மேற்கண்ட தலைப்பிலான ஒர் ஆய்வுக்கட்டுரையை தொடர்கட்டுரையாக இவ்விதழில்
எழுத அனுமதி தந்த ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.ஏற்கனவே எழுதிவைத்த
கட்டுரையை பகுதி பகுதியாக இங்கு பிரசுரிக்கவில்லை. வாசகர்களின்
ஆக்கபூர்வமான பின்னூட்டல்களையும், நேரடியான கருத்துப் பரிமாற்றங்களையும்
உள்வாங்கிய வண்ணமே கட்டுரை தொடரும். இவ் ஆய்வை ஒரு புலமைசார் ஆய்வாக
முன்னெடுத்துச் செல்லாமல் தன்னுணர்வூட்டல் ஆய்வாக எடுத்துச் செல்ல
விரும்புவதே அதற்கான காரணமாகும்.
தன்னுணர்வூட்டும் ஆய்வென்பது தனியாளாகச் செய்யாமல் ஆய்வின்
கருப்பொருளில் நாட்டமுள்ளவர்களுடன் இணைந்து, முடிந்தவரை கூட்டாகச்
செய்வதாகும். ஆய்விற்கான தகவல் மூலங்களில் மக்கள் கணிசமான பங்காற்றுவர்.
ஆய்வின் முடிவுகளை உருவாக்கிக்கொள்வதில் மக்களின் முன்னோடிகளும்
பங்கேற்பதைச் சாத்தியப்படுத்துதல். ஆய்விற்கு முன்னர், இணக்கம்
குறைந்ததாகவும் முரண் நிறைந்ததாகவுமே காணப்படும் முன்னோடிகளினது கருத்துக்
கட்டுமானம், ஆய்விற்குப் பின்னர் முரண் குறைந்ததாகவும் இணக்கம்
நிறைந்ததாகவும் பரிமாணம் பெறும். ஆய்வின் முன்னோடிகள் தமக்குத் தேவையான
கருத்துக் கட்டுமானத்தை தாமே உருவாக்கிக் கொண்டவர்களாகவும், ஆய்வு
மனப்பான்மையை சுயமுயற்சியின் மூலம் கூட்டாக வளர்த்துக் கொண்டவர்களாகவும்
அமைவர். எச் சமூக நிகழ்வு இவ்வாய்வின் கருப்பொருளாக இருக்கிறதோ அச் சமூக
நிகழ்வின் இயக்கக் கோட்பாட்டை இனங்கண்டு தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான கருத்துக்கட்டுமானத்தை
செழுமைப்படுத்துவதே இவ்வாய்வின் குறிக்கோளாகும்.
ஒரு சமூக நிகழ்வுப் போக்கின் இயக்கத்தைப் புரிந்து கொள்ளல், ஒரு
புலமைசார் பயிற்சியாக இருக்கக் கூடாது. தேசிய ஒடுக்குமுறைக்கெதிரான
போராட்டதிற்கு சாதகமான முறையில் அந் நிகழ்வுப் போக்கில்
வினை புரிவதற்கானதாகவே இருக்கவேண்டும். தன்னுணர்வூட்டும் ஆய்வானது கருத்துக்
கட்டுமான செழுமைப்படுத்தலுக்குப் பங்களிக்கும் அதேவேளையில்
வினைபுரிபவர்களின் அணியொன்றையும் கூடவே உருவாக்கிக் கொள்கிறது.
சமகால சமூக நிகழ்வுப்போக்கு பற்றிய ஆய்வுகளுக்கு இவ்வாய்வுமுறை நிறைந்த
பலனைத் தரும். இவ் ஆய்வின் கருப்பொருளாக அமையும் சமூக நிகழ்வுப்போக்கு
இலங்கை மக்கள் தமக்கிடையேயான இன, மொழி, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து
வாழும் இணக்கப் போக்கான ஒரு வாழ்க்கைமுறையேயாகும். அதாவது மக்கள்
தமக்கிடையே இசைபட வாழும் வாழ்க்கைமுறையாகும். இசைபட வாழ்தல் எனும்
நிகழ்வுப் போக்குக்கான தடைகளை இனங்காணலும், அத்தடைகளை நீக்கி இசைபடவாழும்
உறவுமுறை சுமுகமானதாகவும் இயல்பானதாகவும் அமைவதற்குரிய வழிவகைகளைக்
கண்டுபிடிப்பதுவுமே இவ் ஆய்வின் குறிக்கோளாகும். இவ் வழிவகைகளை பல்வேறு
தளங்களில் தேடவேண்டியுள்ளது. அரசியல் தளமும், பண்பாட்டுத்தளமும் இவற்றில்
பிரதான இரு மேற்கட்டுமானத் தளங்களாகும். அதேவேளை பொருளாதர வடிவமைப்பே
பிரதான அடிக்கட்டுமானமாகும்.
மேற்கட்டுமானத் தளங்களில் அரசியல் தளமே இங்கு தலைமைப் பாத்திரம்
வகிக்கின்றது. ஆனால் அரசியல் தளத்திற்கு உறுதுணையாக இருக்கும்
பண்பாட்டுத்தளத்தில் ஏதாவது பாரிய கோளாறுகள் ஏற்படுமானால் அரசியல்
தளத்திலான முயற்சிகளில் வெற்றிபெற முடியாது. இலங்கை மக்கள் தங்கள் தேசிய
கௌரவத்தையும், தேசிய நலனையும், சுயாதிபத்தியத்தையும். தன்மானத்துடன் கூடிய
சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக உள்ளூரளவிலும் உலகளவிலும் தொடர்ச்சியான
பல முயற்சிகள் எடுத்தவண்ணமேதான் உள்ளார்கள். ஆனால் இம்முயற்சிக்கான அரசியல்
தளத்தில் மக்கள் அடுக்கடுக்கான பல தோல்விகளை சந்தித்து வருகிறார்கள்.
மக்களின் இப்போராட்டங்களால் இலங்கையின் ஆழும் வர்க்கங்கள் வர்க்க
ஏறுதிசையில் முன்னேறி வருகின்றன. ஆனால் மக்களோ வர்க்க இறங்குதிசையில்
சறுக்கி மேலும் மேலும் பள்ளத்தில் வீழ்ந்து வருகிறார்கள். இசைபட வாழ்ந்த
மக்கள் இன்று தமக்குள் பகைபடவும், பகைவர்களுடன் இசைபடவும் வாழ்வதே பிரதான
ஓட்டமாகக் காணப்படுகிறது.
இலங்கை மக்களின் பண்பாட்டுத்தளம் பாரியளவிற்குச் சீர்கெட்டிருப்பதே
இத்தோல்விகளுக்கான காரணம் என்பதே இவ்வாய்வின் முன் அனுமானமாகும். இப்
பண்பாட்டுச்சீரழிவுக்கான பிரதானமானதும் தலைமையானதுமான காரணி மதங்களேதான்
என்பதே ஆய்வின் அடுத்த முன் அனுமானமாகும். இதனால் தேசியங்களுக்கும்
மதங்களுக்குமான தொடர்பே இவ் ஆய்வின் பிரதான கருப்பொருளாகின்றது.
தேசியமெனும் பதம் இன்றைய அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. அன்று விஜயன்
அவேதப் பார்ப்பனியரின் துணைகொண்டுதான் இயக்கரையும் நாகரையும்
தோற்கடித்தான். அடுத்ததாக அசோகவம்சம் பௌத்தத்தின் துணைகொண்டுதான் மக்கள்
குடியரசுகளைத் தோற்கடித்து நிலவுடமை அரசுகளைத் தோற்றுவித்தது. இலங்கையின்
ஹீனயான பௌத்தத்திற்கு எதிராக தென்னிந்திய மஹாயான பௌத்தம் நடத்திய
போராட்டங்களே ஹீனாயானாவைப் பார்ப்பன மயப்படுத்தியது. இதன் மூலந்தான்
ஹீனயானம் முழு நிறைபெற்ற நிலவுடைமை வர்க்க நிறுவனமாக பரிணாமம் பெற்றது.
அதற்கடுத்ததாக ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புக்கு பிரதான துணைப்படையாக
விளங்கியது கிறிஸ்துவ மதபீடங்களேயாகும. இன்று பௌத்த சிங்களவர் முழு
இலங்கையையும் காலனிகொள்வதற்கு பெரும் உதவியாக விளங்கிவருவது பௌத்தமேயாகும்.
இடையே, பஞ்சமரை அடக்கும் சைவ வெள்ளாளரின் முயற்சிக்குத் துணை நின்றது சைவ
ஆகமேயாகும். நவ காலனிய சூழலுக்கு ஏற்ற முறையில் சிங்கள பௌத்தத்தை
பேரினவாத மயப்படுத்தியது அநகாரிக தர்மபாலாவின் தலைமையிலான பௌத்த மறுமலர்ச்சி
இயக்கமேயாகும்.
இந்த வரலாறுகள்தான் தேசியமும்-மதமும் எனும் ஆய்வின்
வரலாற்றுக் களங்களாக உள்ளன. இங்கு தேசியமெனும் பதம் தற்போது அது குறித்து
நிற்கும் அர்த்தத்தை குறித்து நிற்கவில்லை என்பதைக் காட்டுகிறதல்லாவா? வேறு
சொற்பதம் கிடைக்கவில்லை, கிடைத்தால் அறியத் தாருங்கள்.
இது மதங்கள் பற்றிய தனியான ஆய்வல்ல. இலங்கையின் மதங்கள் பற்றிய தகவல்கள்
முன்னுரையின் முதல் இரு பகுதியாகவும் முன்வைக்கப்பட
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முன்அனுமானங்களே ஆய்வின் கருதுகோள்களாகவும் அமைகின்றது.
இக்கருதுகோள்களை வாய்ப்புப் பார்ப்பதே-பரிசீலிப்பதே-ஆய்வுக்கட்டுரையின்
உள்ளடக்கமாகும். இலங்கை முழுமைக்குமான மதசார்பற்ற அரசொன்றுக்கான
அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதை நோக்கி இவ்வாய்வு செல்லவேண்டும் என
விரும்புகிறேன் முறையாக நடத்தப்பட்டால் இது சாத்தியம் என்ற
நம்பிக்கையுண்டு. அனைத்துலக ரீதியிலான நாஸ்திகர் குழுவொன்றின் இலங்கைக்
கிளை இவ்வித உத்தேச யாப்பொன்றை முன்வைத்து அது பற்றிய திறந்த விவாதத்தையும்
நடத்திவருகிறது என்பதை ஒரு தகவலாக மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இவ்வித ஆய்வு ஏற்கனவே முறையாகத் தொடங்கிவிட்டன என்பதை சுட்டிக்காட்டுவதே
இங்கு நோக்கமாகும்.
முன்சொன்னவைமட்டும் இவ் ஆய்வின் கருதுகோள்களாக இருக்கமுடியாது. இவை இவ்
ஆய்வின் திசை தொடர்பான கருதுகோள்கள் மாத்திரமேயாகும். இதில் இணக்கம்
உள்ளவர்கள்தான் ஆய்விற்குள் கூட்டாக நுழையலாம். இச்சஞ்சிகையின் ஆசிரியர்
குழுவோ அல்லது பிரதான ஆதரவாளர்களோ அல்லது பெரும்பான்மையான வாசகர்களோ
இக்கருதுகோள்களுடன் இணக்கம் காணாவிட்டால் அவர்கள் இவ்வாய்வை பயனற்றதாகவோ,
கால விரயமானதாகவோ கருதலாம். சிலவேளைகளில் இது நாசகார விளைவுகளை ஏற்படுத்தும்
ஒரு அந்நிய சதி என்றும் கருதக்கூடும். மத ஒற்றுமையைக் குலைப்பதற்காக தேசிய
இயக்கத்துள் நாஸ்திகத்தின் ஊடுருவல் என்று போர்க்கொடி தூக்கவும் கூடும்.
ஆகவே துரோகி என்ற பட்டமும் கிடைக்கக்கூடும்.
நூல்சார் புலமையாளர்களுடனோ அல்லது அரசு சார்பற்ற ஆய்வு அமைப்புகளுடனோ
இவ்வாய்வு தொடர்பாக எவ்விதத் தொடர்பும் இதுவரை கொள்ளவில்லை. நடைமுறைசார்
புத்திஜீவிகளுடனேயே (எதிர்கால மக்கள் புலமையாளர்கள்) முதலில் தொடர்பு
கொள்ள விரும்புகிறேன். ….. இணைய சஞ்சிகையூடாக தொடர்பு கொள்கிறேன். நீட்டிய
நேசக்கரங்களுக்கு எதிர்மறை அர்த்தம் கற்பித்து பகமைப்போக்கை வளர்க்க கொம்பு
சீவி விடுவோரே ஒரு பெரும் அணியாக இணையங்களில் வலம் வருகின்றனர் என்பது
அனைவரும் அறிந்ததே. அதேவேளை ஊர் கூடித்தான் தேரிழுக்கலாம் என்பதைப்
புரிந்துகொண்டு, சிறு துரும்பும் கூட பல் துலக்க உதவும் என்ற தொலை நோக்குப்
பார்வையுடன் இசைபட வாழும் போக்குள்ளவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக
வளர்ந்து வருகின்றனர் என்பதுவும் தெரியும். அவ்விதம் வளர்ந்து வருபவர்களை
இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கவேண்டுமெனும் கருத்தை இச்சஞ்சிகையின்
அமைப்பாளர்களில் ஒருவரான திரு, பௌசர் அவர்கள் இவ்விதமாக முவைக்கிறார்.
“மிக வெளிப்படையாக பேச வேண்டுமானால் பல்வேறு கருத்து நிலை,பார்வை
அணுகுமுறை கொண்ட ஒரு சமூக சூழலில் அதன் அனைத்து தளங்களிலும் மிக
அடிப்படையாக இருக்க வேண்டிய பன்மைத்துவ இருப்பிற்கும் அதன் உரிமைக்குமான
முக்கியத்துவத்திற்கு கதவடைப்பு செய்து வெகுகாலமாயிற்று. நமது
சமூகங்களின் பரப்பில் தொடர்ச்சியாக நிலவுகின்ற இறுக்கமான போக்குகளும்
ஒற்றைப் பரிமாண நிறுவுதலும் எதிர் நிலைக்குத் தள்ளும் விமர்சன கதையாடல்களும்
பிற போக்குகளை பார்க்க மறுக்கின்ற மேலாதிக்கமும் பகை முரண்களும் நாளுக்கு
நாள் அதிகரித்தே வருகின்றன.”……. “இந்த இறுகிப்போன சூழலின்
இரும்புத் திரையில் ஒரு சிறு நெகிழ்ச்சிப் போக்கையாவது ஏற்படுத்திவிட
முடியாதா என்கிற மனத்தவிப்போடு,காலத்தேவையை கருத்திற் கொண்டு,அந்தந்த
காலச்சூழல் கோரி நிற்கிற பணியை நம்மால் முடியுமானவரை ஆற்ற வேண்டும் என்கிற
புரிதலுடன் பல்வேறு கருத்து ,பார்வை கொண்ட நண்பர்கள்/ நண்பிகள் இணைந்து
அண்மைக்காலமாக ஒரு சிலமுயற்சிகளை கருத்து செயற்பாட்டு தளத்தில் எடுத்து
வருகிறோம்.”
அவரையும் தெரியாது, அவரின் நண்பர்களையும் தெரியாது. அனால் அவரின்
அபிலாசைகள் புரிகிறது. அவ் அபிலாசைகள் வெற்றிபெறும் என நம்புகிறேன். அவ்
அபிலாசைகளுக்குத் தோள் கொடுத்திட விரும்புகிறேன். ஏனெனில் நானும் அவர்
சொன்னவாறேயுள்ளேன். (காலத்தேவையை கருத்திற் கொண்டு,அந்தந்த காலச் சூழல்
கோரி நிற்கிற பணியை நம்மால் முடியுமானவரை ஆற்ற வேண்டும் என்கிற புரிதலுடன்)
அந் நம்பிக்கையினதும் விருப்பினதும் வெளிப்பாடுதான் இவ்வாய்வு முன்மொழிவு இச் சஞ்சிகையில் வருவதற்கான காரணமாகும்.
அடுத்த இதழில் இருந்து எனது பார்வையை விரிவாக முன்வைக்கிறேன்..உங்கள் கருத்துகளையும் எதிர்பார்த்து……….
நன்றி: எதுவரை on April 29, 2012
No comments:
Post a Comment