாதம் அமைந்துள்ளது.” (மதச்சார்பின்மையும் நமது எதிர்காலமும்- இந்திய மாணவர் சங்கம்-பக்கம்34)
தேசியத்திற்கும் மதத்திற்குமிடையயான தொடர்பையும் அதிகரித்துவரும் அதன் ஆபத்தையும் புரிந்து கொள்வதற்குத் துணையாக மேலும் சில தகவலகளுடன் கூடிய விளக்கங்கள்:
May 17, 2012 Colombo Telegraph இதழில் An open letter to  Sri Lanka Anglican Bishop எனும் தலைப்பில் வெளியான கட்டுரையொன்றின் சிலபகுதிகளை இங்கு குறிப்பிடுகிறேன். கட்டுரையாளர் ஒரு சிங்ஹள உயர் கிறிஸ்துவ புத்திஜீவி. தற்ப்போது அவுஸ்ரேலியப் பிரஜையாக அவுஸ்ரேலியாவில் உள்ளார்.
“அரசியல் செயற்பாடுள்ள பௌத்த துறவிகள் இனியில்லை என்றளவிற்கு கெடுக்கப்பட்டுள்ளார்கள். இனி, ஸ்ரீ லங்காவிற்குத் தேவையாகவுள்ளது, அரசியல் செயற்பாடுள்ள கிறிஸ்தவ பாதிரிகள்தான் போலும், இவ்வித பாதிரிமார்களின் உருவாக்கம், ஸ்ரீ லங்காவை அழிக்குமளவிற்கு புற்றுநோய்போல் பரவிவருகிறது. உலகப் பெரும் மதங்களில் ஒன்றான பௌத்தத்தின் மறுமலர்ச்சிக் காலம் நடைமுறைக்கு வந்துவிட்டதானால், அடுத்த பெரிய மதமான கிறிஸ்த்துவத்தின் மறுமலர்ச்சிக் காலம் ஆரம்பிப்பதற்கான காலம் கனிந்து விட்டது எனக் கூறலாம்.”
அரசியல் செயற்பாடுள்ள பாதிரிகளின் உருவாக்கமென இவர் இங்கு குறிப்பிடுவது, முற்றுமுழு அதிகாரத்துவ மஹிந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாதிரிகளையே ஆகும். கிறிஸ்தவ மறுமலர்ச்சி அக்கிறிஸ்தவர்களுக்கும் எதிராக அமையவேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். பயங்கரவாதத்தின் ஆரம்ப காலகட்டக் குறிக்கோள் துரோகிகள்தான் என்பதை என்றென்றும் மறவாதிருப்போமாக.
அவரின் கீழ்வரும் கூற்று இதற்க்கு ஆதாரமாக அமைகின்றன: “மஞ்சள் ஆடையினுள் புகுந்துள்ள, பௌத்த பிக்குகளெனும் கொலை வெறிக்கூட்டத்தின் நடவடிக்கைகளினால், மகத்தான மதங்களில் ஒன்றான பௌத்தம் சீரழிந்து போயுள்ளது. மற்றோர் மகத்தான மதமான கிறிஸ்துவம், உங்களாலும் (குருநாகல அங்கிலிகன் பிஷப்), உங்களைப் போன்றவர்களாலும் அரசியல் மயப்படுத்தப்பட்டுவருகிறது.”
“10கிறிஸ்தவ பாதிரிமார், பிரதானமாக றோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர், கடத்துப்பட்டுவிட்டனர் அல்லது சர்வசாதரணமாக காணாமல் போய்விட்டனர்.” எனக் கூறும் அவர், நிலமையை இவ்விதம் விழக்குகிறார். “தொலை-தூரப் பார்வையோ அல்லது அண்மிய-தூரப் பார்வையோ பொருத்தமானது என நான் கருதவில்லை. இது விவாதத்துக்குரிய வெற்று அபிப்பிராயங்களல்ல. காலதாமதமாகாமல், எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய செயல்களாகும். காலம் போய்க்கொண்டே இருக்கின்றது. காலங்கடந்துவிட்டது என்று கூறினாலுங்கூட அது தப்பில்லை. இந்த சூழலை (மத ஒடுக்குமுறை) மாற்றியமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் கடந்துவிட்டனவோ என்று தோன்றுகிறது. அத்துடன் கூடவே ஸ்ரீ லங்காவின் எதிர்காலமும் தொலைந்துவிட்டது.”
எரியும் பிரச்சனையென அடிக்கடி கூறப்பட்ட வார்த்தைகள் இங்கும் ஒலிக்கின்றன. தேசியத்தை மதமயப்படுத்த கிறிஸ்தவர்களும் களம் இறங்கத் தயாரிகிவருகிறார்கள் என்பது புரிகிறதா? இதே கட்டுரையில் முன்வைக்கப்படும் தீர்வு இதைப் புரியவைக்கும்.




“மத சகிப்புத் தன்மையையும் தாண்டி, இந்த மதக்குளுக்கள் அனைத்தும் (கிறிஸ்துவம், இந்து, இஸ்லாமியம்) சிங்ஹள-பௌத்த இன-மதவாத பேரகங்காரவாதிகளுக்கும், இவ் வுணர்வைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்களையும், ஆட்சியில் தொடர விரும்புவர்களையும் எதிர்த்து ஒன்று படுவார்களானால், ஸ்ரீ லங்கா முன்னோக்கிச் செல்லும். ஆனால் இது நடைபெறுமா என்பது சந்தேகமே. ஏனெனில், முழு நாட்டினதும் குறிப்பாக  தமிழர்களினதும் பார்வை இது விடயத்தில் பலவீனமானதாகவே உள்ளது.” தமிழ்த் தேசியம் மதவாதத் தேசியமாக மாறும்படி ஆலோசனை முவைக்கப்படுகின்றது
ஸ்ரீ லங்காவின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு (Bill on Prohibition of Forcible Conversion of Religions ) எதிராக National Christian Evangelical Association of Sri Lanka, World Evangelical Alliance Religious Liberty Commission, The Voice of the Martyrs ஆகிய அமைப்புக்கள் (இவை மூன்றும் பாதிரிவேத அமைப்புகள்) ஒன்றிணைந்து கடந்த சில வருடங்களாக இலங்கையிலும், அனைத்துலகளவிலும் இயக்கம் நடத்திவருகின்றன. United States Commission on International Religious Freedom (USCIRF) எனும் அமைப்பும் இவர்களுடன் கைகோர்த்துள்ளது. இவ் அமைப்புகள் அனைத்தும் ஸ்ரீ லங்கா அரசை அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் அரசாக ஆக்குவதில் நாட்டங்காட்டி வருகின்றன.
கிறிஸ்தவர்கள், பௌதத்தையிட்டு கொண்டுள்ள கடுங்கோபத்தை பின் வரும் வாக்கியங்கள் வெளிப்படுத்துவதைக் கவனிக்கவும்:
“ஸ்ரீ லங்காவில், சுமார் 20,000 புத்தபிக்குகள் உள்ளார்கள். இவர்கள் மேல்மட்டத்தில் இருந்து அடிமட்டம்வரை இரு கூறுகளாகப் பிரிந்துள்ளனர். அரைப்பங்கினர், சிலவேளைகளில் அதற்கும் குறைவாக இருக்கலாம், கௌதம் புத்தரின் வழிகாட்டலின்படியான உண்மையான புத்தர்களாக உள்ளனர். அடுத்த அரைப்பங்கினர் மஞ்சள் அங்கி அணிந்த பொறுக்கிகளாகவும், கையாட்களாகவுமே யுள்ளனர். அவர்கள் அங்கி அணிந்த அரசியல்வாதிகளேயாகும். அவர்கள் ஆகக் குறைந்தது தமது தலையை வழிப்பது கூட இல்லை. அவர்கள் தமக்கென்று அரசியல் கட்சியைக்கூட வைத்துள்ளார்கள், பாரளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். கௌதம புத்தர் அவர்களை இப்படியெல்லாம் இருக்கும்படி கூறவில்லை. இவர்கள்தான் இலங்கையின் அசிங்கங்களாகும்.”( May 17, 2012, COLOMBO TELEGRAPH )
“ஐந்து வருடங்களுக்கு முன்னால் Washington Post  சஞ்சிகை என்னைப்பேட்டி கண்டபோது “நீங்கள் தற்செயலாக ஸ்ரீ லங்காவின் ஜனாதிபதி ஆக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று” கேட்டார்கள். எந்தத் தயக்கமும் இன்றி நான் கூறிய பதில் “ அனைத்து பௌத்த துறவிகளும் தத்தமது தேவாலயங்களுக்குச் செல்ல வேண்டும் எனக் கட்டளையிடுவேன். கௌதம புத்தர் போதித்து போல், அவர்கள் மதிய நேரத்தில் பிட்சா பாத்திரத்துடன் தமது உணவுக்காக வீதிகளுக்கு வரலாம். இந்த நேரம் தவிர வேறு எந்த நேரத்திலும் பிக்குகள் வெளியில் வரக்க்கூடாது. அதுவும் குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளிலோ, குளப்பம் விளைவிக்கும் செயல்களிலோ ஈடுபடக்கூடாது. அவ்விதம் ஈடுபடுவார்களானால், அவர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வளங்கப்படும். அப்போதுதான் நீதியுடன் கூடிய ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமாகும்.” ( May 17, 2012, COLOMBO TELEGRAPH ) நாஸ்தீக மணம் கமழும் மிகக் கடுமையான வார்த்தைகள். ஒரு சாதாரண கிறிஸ்தவனின் வாயில் இருந்து வந்திருந்தால் அவை புரிந்து கொள்ளப்படக் கூடியது, ஆனால், வருங்கால ஜனாதிபதியென்று Washington Post குறிப்பிடும் ஒருவரின் வாயில் இருந்து இவ்வித வார்த்தைகள் வருவது ஒரு ஆபத்தின் அறிகுறியே. ‘மத’ யானைகள் இலங்கை மண்ணில் மோதிக்கொள்ளப் போகின்றன என்பதை அறிவிக்கும் ஒரு மணியோசையாகவே இதைக் கருதலாம்.
இவ்வாய்வின் அவசியத்தைப் புரிந்துகொள்ள மேலும் ஆதாரங்கள் தேவைதானா? அவசியமானால் தூங்குவதுபோல் நடிப்பவின் காதை செவிடாக்கலாமே தவிர, அவனை எவராலும் எழுப்பமுடியாது.

தொடரும்……….



நன்றி:  எதுவரை on June 09, 2012


No comments: