Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Friday, 16 August 2013

தேசியமும் மதமும்—03 ஆசிரியர்-கைமண்

த்தலைப்பு பலருக்கு விதண்டா வாதமாகத் தென்படலாம். சிலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தலாம். இலங்கையில் தேசியமும் பௌத்தமும் என்று கூறுவது நியாயமானது. ஏனெனில் அது நீண்ட காலமாக இருந்து வருவது . தேசியமும் இஸ்லாமும், என்று கூறுவதும் நியாயமானது. ஏனெனில் அது சமீபத்தில்தான் பிறப்பெடுத்துள்ளது. இதற்கு இணையாக தேசியமும்-சைவமும் என்று கூறுவதில் என்ன நியாயமுண்டு. தமிழ்த் தேசியத்திற்கும் சைவத்திற்கும் ஏதாவது தொடர்புகள் இருந்தனவா? பலர், இல்லையே என்பார்கள். சிலர், இருந்ததுதான், ஆனால் அது தான் சர்.பொன்.ராமநாதன் அவர்களுடன் மறைந்துவிட்டதே என்பார்கள். எல்லோருமே ஏகமனதாகக் கூறுவது  ”தமிழ்த் தேசியந்தான் மதசார்பற்ற தேசியமாயிற்றே” என்பதாகவே இருக்கும். இது உண்மையே. பௌத்த – சிங்கள தேசியவாதத்தின் எதிர்வினையாகச் செயற்படும் போது தமிழ்த் தேசியம் மத சார்பற்றதுதான். எதிர்வினையென்பது தற்காப்புச் செயற்பாடாகும். இதற்கான அரசியல் தற்காப்பு அரசியல். வட்டுக்கோட்டை மாநாடுவரை தமிழ்த் தேசியத்தின் தற்காப்பு அரசியல் மதசார்பற்றதுதான். பல குறைபாடுகளை உடையதாக இருந்தாலும் இம்மதசார்பின்மைக் கொள்கை முற்போக்கானதுதான். இராமநாதன் அவர்கள் தனது முன்முயற்சியில் இலங்கைத் தேசிய காங்கிரஸை அமைத்த போது கூட மதசார்பின்மையையே பின்பற்றினார். இதன்படி பார்த்தால் சைவ மறுமலர்ச்சி இயக்க தலைவர் ஆறுமுக நாவலர் கூட தேசிய அரசியலில் மதசார்பற்றவர்தான். இது விடயத்தில் இவர் பௌத்த மறுமலர்ச்சியின் தந்தை அனகாரிக தர்மபாலா அவர்களைப் போல் செயற்படவில்லை. இதற்காக தமிழர்கள் பெருமைப்படல் நியாயமானதே.

ஆனால், இலங்கைத் தமிழ்த் தேசியம் வட்டுக்கோட்டை மாநாட்டுடன் தமிழீழத் தேசியமாக பரிணாம தேய்வுறுகின்றது. தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஒரணியில் பிணைத்து வைக்கும் தன்மை பெற்றிருந்த இலங்கைத் தமிழ் தேசியம் கோலோச்சிய இடத்தில் தமிழ் பேசும் மக்களைப் பிரித்து வைக்கும் தன்மையுள்ள தமிழீழத் தேசியம் கோலோச்ச ஆரம்பிக்கின்றது. இதுவே அகச்சிதைவு தேசியம் எனப்படுகிறது. இவ் அகச் சிதைவு தேசியம் கூட இலங்கை அளவிலான தற்காப்பு அரசியலில் மதச் சார்ப்பற்றதாகவே இருந்து வந்தது. பௌத்த சிங்களத் தேசியத்தைப் போல் செயற்படவில்லை.

சரி, இவற்றை ஒத்துக் கொண்டால் எதற்காக தேசியத்தையும் சைவத்தையும் இணைக்கவேண்டும்?

தேசியம் என்பது எப்போதும் எங்கேயும் ஒரு அரசியல் எதிர்வினை (பதில் வினை) மாத்திரமல்ல. அது  ஒரு முதல்வினை என்பதுவே முக்கியமானது. முதல்வினை என்பது ஒரு தேசமாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சியாகும். முதல்வினை உள்ளிருந்து உருவாவது, அதாவது ஓர் அரசியல்-பொருளாதார மக்கள்-திரள் தம்மை தேசக் கட்டுமானமாக ஆக்கிக் கொள்வதற்கு அவசியமான அகத்(உட்) தயாரிப்புகளைச் செய்தல். முதல்வினை அக முரண்பாடுகள் சார்ந்தது. முதல்வினை சுய உருவாக்கத்துக்கானது. பதில்வினையோ, புற முரண்பாடுகள் சார்ந்தது  தற்பாதுகாப்புக்கானது. முதல் வினை அம்மக்கள் குழுவின் சொந்த முடிவு, பதில்வினையோ புற எதிரியின் செயற்பாட்டிற்கு அமைவான முடிவு. 

இதனால் ஒரு தேசியத்தின் குணவியல்புகளை உருவாக்குவதுவும் வளர்த்தெடுப்பதுவும் அதன் முதல்வினையேயாகும். இக்குணவியல்புகள்தான் தேசியத்தின் உண்மையான தன்மையாகும். அவைதான் அத் தேசியத்தின் நிரந்தரக் குணவியல்புகளாகும். ஆனால், பதில்வினைக் களத்தில் அதாவது தற்பாதுகாப்புக் களத்தில் தேசியம் தனது குணவியல்புகளாக வெளிக்காட்டிக் கொள்ளும் குணவியல்புகள் தந்திரோபாயங்களேயாகும். இத்தந்திரோபாயங்களில் சில உள்ளதை உள்ளபடியே காட்டுவதாக இருக்கலாம். சில உள்ளதைக் காட்டாமலே இருக்கலாம். இன்னும் சில உள்ளதை வேறொன்றாகக் காட்டுவதாகவும் இருக்கலாம். இதையே பசுத்தோல் போர்த்திய புலி என்பார்கள் அல்லது புலித்தோல் போர்த்திய பசு என்பார்கள்.

இவ்வித பசுத்தோல் தன்மையுடைய மதச்சார்பின்மைக்கான காரணம்:

தமிழ்த் தேசியங்களின் ‘மதச்சார்பின்மைக்கு’  சைவ ஆளும் வர்க்கமும் கிறிஸ்துவ ஆளும் வர்க்கமும் முதல் வினையாற்றுவதில் ஒன்றுபட்டிருந்ததுவும் ஒரு காரணமாகும். இவர்கள் இருவரும் பிரித்தானிய தரகர்களாக இருந்தமை மற்றைய காரணமாகும். இதில் முதலாவதே பிரதான காரணமாகும். சைவ மறுமலர்ச்சி இயக்கம் ஆங்கில மொழிக்கோ, கிறிஸ்துவ மதத்திற்கோ எதிரானதாக அமையவில்லை மாறாக ஆரியத் தொன்மைக்கும், யூதத் தொன்மைக்குமிடையில்  பொது அடையாளங்களைத் தேடும் முயற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தது. பிரித்தானியர்களிடம் நற்பெயரெடுக்க இத்தேடல் உதவியாக இருந்து வந்தது. யாழ் குடாநாட்டில்  நிலவிய சாதி அமைப்பையும், அதைப் பேண உதவிய தேச வழமையையும், வெள்ளையர்களைப் பகைத்துக் கொள்ளாத முறையில் பாதுகாப்பதே இந்நட்பின் பிரதான குறிக்கோளாக இருந்து வந்தது.

சைவ ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் கிறிஸ்துவர்களாக மாறியது, கண்டு கொள்ளப்படவில்லை. அது ஒரு வர்க்க சமரசமாகவே கருதப்பட்டது. ஆகவே மதம் மாறியவர்கள் சாதியத் தூய்மையிழந்தவர்களென்ற படிமம் யாழ்பாணத்தில் உருவாக்கப்படவில்லை. மதம் மாறிய வெள்ளாள வர்க்க மேட்டுக் குடியினர்  நிர்வாகத்துறையில் நல்ல பதவிகளும் பெற்றார்கள் . மதம் மாறாதிருந்த சைவ வெள்ளாள வர்க்க மேட்டுக்குடியினரும் இதற்குச் சளைத்தவர்களாக இருக்கவில்லை. பிரித்தானிய நிர்வாகத்துடன் இவர்களுக்கு இருந்த தொடர்பு மத பேதமின்றி பர்மா, சிங்கப்பூர், பிரித்தானியா என்று விரிந்திருந்தது.

ஆகவே ஒரு தேசியத்தின் உண்மைக் குணவியல்புகளை அறிந்து கொள்ளவேண்டுமானால் முதல் வினைக் களத்தில்தான் அலசித் தேட வேண்டும். பதில் வினைக் (எதிர் வினை) களத்தில் தேடக்கூடாது. தமிழ்த் தேசியத்தின் மத சார்பின்மை பசுத்தோல் போர்த்திய புலியேயாகும். இக்கொள்கை பதில் வினைக் களத்தில் வினைபுரிவதற்கு அவசியமான ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான ஒரு உருவ மறைப்பேயாகும். முதல் வினைக்களத்தில் தமிழ்த் தேசியத்தின் செயற்பாட்டை நோக்குவோமானால் தமிழ் தேசியத்தின் உண்மைக் குணவியல்பு தமிழ் வெள்ளாள சைவத் தேசியந்தான் என்பது புரியும்.

இன-சாதி-மதவாதத் தேசியம்

இதனாலேயே தமிழ்த் தேசியமானது தேசியவாத படிமங்களுள் அமிழ்ந்திராத படித்தவர்களாலும், தமது வாழ்நிலையைப் புரிந்து கொண்ட பாமரர்களாலும் யாழ்மையத் தேசியம் என அழைக்கப்படுவது வழமையாக உள்ளது. இது பற்றி சற்று விரிவாக நோக்குவோம். வடபகுதித் தமிழர், கிழக்கு மாகாணத் தமிழர், மலையகத் தமிழர், இஸ்லாமியர் எனும் நான்கு தனித்துவ சமூகக் குழுமங்களினதும் பொதுவான அரசியல் பொருளாதாரக் கட்டுமானம் ஒன்றேதான் எனும் கருத்தையே தமிழ்த் தேசியவாதிகள் 50 களின் முற்பகுதியில் இருந்து முன்வைத்து வருகின்றனர். அரசிய – பொருளாதார ரீதியாக இவ்விதமான பொதுக் கட்டுமானம் ஒன்று இன்று வரை உருவாகவில்லையானாலும் பொதுவான அரசியல் கட்டுமானம் ஒன்று வட்டுக்கோட்டை மாநாடு வரை நீடித்தது. இது சிங்கள ஏகபோகத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட தேசியங்களின் ஒரு அரசியல் ஐக்கிய முன்னணியே யாகும். வடபிரதேசமே இவ் அரசியல் முன்னணிக்குத் தலைமை தாங்கியது. தமிழ்த் தேசியர்கள் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாதுவிட்டாலும் இதுவே உண்மை. நாற்பது வருடங்கள் கழிந்தும் தேசிய அரசியலில் வலுமிகு, யாழ்-வெள்ளாளருக்குச் சமனாக பிற தேசியங்களோ, தமிழ்ப் பிரதேசங்களோ வளரவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?

தேசியமாக உருவாவதற்கான முதல் வினையாற்றலில் (யாழ்பிரதேசம்) பிரித்தானியர் காலத்தில் இருந்தே தீவிர ஈடுபாடு கொண்டதாக இருந்து வருவதே இதற்கான பிரதான அகநிலைக் காரணியாகும். தனித்துவ மிக்க புறநிலைக் காரணிகளும் இருந்தன. பிரித்தானிய காலனியல் காலத்தில் இருந்து சிங்கள தேசியத்தின் எழுச்சி வரை கல்வித் துறையிலும், நிர்வாகத் துறையிலும் யாழ் வெள்ளாளர் முழு இலங்கைக்கும் முன்னிலை வகித்தது முக்கியதுவமிக்க புறக்காரணியாகும்.

இவர்கள் நிர்வாக சேவைத் துறைப் புலமையாளர்களாகவும், காலனியல்-சிவில் நிர்வாகச் சேவையில் உயர் நிலையில் இருந்த கடைநிலை வரையான அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் இருந்து வந்தார்கள். காலனியல் சட்ட நுணுக்கங்களில் ஞானம் மிக்கவர்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டில் விற்பன்னர்கள், பிற பிரித்தானிய காலனியல் நாடுகளுக்குச் சென்று அறிவுத் தொழில் புரிந்து செல்வமீட்டி வந்தவர்கள், கல்வித்துறையில் முதலீடு செய்வதிலும், கல்வியை மூலதனமாகக் கொள்வதிலும் திறன் மிக்கவர்கள் ஆனால் தாம் ஈட்டிய செல்வத்தை தொழில் முதலீடாகக் கையாளும் திறனில் பின்தங்கியவர்கள். இப்படிப்பாளிகளின் தோற்றம் டச்சுக்காலமாகும்.
ஆனால் முதல் வினையாற்றுவதற்கான ஆற்றல் பெற்றிருந்தமைக்கு இது ஒரு காரணியாக இருந்ததே தவிர, முதல் வினை ஆற்றுவதற்கான அடிப்படைக் காரணியாக இருக்கவில்லை. அடிப்படைக் காரணி எந்த வெள்ளையராலும் புறத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதல்ல. அது தமிழ்நாட்டு வெள்ளாளர்களால் கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாண நில உடமையாளர்களாலும், அடிமை உடமையாளர்களாலும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்ததொரு ‘புனித’ யாழ்ப்பாணச் சரக்காகும். அந்தச் சரக்குதான் சைவ சித்தாந்த அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்ட யாழ்-சமூகக் கட்டுமானமாகும். சுரண்டலுக்கும், அதிகாரத்துக்கும், துணைபுரியும் இவ்வளவு அருமையான இவ்வளவு மதி நுட்பமான ஒரு ஆளும் வர்க்கச் சித்தாந்தம் இலங்கையின் எப்பிரதேசத்தவரிடமும் இல்லை. `சோழர்கள் எமக்களித்த சீதனமான` சைவ சித்தாந்தம் பற்றி மிக விரிவாக இனி வரும் பகுதிகளில் நோக்குவோம்.

ஆறுமுக நாவலரை ஒரு சைவ மத மறு சீரமைப்பு வாதியாக மட்டும் கருதுவது தவறு. இது அவரைக் குறைத்து மதிப்பீடுவதாகும். தமிழ் சைவ வெள்ளாளத் தேசியத்தின் கண்ணோட்டவியல் தலைவர் அவர்தான். சைவத்தையும், தமிழ்த் தேசியத்தையும் இணைத்த தத்துவார்த்த ஆசானும் அவர்தான்.

சரி, வட்டுக்கோட்டை மாநாட்டின் பின்னர் யாழ்-மையவாத இலங்கைத் தமிழ் தேசியம் என்னவானது?

தமிழீழம் எனும் அகச்சிதைவுக் கோட்பாடு தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைத்ததையும், இதன் விளைவாக இலங்கைத் தமிழ்த் தேசியம் எனும் பசுத்தோல் போர்த்தியிருந்த யாழ்-மையவாத தேசியம் எனும் புலி இன்று பிற தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு நிற்பதையும் யாவரும் அறிவர். பேசப்படும் இப்பொருளை விடுத்து பேசாப் பொருளுக்குப் போவோம்.

முஸ்லீம் மக்களை  அடித்துத் துரத்தியதை, ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவித்து விட்டதாகத் தான் பேசப்படுகிறதே தவிர, மதச்சார்பின்மையுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுவதில்லை.

அதாவது இது ஒரு நடைமுறைத் தவறாகத்தான் பேசப்படுகிறதே  தவிர  கொள்கைத் தவறாகப் பேசப்படுவது அரிதாகவே உள்ளது. பேசுவோம், மதச்சார்பின்மை எனும் பசுத்தோல் அப்புறப்படுத்தப்பட்டதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறலாமா? நிச்சயப்படுத்த முடியாது. ஆனால் அந்தக் கோணத்திலும் சிந்திக்கவேண்டும் என்றும் சிலர் கூறலாம். கட்டுரை ஆசிரியரின் கருத்து அதுவல்ல, என்பதேயாகும். அவ்விதமானால் மேலே, முற்பகுதியில் மதச்சார்பின்மை இருந்தது என்றும் அது மெச்சத்தக்கது என்றும்  கூறியது தவறாகுமா? மதச்சார்பின்மை என்ற பதம் இன்று எந்தச் சமூக நிகழ்வைக் குறிக்கிறதோ அந்த அர்த்தத்தை ஏற்றுக் கொண்டுதான் மதசார்பின்மை மெச்சத்தக்கதே என்று கூறப்பட்டது. ஆனால் மதச்சார்பின்மைக்கு என்ற பதத்திற்கு இன்று வழக்கில் உள்ள கருத்து தவறானது. மதம், சார்பு என்ற இரு சொற்களுக்கு நடைமுறையில் என்ன கருத்து உள்ளதோ அதை வைத்துக் கொண்டே தற்போதைய கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு அரசு அல்லது ஒரு கட்சி எந்த மதத்தையும் சாராமல் நடுநிலையாக நிற்றலும், மத நிறுவனங்களுக்கு அரசு அதிகாரத்தில் உள்ள தொடர்புகள் அனைத்தையும் நீக்கி விடுவதுமே மதச் சார்பின்மை என்றே  புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உண்மை அதுவல்ல.

சமூக விழுமியங்களையும் ஒழுக்க நெறிகளையும் தீர்மானிப்பதில் மதத்திற்கோ, மத நிறுவனங்களுக்கோ எந்த உரிமையும் கொடாது விடலே மதச் சார்பின்மையாகும்.Secular  எனும் சொல்லுக்கு மதச் சார்பின்மை எனும் பெயர் வைத்தது மிகத் தவறு. இவ் அர்த்தத்தில் நோக்கினால்  இந்து மதத்தில் இருந்து நால்வர்ணக் கோட்பாடு நீக்கப்படவேண்டும், புண்ணியம்-பாவம் மோட்சம் – நரகம், இறுதிக்கால விசாரணை, தண்டனை, திருமணத்துக்கும், சாவு வீட்டிற்கும் குருமாரின் அருள் பெறுதல் அவசியம் போன்ற அனைத்து ஒழுங்குமுறைகளும் நீக்கப்படவேண்டும். எந்த மதமும் இவ் ஒழுங்குமுறைகளை நிர்பந்திக்கக் கூடாது. மத நிறுவனங்கள் இவ்வித கடமைகளில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டும். மதம் தனிமனிதர்களின் நம்பிக்கை, அந்நம்பிக்கையை சமூகத்தின் பொதுவிதியாக மாற்ற முற்படக் கூடாது. மக்கள் தாமாக மனமுவந்து வழங்கும் காணிக்கைகளைத் தவிர வேறு எந்த வருமானமும் மத நிறுவனங்களுக்கு  இருக்கக்கூடாது. இந்த காணிக்கைகள் கூட மத நிறுவனங்கள் தத்தமக்கென்று உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கை கட்டுமானங்களைக் காட்டி பயமுறுத்திப் பெறுபவைகளாக இருக்கக்கூடாது. நாஸ்தீகப் பிரச்சாரங்களுக்கு எந்தப் தடங்கல்களும் யாராலும் செய்யப்படக் கூடாது. இவைதான் செக்குலரிசமாகும்.

அரசோ, அரசியல் கட்சிகளோ எந்த மத நிறுவனத்தையும் சாராது இருப்பது மட்டும் செக்குலரிசமல்ல. வேண்டுமானால் அது மதச் சார்பின்மையாக இருக்கலாம். ஆனால் செக்குலரிசம் அல்ல. சைவம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் ஒரு போதும் செக்குலரிசத்தை ஏற்றுக் கொள்ளமாட்டா. அதிலும் சாதிய அமைப்பைக் கட்டிக் காக்கும் மதமாக இருக்கும் சைவமே செக்குலரிசத்துக்கு எதிராகப் போராடும் போர்த் தளபதியாக இருக்கும். காரணம் பிற இரு மதங்களும் சாதியமைப்பை மதக் கோட்பாடாகக் கொண்டவையல்ல. இதனால் முதலாளித்துவ சமூக மாற்றத்தைக் கூட சைவ சித்தாந்தம் ஏற்றுக் கொள்ள மாட்டாது.
நிலப்பிரபுத்துத்தை கட்டிக் காத்து வந்த கிறிஸ்த்துவத்தின் விழுமியங்களை அழிப்பதற்காக, தனது வளர்ச்சி நிலையில் இருந்த ஐரோப்பிய முதலாளித்துவம் ஏந்திய சித்தாந்த ஆயுதமே செக்குலரிசமாகும்.

ஆனால் இன்றோ நிலப்பிரபுத்துவ விழுமியங்களில் தங்கியுள்ள தரகு முதலாளித்துவ கட்சிகளும், அரசுகளும் மதத்தையே தமது பிரதான சித்தாந்த ஆயுதமாகக் கொண்டுள்ளன. இருந்தும், பல மதப்பிரிவுகள் வாழும் நாட்டில் மதக் கலவரங்களை தடுப்பதற்காக மதச் சார்பின்மைக் கோட்பாட்டைப் பின்பற்றுவதாக பாசாங்கு செய்கின்றன. பல மதப்பிரிவுகள் வாழும் ஒரு நாட்டில் தரகு முதலாளித்துவ அரசும், தரகு முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் ஏதோவொரு மதத்தை சார்ந்தே இயங்குகின்றன. அரசியல் கட்சிகள் இவ்விதம் வேடம் போடுவதற்கு பாராளுமன்ற ஜனநாயகமும் ஒரு காரணமாக உள்ளது.வாக்குப் பொறுக்கி அரசியல் அவர்களை இவ்விதம் நடிக்க வைக்கின்றது.

யாழ் ஆளும் வர்க்கம் தமிழ்த் தேசியத்துள் முதல் வினையாற்றல்  என்ற நிகழ்வுப்  போக்கையும் தமிழ்த் தேசியத்தின் ஊடாக பதில் வினையாற்றல் என்ற நிகழ்வுப் போக்கையும் நடத்திக் கொண்டே வந்தது. ஆனால் கல்வி சார் நடுத்தர வர்க்கத்தின் போர்க் குணமின்மையினாலும், ஊசலாடல் தன்மையினாலும் இவ்விரு நிகழ்வுப் போக்குகளும் மிகவும் மந்தமான முறையிலேயே நடந்து வந்தன. ஆனால் புலிகள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதல் வினையாற்றல், பதில் வினையாற்றல்  ஆகிய இவ்விரு நிகழ்வுப் போக்குகளும் துரிதமடைந்தன. தமிழீழ அரச, அரசாங்க கட்டுமானங்கள் நிறுவப்பட்டன. இவை முதல் வினையாற்றலின் நிகழ்வுப் போக்குகளாகும். எதிரியுடனான யுத்தமும் பெரியளவில் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இவை பதில் வினையாற்றலின் நிகழ்வுப் போக்குகளாகும். இவை எல்லோரும் அறிந்தவை. இவற்றை போற்றுவாரும் உளர், தூற்றுவாரும் உளர். போற்றலும், தூற்றலும் தொடர்கிறது. ஆனால் புலிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட முதல் வினையாக்கத்தில் மிக முக்கியமானது யாழ்ப்பாணத்தின் சமூக  அதிகார அடுக்கில் மாற்றத்தைச் செய்ய முற்பட்டதாகும். இம்முயற்சி யாழ் சமூகக் கட்டுமானத்தின் வடிவையே மாற்றுவதற்கானதாகும்.

இது ஓர் அடிப்படை மாற்றமல்ல, நிலவும் கட்டுமானத்தை குலைத்து புதிய கட்டுமானத்தை ஆக்குவதல்ல ஒரு சமூகப் புரட்சியல்ல, ஆனால் முற்போக்குமான சமூக சீர்திருத்தமாகும். கரையார் சமூகத்தினரை, அதிகாரத்துவ அடுக்கின் உச்சநிலைக்குக் கொண்டு வர எடுத்த முயற்சியே இதுவாகும். இம் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருந்தால், தமிழ்த் தேசியத்தின் குணவியல்பு பாரிய மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கும். தமிழ்-சைவ-வெள்ளாளத் தேசியம், தமிழ் – சைத்திரியர் தேசியமாக மாறியிருக்கும் அல்லது வெள்ளாள – சைத்திரிய கூட்டுத் தேசியமாக மாறியிருக்கும். மாற்றம் நன்றாகத் தான் இருந்திருக்கும்.  ஆனால் இம்மாற்றத்தை ஏற்படுத்தவும் ஏற்படுத்திய மாற்றத்தை தக்க வைக்கவும் பாசிச வன்முறை தமிழ் மக்கள் மீது எல்லையற்று பாய்ந்திருக்கும்.  கம்பூச்சிய படுகொலைக் களங்கள் யாழ்குடா நாட்டிலும் ஏற்பட்டிருக்கும். எப்படியோ இந்த மாற்றத்தை  தமிழ் – சைவ – வெள்ளாளத் தேசியம் தடுத்தி நிறுத்தி விட்டது. அத்தேசியம் வெள்ளாள-சைத்திரிய கூட்டைக் கூட அனுமதிக்கத் தயாராய் இல்லை. இயக்க மோதல்களை இந்தப் பின்னணியில்  புரிந்து கொள்ளல் அவசியம். அவனைப் பிடித்து இவனைப் பிடித்து அலுவல் பார்த்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் அனர்த்தங்கள் முதல் வினையாற்றலின் விளைவா? அல்லது பதில் வினையாற்றலின் விளைவா?  அதாவது அது தமிழீழ உள்நாட்டுப் போரின் விளைவா? அல்லது இலங்கையின் உள்நாட்டுப் போரின் விளைவா? என்பதைப் புரிய அதிக காலம் எடுக்காது.

சைவம் பற்றிய விளக்கத்திற்குப் போகும் முன்னர் தமிழ்-சைவ-வெள்ளாளத் தேசியத்தின்  முதல் வினை நடவடிக்கைகள், யாழ்பாணத்துள் இத்தேசியத்திற்கு எதிரான மக்கள் திரள் ஒன்றை உருவாக்கி வரும் வரலாற்றைப் பார்ப்போம்.

தமிழ் – சைவ- வெள்ளாளத் தேசியர்கள் தமது முதல் வினையின் மூலம் புதியதோர் அடக்குமுறை வடிவத்தை யாழ்பாணத்தில் அறிமுகப்படுத்தி வருவதை நோக்குவோம். ஒவ்வொரு சாதியக் குழுமமும் ஒரு வர்க்கத்தின் அல்லது வர்க்கத் தட்டின் மக்கள் திரளாக இருந்த நிலமை இன்று மாறி வருதலே பொதுவான போக்காக இருந்து வருகின்றது. ஒவ்வொரு சாதியக் குழுமமும் தமக்குள் வர்க்கத் துருவச் சேர்க்கை அடைந்து வருகிறது. பஞ்சமர் மத்தியிலும் குடிமைச் சாதியினரிடையேயும், பிற, புற சாதியினரிடையேயும் வர்க்க மேட்டுக்குடியினர் தோன்றி வருகிறார்கள். அதுபோல் மேட்டுக்குடி சந்ததியினரிடையே வர்க்கப் பஞ்சமர்கள் தோன்றி வருகிறார்கள். இதனால் வருங்காலத்தில் சாதியெனும் மக்கள் திரள்களை, வர்க்கத் திரள்கள் என்று கூற முடியாது. முன்னாளில் இவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக இருந்தனர் என்று சொல்லக் கூடிய நிலைக்கு சில சாதிப்பிரிவினர் வந்துவிட்டனர்.  அவ்விதமானால் , இவ்வளர்ச்சிப் போக்கினால் சாதி குழுமங்கள் தனியான மக்கள் திரளாக இருப்பதற்கான தன்மையை இழந்து வருகின்றன என்று கருத முடியுமா?

இல்லை. வர்க்க ரீதியான மக்கள் திரளுக்கான தன்மையை இழந்து வரும் அதே வேளையில் புதிய வகை மக்கள் திரளுக்கான தன்மையைப் பெற்று வருகிறார்கள்  என்பதே உண்மை. அந்தப் புதிய வகை எது?

தேசம் எனும் மக்கள் திரள் எவ்விதம் முரண்படும் வர்க்கங்களையும், சமூகத்தட்டினரையும் உள்ளடக்கியதாகவும் உடன்படும் வர்க்கங்களையும், வர்க்கத்தட்டினரையும் உள்ளடக்கியதாகவும் பல இன மத மொழிக் குழுமங்களையும் உள்ளடக்கியதாகவும் உள்ளதோ, அதே போன்றதோர் மக்கள் திளராக சாதி எனும் குழுமம் பரிணாமம் பெற்று வருகிறது. இதுவே அந்தப் புதிய வகை மக்கள் திரளாகும். இதை இவ்விதம் விளங்கிக் கொள்வோம். ஒவ்வொரு சாதிக் குழுமத்திலும் உள்ளடங்கியுள்ள வர்க்கக் கூறுகள் மாற்றமடைந்து வருவது மறுக்க முடியாத உண்மை. அதே வேளை சமூகத்தின் ஒட்டு மொத்த அதிகாரமும் இன்னமும் மேட்டுக்குடி சாதியினரின் மேல் தட்டு வர்க்கத்தினரின் கைகளில் தான் உள்ளது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. இதனால் காலனியல் அடக்குமுறை இன்னமும் தொடர்கிறது. காலனியல் கால மிலேச்சத்தன வடிவத்திலோ, அல்லது நவ காலனியல் கால அரை மிலேசத்தன வடிவத்திலோ, அல்லது நவீன தாரளவாத பொருளாதாரத்திற்குப் பொருத்தமான நவ-மிலேச்சத்தனமாகவோ தொடர்கிறது. சாதி அடக்குமுறையினதும்,  ஓரங்கட்டலினதும் வடிவம் மாத்திரமல்ல குறிக்கோளும் மாறுகிறது. முன்னர் சாதியடக்குமுறை ஒரு தொழில் அடக்குமுறையாக இருந்தது. அடக்கப்படுவோரின்  உழைப்பின் உபரியை தமதாக்கிக் கொள்வதே ஒடுக்குமுறையாளர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் தற்போதோ இது  இரண்டாம் பட்சமான குறிக்கோளாக மாறியுள்ளது.

சைவசித்தாந்தம்

சைவசித்தாந்தம் தமிழ்நாட்டின் தயாரிப்பு என்றோர் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் வடக்கில் இருந்து வந்த சித்தாந்தத்தமே. வடக்கில் வேதாந்தத்தில் ஏற்பட்ட ஒரு தத்துவார்த்த சீர்திருத்தமே சிவ வழிபாடாகும். வேதத்தை ஜனரஞ்சப்படுத்துவது அல்லது வேதத்தை பிராமணர்களின் கைகளில் இருந்து விடுவித்து அதை அவேதர்களிடையே ஜனரஞ்சகப்படுத்துவதே இம் மதச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும்.

“கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் குஜராத் மாநிலத்தில் காரோஹணம் என்ற ஊரில் பிறந்த லகுளீசர் என்பவர் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தார். இவரது சித்தாந்தம் பாசுபத சித்தாந்தம். இதில் காளாமுகம், காபாலிகம் என்ற பிரிவுகளும் உண்டு.காரோஹணம் என்ற ஊர் சிவலிங்க வழிபாட்டின் முக்கியத் தலமாக விளங்கியது. பாசுபதச் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்களும் காரோஹணம என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டன. தமிழகத்தில் நாகைக் காரோஹணம், காஞ்சிக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம் என்ற சைவத்தலங்கள் இருந்ததை அப்பர் குறிப்பிடுகிறார். முதலாம் மகேந்திரவர்மன் தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில் காஞ்சியில் காபாலிகர் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். எனவே அப்பர் காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ பாசுபதம், காளாமுகம், காபாலிகம் ஆகிய லிங்க வழிபாட்டைப் பிரதானமாகக் கொண்ட மதங்கள் தமிழகத்தில் நுழைந்திருக்க வேண்டும்.

லகுளீசருக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய லிங்க புராணம், லகுளீசத் தத்துவத்தின்படி இறைவனை எம்முறையில் வழிபட வேண்டும், இறைவன் எத்தன்மை உடையவன் அவனுடைய பெயர்கள், எந்தெந்த பொருட்களினால் சிவலிங்கம் செய்து வழிப்படலாம் என்பன போன்ற விவரங்களைக் கூறியிருக்கிறது. பாசுபத யோகத்தையும் லிங்க புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. எனவே பாசுபதர்கள் யோகிகள் என்பது தெளிவாகிறது.
லிங்க புராணம் சிவனை ருத்ரன் என்று வர்ணிக்கிறது. சிவன் திரிசூலத்தை உடையவன் என்றும் எட்டு வகை ஆயுதங்களை உடையவன் என்றும் கூறுகிறது.

மகாபாரதத்திலும் ருத்ரன் தக்கனுடைய யாகத்தை அழித்தது பற்றி கூறப்பட்டிருக்கிறது. வேதங்களும் ருத்ரன் கொடிய ஆயுதங்களைத் தாங்கியவன் என்றும் வேள்விகளை அழிப்பவன் என்றும் கூறுகின்றன.
வேத, உபநிடதங்களில் கூறப்பட்ட ருத்ரன், வேதங்களில் வேத வேள்வி செய்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறைவன் அல்லன். சமகாலத்தில் ஆரியரல்லாத மக்களால் வணங்கப்பட்டவன் ருத்ரன். அதனால்தான் அவனைக் கொடியவனாகவும், தாழ்ந்தவனாகவும் வேதங்கள் சித்தரித்துக் கூறின.பின்னர் உபநிடதங்களும், பிராம்மணங்களும் ருத்ரனை முழு முதல் கடவுளாக ஏற்றுக் கொன்டன. இந்த ருத்ர வழிபாட்டு முறையைத் தான் கி.பி.2-ஆம் நூற்றாண்டில் லகுளீசர் புதுப்பித்தார். பாசுபத சைவம் என்னும் சைவ மறு மலர்ச்சியை ஏற்படுத்தி லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தார். இந்தக் கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியது தான், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோர் உருவாக்கிய சைவ மதமாகும் (சோழர் ஆட்சியில் அரசும் மதமும் -ஆ. பத்மாவதி).

சைவமும் வேதத்தின் ஒரு பிரிவுதான். சைவம் தமிழர்களின் படைப்பல்ல, தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதுமல்ல, அதுவும் வட இந்திய இறையியலின் தொடர்ச்சி தான். சைவத்தின் தோற்றம் பற்றி டாக்டர்.அ.பத்மாவதி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.

“சோழர் ஆட்சி தொடங்குவதற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர், கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த அப்பரும், ஞானசம்பந்தரும் பக்தி இயக்கத்தை உருவாக்கினர். இந்தக் கால கட்டம்தான் பக்தி இயக்கக் கால கட்டம் என்றழைக்கப்பட்டது. வட நாட்டில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் செல்வாக்குப் பெற்று வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம் ஆகிய மதங்களின் தத்துவச் சாராம்சங்களையும், அம்மதங்களின் சமண பௌத்த மதங்களுக்கு எதிரான கொள்கைகளையும் வேத உபநிஷதங்களில் ருத்ரம்-சிவன் பற்றிக் கூறியுள்ளகருத்துக்களையும் ஆகமங்கள் கூறுகின்ற சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய தந்திர வழிபாட்டு முறைகளையும் எடுத்துக் கொண்டு இவையனைத்தும் கலந்த ஒரு புதிதான சமயத்தை நிறுவி, தலங்கள் தோறும் மேற்கூறிய கருத்துக்கள் அடங்கிய பாடல்களைப் பாடியவர்கள் அப்பரும், ஞானசம்பந்தரும் ஆவர். சமண பௌத்த மதங்களுக்கு எதிரான கருத்துக்களையும் பாடல்கள் மூலமாக வெளப்படுத்தியதன் விளைவாக மக்களுக்கு அம்மதங்கள் மீது எதிர்ப்புணர்ச்சியை வளர்த்தனர். அதனால் சமணமும் பௌத்தமும் தங்கள் வலிமையை இழந்தன. நசுக்கப்பட்டன. சைவம் பலம் பெற்றது.” (சோழர் ஆட்சியில் அரசும் மதமும் -ஆ. பத்மாவதி பக்கம் 10-11)

சைவ சித்தாந்தத்திற்கும் அரசு கட்டுமானத்துக்கும் இடையேயான உறவு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

“கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்த மெய்கண்டார் என்பவர் ஒரு சிறந்த தத்துவ நூலை எழுதினார். அவர் இந்நூலை எழுதியபோது மூன்றாம் இராஜராஜன் என்னும் சோழ மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.அவர், தாம் எழுதிய தத்துவ நூலில் இறைவனாகிய `பதிக்கும்` உயிர்களாகிய ‘பசு| விற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், வினைப்பயனில்  அழுந்தி பதியிலிருந்து விலகி நிற்க்கும் உயிரானது மீண்டும் ‘பதி| யை அடைய என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், ஆன்மாவின் தன்மைகள் யாவை, வினையின் தன்மைகள் யாவை, பதியாகிய இறைவன் எத்தன்மை உடையவன் என்பது பற்றியெல்லாம் விளக்க முற்படுகின்றார்.

ஆன்மாவானது;
  1. அரசனாகிய இறைவனோடு எப்போதும் ஒன்றாகி நிற்க வேண்டும். 
  2. அரசன் பணியே தன் பணி என்று கொள்ளவேண்டும். 
  3. ‘பசு` வாகிய ஆன்மாவிற்கும் ‘பதி| யாகிய அரசனுக்கும் நடுவே நிற்கும் பாசத்தை நீக்கி அவன் தாளை அடைவதற்கு இறைபணி (அரச பணி) சிறந்த வழியாகும். இந்த இறைபணியே இன்பத்தைக் கொடுக்க வல்லது. அந்த இறைபணியே சிவப்பேற்றினைக் கொடுக்கும். (பக்கம் 169- 170 சோழர் ஆட்சியில் அரசும் மதமும் -ஆ. பத்மாவதி)
மேலும் தொடர்கிறார்;

“இத்தத்துவத்தில் மெய்கண்டார் ‘பதி` யின் தன்மைகளாகக் கூறும் கருத்துக்கள் அரசனுக்கும் பொருந்தி வருவதாக அவர் கருதுகிறார் என்றே தோன்றுகிறது.

  1. தன்னைச் சார்ந்தாரைக் காப்பாற்றுபவன்.
  2. நல்ல குடிமக்களின் துன்பத்தை அரசனே முன்னின்று போக்குவான்.
  3. குடிமக்கள் தீய காரியங்கள் செய்துவிட்ட போதிலும் அவனை வணங்கினால் அவன் அருள் புரிவான். அவன் அருளாகிய அன்பு கிடைத்தால் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியோடு வாழலாம்.
என்ற கருத்துக்களைப் பொதிந்து கூறியிருக்கிறார்.அதுபோல்;
  1. உயிர்களும் அரசன் பணியே தங்கள் பணி என்று நினைக்க வேண்டும்.
  2. அரசன் எச்செயலில் ஈடுபடுகிறானோ அச்செயலையே சார்ந்து நிற்க வேண்டும்.
  3. மன்னனுக்கும் தனக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க சுயநலம். பேராசை போன்ற வினைகளை ஒழித்து விட்டால் மன்னனின் அருள் பெற்று வாழலாம். மன்னனுக்குச் செய்யும் சேவையே உண்மையான இன்பம். அந்த இன்பமே நிரந்தரமான இன்பமாக அமையும் என்ற கருத்துப்படக் கூறி ஆண்டானாகிய அரசனுக்கு நாட்டு மக்கள் அனைவரும் அடிமையாகி பதி-பசு போல் நிற்கவேண்டும் என்று கூறுகிறார் மெய்கண்டார்.”
இப் பதின்மூன்றாம் நூற்றாண்டு சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்று வந்த காலமாகும்.

“கோயில்களின் சொத்துக்குப் பொறுப்பாளர்களாக-கோயில் நிலங்களின் மேற்பார்வையாளர்களாக- வெள்ளாள நாட்டார்களே நீடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோயில் குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிக்கக் கூடிய வலிமையும் அவர்களுக்கு இருந்தது. “கோயிலை ஆட்டிப்படைத்த இவர்கள் சர்வ வல்லமை உள்ளவராக விளங்கினர். அவ்வாறு இருந்தபடியாலேயே கோயிற் பட்டர்கள், வெள்ளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றனர். கோயிலின் பேரில் சாதாரண மக்களைத் தண்டிக்கவும், நிலங்களை விற்கவும், அடிமைகளாகப் பெறவும் நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. சோழப் பேரரசிலேயே மிகப் பெரிய குற்றங்கள் இராசத் துரோகமும், சிவத் துரோகமுமாகும்.
கோயில் பொறுப்பாளர்களாகிய நாட்டார்கள் கோயில் நிலங்களைக் குத்தகைக்கு விடும்போது சிவனடியாராகிய சன்டேஸ்வரரே குத்தகைக்கு விடுவதாகப் பத்திரம் எழுதினர். குத்தகை எடுப்போர் தாங்கள் கடவுளின் நிலத்தையே குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்ற உணர்வை ஏற்படுத்த இம்முறை பயன்பட்டது.”

பக்தி இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று. மக்கள் கண்டு உணர்ந்து பரவச நிலையடையக் கூடிய உருவ வழிபாட்டை உருவாக்குவதாகும். மக்களின் சிந்தை ஒரு உருவை நோக்கிக்  குவிக்கப்பட்டது. அந்த உருவந்தான் அந்தப் பொருள்தான்  சிவன். இந்த உருவ வழிபாடுதான் மக்களை அதுவும் பாமர மக்களை ஒரு பரவச நிலைக்கு ஆளாக்கவல்லது. இந்த சிவன் எனும் குறியீடு தொன்மைக்கால அவேதர்களின் வீரபுருஷனின் குறியீடாக இருந்தது. இவன் மக்களின் கதாநாயகன், மக்களின் நண்பன். மக்களின் நண்பன் என்ற முன்னைய படிமத்தை பயன்படுத்தியே எஜமானிய சிவனை உருவாக்கினார்கள். பின்னர் இப்படிமம் மன்னனைப் பற்றிய படிமமாகியது. சைவர்களுக்கு சிவன், வைணவர்களுக்கு விஷ்ணு.

உருவம், அருவம் என்பது பற்றி அடுத்து வரும் பந்தியில் நோக்குவோம். வேதாந்திகளின் உருவமற்ற  அருவமான பிரமனும் ஒரு மாயைதான், சைவர்களின்  உருவமான சிவனும், வைணவர்களின்   உருவமான விஷ்ணுவும் மாயைகள்தான். பிரமம் எனும் மாயைக்கு சமூக அதிகாரம் கொடுப்பதற்காக வேதாந்திகள், உண்மையான உயிர்களையும், உலகத்தையும் மாயைகள் ஆக்கினார்கள். இதன் மூலம் உண்மையான உலகையும், உயிர்களையும் அதாவது உருவங்களை மாயை எனும் இறைவனுக்கு, அதாவது உருவமற்ற  அருவத்துக்கு அடிமையாக்கினார்கள். மறுபக்கத்தில்  பக்தி இயக்கமோ சிவனெனும் மாய உருவத்தை வைத்தே பசு (ஆன்மா) எனும் மாயையைத்  தோற்றுவித்தது. இதன் மூலம் உண்மைப் பொருளான மனிதன், மாயப்பொருளான பசுவாகவும் (ஆன்மா), உருவமற்ற மாயப்பொருள்  சிவனாகவும் (பதி) மாற்றப்பட்டான்.  இதைச் செய்து முடிப்பதற்காக பக்தி இயக்கமானது களப்பிரர்களினது ஆளுமைக்கு உட்பட்டிருந்த பௌத்த, ஜைன மத மன்னர்களையும்  பார்பானியர்களினதும் ஆளுமைக்குட்பட்டிருந்த வைதீக  மன்னர்களையும், எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய மக்களைத் தூண்டியது.

பண்பாட்டுக் கட்டுமானத்தில் நடந்த இந்த நிலப்பிரபுத்துவ எழுச்சி- கலாச்சார புரட்சி- கடுமையான வாத விவாதங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை.  பல்லவர்களின் படைகளுக்கு துணை போவது என்ற நிலையையும் தாண்டி சைவ சித்தாந்தவாதிகளும் அவர்களின் தலைவர்களான நாயன்நார்களும் தாமே வன்முறையாளவர்களாகவும் இருந்தார்கள். பிள்ளைக்கறி சமைத்துக் கொடுத்த நாயன்மார், சிவனைப் பழிப்பவர்களின் நாவை வெட்டி அறுத்த நாயன்மார், நாயன்மாரையே உயிருடன் எரித்த நாயன்மார், கண் பிடுங்கிக் கொடுத்த நாயன்மார் என வன்முறைப்பட்டியல் நீள்கிறது. அரச பயங்கரவாதிகளினதும், அரசு எதிர்ப்புப் பயங்கரவாதிகளினதும் புலனாய்வுத்துறை; முகாம்களில்  இரகசியமாக நடைபெறும் வன்முறைகளை நாயன்மார்கள் வெளி வெளியாகவே நடத்தினர். பக்தி இயக்கம் கூட்டு வன்முறையிலும் ஈடுபட்டது. ஜைனர்களும், பௌத்தர்களும் கழுவேற்றப்பட்டார்கள். பௌத்த, ஜைனப் பள்ளிகள் மட்டுமல்ல துறவிகளும் தீக்கிரையானார்கள்.  குடும்ப சதி, அரண்மனைச் சதி ஆகியவற்றின் மூலம் மன்னர்கள் கொல்லப்பட்டார்கள். இராச்சியங்கள் கைமாற்றப்பட்டன.
பக்தி இயக்க கால வன்முறை கோழைத்தனமானதாகவும், காட்டுமிராண்டித்தன்மை பெற்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகவும் ‘நேர்மை’ அற்றதாகவும் இருந்தது. நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்துக்கு பணிந்தும், பயந்தும் வாழும் போக்கை உருவாக்க பக்தி  இயக்கத்தினர் பயங்கரவாதத்தையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதாவது மக்கள் அச்சுறுத்தி வைக்கப்பட்டனர். பயங்கரவாதத்தின் குறிக்கோள் மக்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி வைப்பதுதான்.

மக்கள் நிலப்பிரபுத்துவ கட்டுமானத்துடன் பகைபட வாழ்வது ஆரோக்கியமான வாழ்வாக இருந்திருக்கும். அப்போதுதான் மக்கள் தமக்குள் இசைபட வாழ்ந்திருக்கமுடியும். ஆனால் பக்தி இயக்கமோ மக்கள் நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்திற்கு அடி பணிந்து வாழும் போக்கை ஏற்படுத்தியது. அதற்காக மக்கள் தமக்குள் பகைபட வாழ வழிநடத்தப்பட்டார்கள். பிற மதங்களுக்கு எதிராக பக்தி இயக்கம் வன்முறையைப் பிரயோகித்ததன் நோக்கம் அதுவேயாகும்.
பயங்கரவாதத்திற்கு இரு நோக்கங்கள் உண்டு. ஒன்று மக்களை அச்சுறுத்துவது. இதுதான் பிரதானமானது, மற்றையது மக்கள் தமக்குள் பகைபட வாழலை ஊக்குவிப்பது. பக்தி இயக்கம் இந்த இரண்டு கடமையையும் கச்சிதமாக நிறைவேற்றியது.

நாம் யார்க்கும் அடிமையல்லோம்  என்று முழங்குவதன் மூலம் மக்களுக்கும் மன்னனுக்கும் இடையே  இருந்த உறவை சுமூக உறவாகப் பேணி வந்த கருத்தியல் கட்டுமானத்தைத் தகர்த்தார்கள். வீரயுகத்திற்கு அடுத்ததாக வந்த அறநெறிக்கால கருத்தியல்களே அந்தக் கருத்தியல் கட்டுமானதாகும். நாம் நன்கு அறிந்த திருக்குறளும், கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரும் இக்கருத்தியல்  கட்டுமானத்தை உருவாக்கிய நூல்களில் சிறப்பானவையாகும்.

அறநெறிக்கால கருத்தியல் கட்டுமானத்தைத் தகர்ப்பதன் மூலம், தமிழ்நாட்டின் பண்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு எதிர்புரட்சியை நடத்தினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள் நிலப்பிரப்புத்துவ . அரசியல் கட்டுமானம் தனது குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே பண்பாட்டுக் கட்டுமானத்தில் பாரிய மாற்றங்கள்  செய்யப்பட்டுள்ளன. பல்லவர்களின் இராணுவம் களப்பிரர் கால அரசியல் கட்டுமாணத்தைத் தகர்க்க, பக்தி இயக்கம் பண்பாட்டுக் கட்டுமானத்தைத் தகர்த்தது.

ஆனால், பிரமம் (பதி) மற்றும் ஆன்மா (பசு) என்ற இரண்டில்லை, இருப்பது பிரமம் ஒன்று தான் என்றும், அந்த ஒன்றிலிருந்து தான் ஆன்மா உட்பட அனைத்தும் தோன்றியதென்றும், மீண்டும் அவை அந்த ஏக பிரமத்தில் ஒடுங்குகின்றது என்றும், பிரமம் தவிர அனைத்துமே மாயை என்றும் , இந்த மாயமான பிரமம்  ஒரு சடமல்ல, சக்தியுமல்ல அது ஒரு சித்து என்றும் கூறிய  வேதாந்திகளோ அருவ இறைவனைக் கட்டுப்படுத்தும் பிராமணர்களைத் தோற்றுவித்தார்கள். அருவத்தைக் கட்டுப்படுத்த ஒரு உருவம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த உருவத்தைக் கொண்டு மன்னனெனும் உருவத்தை பிராமணர்களுக்கு (இந்த உருவத்திற்கு) அடிமையாக்கினார்கள்.
ஆனால் உருவத்தை அருவமாக்கும் வித்தகம் மிக்க சைவமும் , வைணவமும் உருவமான மன்னனை கட்டுப்படுத்தும் உருவமான பிராமணர்களை ஏற்கவில்லை. பிராமணர்களின் அதிகாரத்துக்கு எதிராக  சைவ இயக்கம் முனைப்புக் காட்டி வந்ததன் காரணமாம் இதுதான்.

பிராமணர்களை ஏற்காத முறையில் சைவமும் வைணவமும் வைதீகத்தை விட உசத்தியாகத் தென்படலாம். ஆனால் இது உண்மையல்ல. வேதர்களின் பிரம்மத்துக்கு ஈடான ஆன்மாவை இவர்களும் ஏற்றுள்ளார்கள். அது எவ்விதம் என்பதை இதற்கு அடுத்ததாக நோக்குவோம்.

சைவமும் வைணவமும் வேதாந்தத்தை முழுமையாக நிராகரித்தவர்களல்ல. “உலகம் உண்மை, உயிர்களும் உண்மை  எனக் கொள்வதால் சைவசித்தாந்திகளைப் போலவே இராமானுசரும், மெய்ம்மைவாதி ஆகிறார். அவர்களைப் போலவே இவரும் ஒரு பன்மைவாதி. வேதாந்திகளைப் போல பிரமாணம் ஆறு எனக் கொள்ளாது சைவசித்தாந்திகளைப் போலவே இராமானுசரும் பிரமாணம் மூன்று என்றே கொள்ளுகின்றார். அன்றியும் வேத உபநிடதங்களை மட்டுமே பிரமாணமாகக் கொள்ளாது. சைவ சித்தாந்திகளைப் போலவே இராமானுசரும் புராணங்களையும் ஆகமங்களையும் பிராமாணமாகக் கொள்ளுகின்றார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சைவ சித்தாந்திகளைப் போலவே இராமானுசரது மதமும் இறைவனுக்கே முதன்மை வழங்கி அவனையே நடுநாயகமாகக் கொண்டு இயங்குகின்றது” (இந்திய தத்துவ ஞானம் பக்330).

வேதாந்திகளின் அடிப்படைக் குணாம்சமான வேத உபநிடதங்களை சைவமும், வைணவமும் ஏற்றுக் கொள்கின்றன. வேறென்ன வேண்டும்.
“சைவ சித்தாந்தக் கோட்பாட்டைச் சமூக வரலாறாக நோக்கும் பொழுது அதன் முக்கிய சமூகப் பண்பாக எடுத்துக் கூறப்படுவது அதன் வேளாளச் சார்பு ஆகும். இவ்வேளாளச் சார்பு சில வேளைகளில் பிராமண எதிர்ப்புத் தொனிகளையுடையதாகவும் காணப்பட்டது.

இந்தக் கட்டத்திலே சைவ சித்தாந்தமானது இராமாநுசர், பசவர் ஆகியோரின் நெறிமுறைகள் போன்று அக்காலச் சமூக அமைப்பு முறைமைக்கு முற்றிலும் எதிரானதாக அமையவில்லை. சைவ சித்தாந்தம், சாதியமைப்பை ஏற்றுக் கொண்டது. ஆனால் சாதியால் வரும் தீட்டு உடலுக்கேயுரியது. அது ஆன்மாவுக்குரியதல்ல என்றது. சரியை, கிரியை, யோகத்துக்கு மேல் உண்மையான ஞானம் பெறுவதற்கு நற்சாதியும் அவசியம் என்றது” (சித்தியார் -275).

சமூகக் கண்ணோட்டத்தில் சைவ சித்தாந்தத்தின் மிக முக்கியமான அமிசம். இது அங்கீகரிக்கும் வழிபாட்டு முறைமைகளும் அது சுட்டும் முத்தி நிலைகளுமாம்.

சைவசித்தாந்தத்தில் வழிபாட்டு மார்க்கங்களாகக் குறிப்பிடப்பெறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குள்ளும் சமூகத்தின் சகல மட்டங்களிலுமுள்ள மக்கள் யாவரும் இடம் பெறுவர். ஆயினும் சரியை பற்றிக் குறிப்பிடும் சிவஞான சித்தியாரின் சுபக்கச் செய்யுளை நோக்கும் பொழுது (செய்யுள் 270) அது கோயிலுக்குட் செல்லத்தக்கவர்க்கே உரியதாகக் கொள்ளப்படதாக உள்ளதெனினும் பெரிய புராணத்திற் பேசப்பட்டுள்ள நாயனார்கள் பலர் கோவிலுட்புக முடியாதவர்களே. சாதி வரன்முறையை ஏற்றுக்கொள்ளும் சைவ சித்தாந்திகள் சாதிகள் உடலோடு அழியும் என்பர்.
சரியை, கிரியை, யோகம் வழியாகப் பெறுவது பதமுத்தி என்பதும் ஞானமே சாயுச்சியத்தை தருமென்பதும் சித்தாந்தக் கொள்கையாகும். இதில் உள்ள முக்கியத்துவம் என்னவெனில் நால் வகையினருக்கும் முத்தி கிடைப்பதை இத்தத்துவம் உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறு உறுதிப்படுத்துகின்ற வேளையில் ஒவ்வொரு படிநிலையிலும் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு முத்திநிலை கிடைப்பதாகவே கூறுகின்றது. இந்த வேறுபாட்டைக் குறிப்பிட்ட சொற்களே நன்கு உணர்த்துகின்றன.

“சாலோகம் என்பது ஒரே உலகம் அல்லது இறைவன் இருக்கும் இடத்தை அடைதல், சாமீபம் இறைவனுக்கு அண்மையை அடைதல், சாரூபம் ஒரே ரூபம், சாயுச்சியம் எனப்படுவது  இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை” (இந்திய தத்துவ ஞானம்) இதனால் முத்திநிலை என்பது எல்லோருக்கும் சமமான நிலை அன்று என்பது புலனாகிறது. மோட்ச ராச்சியம் (The Kingdom of Heaven)எனும் எண்ணக்கருவுக்கும், சைவசித்தாந்தம் கூறும்  முத்திநிலைகட்கும் வேறுபாடு காணப்படுகிறது. பூவுலகத்திலே காணப்படுகின்ற படிநிலை வரன்முறை வேறுபாடு (Hierarchy) முக்தி நிலையிலும் பேணப்படுவது சுவாரசியமான ஒரு சமூக உண்மை யாகும். சைவசித்தாந்தத்தில் உண்மையான பிரதான முக்தி சாயுச்சியமேயாகும். சாலோக, சாமீப , சாரூபமுத்தி நிலைகளைப் பெற்ற ஆன்மாக்கள மீண்டும் பிறந்தே இறுதியில் சாயுச்சிய நிலைய அடையவேண்டுமென்பர்.”
சைவ வைதீகமும் ஆன்மா பற்றிப் பேசுகின்றது. சைவ சித்தாந்தம் ஆன்மாவுக்கு சாதியில்லை. அது உடலுக்கே உரியது என்கிறது. உடல் அழிய சாதியற்ற ஆன்மா விடுதலை பெறும் என்கிறது. அதாவது, சாதியுண்டு ஆனால் அது ஆன்மாக்கில்லை உடலுக்கு மாத்திரமேயுண்டு என்பதுதான் சைவ சித்தாந்தத்தின் கோட்பாடு.  இதனால் தான் சாதி சமத்துவப் போராளிகள் இன்று வரை உடல் நீக்கம் செய்யப்படுகிறார்கள் போலும். அவர்களின் சாதியற்ற ஆன்மா  விடுவிக்கப்படுகிறது போலும். சைவசித்தாந்தத்தை வேதாந்தத்தின் மூத்த புதல்வன் என்று சொன்னால் மட்டும் போதாது, தந்தையை மீறிய தனயன் என்றும் கூற வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு பார்ப்பனியம் ஒரு அந்நியத் தத்துவந்தான். இதனால் அவர்கள் வேதாந்தம் தமது மரபில் இல்லை என நிம்மதி பெருமூச்சு விடக்கூடும். ஆனால் சீர்திருத்தப்பட்ட வேதாந்தந்தான் சைவ சித்தாந்தம். சைவ வைதீகர்களுக்கு எதிரான போராளிகளாகிய சித்தர்கள் பற்றியும் இராமலிங்கர் பற்றியும் கற்போமானால் இது மேலும் புரியும்.

வேதாந்தம் மனித உடலையும், அவ்வுடலுடன் தொடரப்பட்ட அனைத்து பூதங்களையும் மாயை என்று மாயாவாதம் பேசியது. சைவ சித்தாந்தமோ உடலும் அதனால் உணரப்படும் பூதங்களும் உண்மையென்றது. ஆனால், இந்த உண்மைப் பூதங்களை, சைவம் இருகூறுகளாகப் பிரித்தது. தீட்டு உடல்,  தீட்டு பூதங்கள் ஒரு புறம், புனித உடல் புனிதப் பூதங்கள் மறுபுறம் என இரு கூறுகளாக மனித உடல்கள் பிரிக்கப்பட்டன.  ‘அறிவியல் பூர்வமான’ தர்க்கம்!
பார்ப்பானியர்கள் ஆண்டான் அடிமை மதிப்பீட்டில் நிற்க, பக்தி இயக்கத்தவர்களோ நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளுக்கு நகர்ந்துவிட்டார்கள்.  இதன் மூலம் ஆன்மீகத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டார்கள்.

நன்றி:  எதுவரை on July 7, 2012

No comments: