பகுதி 1 ‘தேசியமும் – சைவமும் சில தகவல்கள்’ எனும் சென்ற மாதத் தொடரின் சுருக்கம்:
தமிழ்த் தேசியம் மதச்சார்பின்மைக்
குணாம்சங் கொண்டது என்ற கருத்து உண்மையல்ல. தமிழ்த் தேசியம் தனக்கு எதிரான
தேசியத்துடனான வினையாற்றலுக்காக (பதில் வினை) கடைப்பிடித்து வரும் ஒரு
அரசியல் தந்திரோபாயமே மதச்சார்பின்மையெனும் அரசியல் நிலைப்பாடாகும்.
மதச்சார்பின்மையா, மதச்சார்புபெற்றதா என்பது ஒரு தேசியத்தின் பிரதான
ஜனநாயகக் குணவியல்புகளில் ஒன்றாகும். இக்குணவியல்பைத் தீர்மானிப்பது
அத்தேசியத்தின் முதல்வினைச் செயல்பாடுகளேயாகும். தமிழ்த் தேசியத்தின்
இதுவரையான முதல்வினைச் செயற்பாடுகளை நோக்கும்போது தமிழ்த் தேசியத்தின்
தலைமைக் குணவியல்பு யாழ்- சைவ- வேளாள இயலாகவே இருந்து வருகின்றது. இது சைவ
சித்தாந்தத்துடன் நெருங்கிய பிணைப்புக் கொண்டதாகும். இதனால், தமிழ்த்
தேசியம் சாதிய ஒடுக்குமுறைக் குணாம்சத்தையும் தன்னுடன் சேர்த்துக்
கொண்டுள்ளது. இதுதான் சென்ற மாதப் பகுதியின் மையக் கருத்தாக இருந்தது.
சென்ற மாதக் கட்டுரை தனது மையக் கருத்தை எடுத்தியம்புவதற்காக இரு உப-மையக் கருத்துகளையும், தேசியம் தொடர்பான ஒரு கோட்பாட்டையும் மதம் தொடர்பான இரு சமூக நிகழ்வுப் போக்குகளையும் எடுத்தாண்டிருந்தது.
மதச்சார்பின்மை எனும் பதம் அக்கோட்பாட்டின்
பொருளை வெளிக்கொணரவில்லை என்பதுவும், சைவ சித்தாந்தம் நிலப்பிரபுத்துவத்தின்
சித்தாந்தமாகவே தோன்றி அதிகாரத்துவத்திற்கும் சேவை செய்தது என்பதுவுந்தான்
இவ் இரு உப-மையக் கருத்துக்களாகும்.
பிரித்தானிய காலனியல் காலத்தில் இருந்து இன்று வரை யாழ் – மையவாத சைவ வேளாளத் தேசியம் கிறிஸ்துவத்துடன் ஒரு நட்பைப் பேணி வருகிறது என்பதுவும், சைவம், வன்முறையுடன் நெருங்கிப் பிணைந்திருந்தது என்பதுவுமே சென்ற தடவை எடுத்தாளப்பட்ட இரு சமூக நிகழ்வுப் போக்குகளாகும். பின்னைய நிகழ்வுப் போக்கு போகிற போக்கில் வெறுமனே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது . விவரங்கள் போதியளவு தரப்படவில்லை. காரண-காரியத் தொடர்புகளுடன் அந்நிகழ்வுப் போக்கு ஆராயப்படவுமில்லை. காரணத்துடனேயே இது தவிர்க்கப்பட்டது. கட்டுரையின் மையக் கருத்தை அடைவதற்கும் இந்நிகழ்வுப் போக்குக்கும் எதுவிதத் தொடர்புமில்லாததே இதற்கான காரணமாகும். ஆனால் தமிழ்த் தேசியத்தின் குழுவாத வன்முறைக்கும் சைவத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. அது மிக நெருங்கிய தொடர்பாகும். இது பற்றிய விவரத்துள் பின்னர் செல்லவுள்ளோம் என்பதைக் கட்டியங்கூறவே இவ்நிகழ்வுப் போக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
தேசியத்தின் குணவியல்புகளைத் தீர்மானிப்பது சுயவிருப்புடன் எந்த நிர்ப்பந்தமும் இன்றி, தேசியத்திற்கு உரித்தான மக்களுக்குள்ளே (அகத்தே) நடைபெறும் முதல் வினைகளேயாகும். புறநிலை நிர்ப்பந்தத்தின் காரணத்தால் புறத்தே நடைபெறும் பதில் வினைகளல்ல. இதுவே தேசியம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோட்பாடாகும்.
தேசியமும் – சைவமும் எனும் முதலாவது அத்தியாயத்தின் முதல் பாகமான ‘தேசியமும் – சைவமும் சில குறிப்புகள்’ எனும் தலைப்பின்கீழ் வரும் மையக்கருத்து ஏற்கனவே பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபற்றித் தொடர்ந்தும் விவரிப்பது நிறுத்திக் கொள்ளப்படுகிறது.
ஆனால், அம்மையக் கருத்தை வந்தடைவதற்கு துணைபுரிந்த ‘முதல் வினை, பதில் வினைக் கோட்பாடு’ இனிவரும் இப்பகுதியில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
அடுத்ததாக துணை மையக் கருத்தான செக்குலரிசம் பற்றிய விளக்கம் போதாது என்பது தெரிகிறது. அத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள விளக்கம் பரவலாக பலராலும் மறுக்கப்படும் என்பதால் செக்குலரிசம் பற்றி முன்வைக்கப்பட்ட விளக்கத்தை நியாயப்படுத்த மேலதிக விவாதங்கள் தேவை என்பதுவும் புரிகிறது. ஆனால் ஒவ்வொரு தேசியத்திற்கும் அத் தேசியத்திற்குரிய மதத்திற்கும் இடையேயான பரஸ்பர உறவு நிலையைப்பற்றிக் கூறும்போது செக்குலரிசம் ஒரு துனைமையக் கருத்தாக தொடர்ந்தும் வரவே செய்யும், இறுதியில் செக்குலரிசத்தை மையப் பகுதியாகக்கொண்ட தனியான அத்தியாயம் ஒன்று முன்வைக்கப்படும். இதுதான் அனேகமாக இறுதி அத்தியாயமாக அல்லது முடிவுரையாக அமையலாம். இக் கட்டுரைக்கான மகுடமும் அதுவாகத்தான் இருக்கும் ஏனெனில் இலங்கைத் தீவின் மக்கள் எதிர்பாக்கும் பல்தேச அரசின் அல்லது பல தேசிய அரசுகளின் ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு விதியில் (constitution) செக்குலரிசம் பிரதான இடம் வகிக்கும் என்பது நிச்சயமானது ஆகவே செக்குலரிசம் பற்றிய தனியானபகுதி இங்கு தவிர்க்கப்படுகிறது. இரண்டாவது துணை மையப்பகுதியான சைவ சித்தாந்தத்தின் வர்க்கச்சார்பு பற்றிக் கூறியது போதும் எனக் கருதுகிறோம். இது ஒரு வரலாற்று ஆய்வுக்கட்டுரையல்ல. அகத்தை நெறிப்படுத்துவதற்கான அரசியல் வழிகாட்டுக் கட்டுரையேயாகும். ஆகவே சுருங்க வேண்டிய இடங்களில் சுருங்கிக் கொள்வோம்.
ஆனால் காலனியல் காலத்தின் போதும், காலனிக்கு உடன் பிந்திய காலத்திலும் சைவசித்தாந்தமானது, எந்த வர்க்கத்தின் தோழனாக இருந்தது என்பது பற்றிய புரிதல் அவசியமானது. அப்போதுதான் எம்மால் தமிழ்த் தேசியத்தைப் முறையாகப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே இவ்விவகாரத்தை சைவமும் தேசவழமையும் எனும் உப தலைப்பின் கீழ் இதே அத்தியாயத்தில் விவரிப்போம்.
அடுத்ததாக சைவத்தின், வர்க்கச் சார்பு பற்றிய துணைமைய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சைவமும் வன்முறையும் பற்றிய சமூக நிகழ்வுப் போக்கை சற்று விரிவாகவே நோக்குவோம். தமிழ் அரசியலர்கள் அனைவரும் (தீவிரவாதிகள், சமரசவாதிகள், மிதவாதிகள்) வன்முறையாளர்களாக இருப்பதன் காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டாமா?
இவ்விவரங்களின்படி நோக்கில் ‘தேசியமும் – சைவமும்’ எனும் முதலாவது அத்தியாயம் ஆறு பகுதிகளாகப் பிரிகின்றது. அவையாவன:
- தேசியமும் – சைவமும் சில தகவல்கள் – (முடிந்து விட்டது)
- தேசிய உருவாக்கத்தில் முதல்வினையும் பதில் வினையும் (இவ்விதழில் வெளிவருகிறது)
- தமிழ்த் தேசியத்தில் சைவமும் கிறிஸ்துவமும் – உறவும் பகையும்
- சைவமும் – வன்முறையும்
- தேசவழமையும் சைவமும்
- தமிழ்த் தேசியத்தின் குணாம்சம் – தொகுப்புரை
அத்தியாயம் 1- பகுதி 1 தேசிய உருவாக்கத்தில் முதல் வினையும் பதில் வினையும்
—————————————————————————————————————————————-
பகுதி 2.-(II) பெற்றுக்கொள்வோம் ! துடைப்பத்தை
‘தேசியமும் – மதமும்’ எனும் கட்டுரையின் முதலாவது அத்தியாயமாக தேசியமும்
– சைவமும் அமைந்தது ஏன்? தேசியமும் – சைவமும் எனும் அத்தியாயத்தை இவ்வளவு
விரிவாக ஆராய வேண்டியது ஏன்? பௌத்தத்தை விட்டு சைவத்தை விமர்சிப்பதா? மூடி
மறைக்க வேண்டிய எமது குப்பை கூளங்களை நாமே கிளறிக் காட்டுவதா? இது பௌத்த
வன்முறையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியா? இவை தமிழ் தேசியர்களிடம்
இருந்து வரும் இயல்பான, மரபு வழிக் கேள்விகளாகும். கேள்விகள் என்ற
தோரணையில் வரும் கண்டனங்கள் என்றும் கூறலாம். கேள்விகளாக ஏற்றுக் கொண்டு
மீண்டும் பதிலளிப்போம்.
இக் கட்டுரை எதிரிக்கு எதிராகப் போராடுவதற்கானதோர் கருத்தியல் ஆயுதமல்ல,
எதிரியை அம்பலப்படுத்தும் ஒரு பிரச்சாரப் பீரங்கியுமல்ல. மாறாக, இது
தமிழர்களாகிய நாம் நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு
துடைப்பமேயாகும் அல்லது பல்துலக்கும் தூரிகையாகும். பின்னையதே பொருத்தமான
உவமானம். பல் தூரிகையைக் கையில் எடுப்பது பிறரின் பற்களைத் துலக்கவல்ல.
எமது பற்களைத் துலக்கவே. இது ஒரு தமிழ்த் தூரிகை, ஆகவே தமிழர்களின்
பற்களுக்கிடையே உள்ள மாசுகளை அகற்றுவதுதான் இத்தூரிகையின் கடமையாகும்.
சிங்களவரின் பற்களுக்கிடையே உள்ள மஹாவம்சம் என்னும் மாசை அகற்றுவது
இக்கட்டுரையின் கடமையல்ல. இக்கட்டுரை ஏதோ ஒரு காரணத்துக்காக சிங்கள
மொழியாக்கம் செய்யப்பட்டால், அவ்விதம் செய்யப்பட்டதன் நோக்கம், தமிழ்
மக்கள் தங்கள் பற்களைத் துப்புரவு செய்ய பயன்படுத்தும் துரிகைகளையும் அதைப்
பயன்படுத்தும் முறையையும் சிங்கள மக்களின் பார்வைக்கு முன்வைப்பதாக
அமையுமே தவிர, சிங்கள மக்களுக்குத் தேவையான தூரிகையாக இதைக் கொள்ளலாமா,
எனக் கேட்பதாக அமையாது. மஹாவம்சத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ்
மக்களிடையே நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. மஹாவம்சம் தமிழ் மக்களின்
புற எதிரி, சைவம் தமிழ் மக்களின் அக எதிரி. தமிழ் மக்களின் அக அசுத்தங்கள்
நீக்கப்பட்டு அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அது முதல் வினைகளில்
ஒன்றாகும். ஆகவேதான், சைவம் பற்றிய விரிவான பார்வை அவசியப்படுகிறது. தமிழ்
மக்கள் நின்று, நிதானித்து தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு முன் செல்ல
வேண்டும் என்பதே வரலாற்றின் கட்டளையாக உள்ளது. முதல்வினையாற்றுவதற்கான
எந்த கால அவகாசத்தையும் மக்களுக்கு வழங்காமல், இன உணர்ச்சிகளை தொடர்ந்து
தூண்டி விட்டு பதில்வினைச் செயல்களிலேயே தொடர்ந்தும் மக்களை
வைத்திருக்கும் போக்கு முடிவுக்கு வரவேண்டும். உணர்ச்சி மேலீட்டால் அல்ல
உணர்வு பூர்வமாக மக்கள் செயலாற்ற வேண்டும்.
ஏனெனில் , சிங்களப் பேரின வாதத்திற்கும், தமிழ் தேசியவாதத்திற்கும்
இடையேயான கடந்த 70 வருட காலப் போராட்டத்தில் தமிழ்த் தேசியமும் தமிழ்
பேசும் மக்களும் தொடர்ச்சியான தோல்விகளையே சந்தித்து வருகிறார்கள். இதற்கான
காரணத்தை அவர்கள் ஆராய வேண்டும். தமது கண்ணோட்டங்களிலும் தமக்கிடையேயான
உறவுகளிலும் அவர்கள் பாரிய மாற்றங்கள் செய்ய வேண்டும். அதாவது முதல்வினைக்
களத்திலும் அவர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அவ் ஆற்றலை வெளிக்
கொணரத் தடையாக இருக்கும், நிலவும் கழிவுப் பொருட்களை அகற்றுவதுதான்
இக்கட்டுரையின் நோக்கமாகும் ஆகவே தான் சைவத்திற்கு அதிக முக்கியத்துவம்
கொடுபடுகிறது.
பகுதி 2-2 வெற்றி, தோல்வி இரு மாறுபட்ட கண்ணோட்டங்கள் !
தனித்தனிச் சம்பவங்களாக எடுத்து நோக்கினால் ‘தோல்விகள் தொடர்கின்றன’
என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ‘ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தமிழ்த்
தேசியம் வளர்ச்சி பெற்றே வருகிறது’ என்பதே பெருமளவிலான தமிழ்த்
தேசியர்களின் கருத்தாக உள்ளது. சிலர் அவை `தோல்விகளேயல்ல, பின்னடைவுகள்
மாத்திரமே’ என்கின்றனர். ஒவ்வொரு தோல்வியும் அல்லது பின்னடைவும் தமிழ்
மக்களுக்கு பெரும் துன்பங்களைக் கொடுத்து வருகிறது, என்பதை அனைவரும்
ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் இவ் அழிவுகளை ஈடு செய்யவோ அல்லது துன்பங்களைப்
போக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அது சிங்கள அரசின்
பொறுப்பு எனத் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் பதில்வினையாற்றுவதற்கான மூலப் பொருட்களாக இவ் அழிவுகள் பயன்படுத்தப்படுகின்றவே
தவிர அழிவு நிவர்த்திகளையிட்டு எந்த முதல்வினையாற்றலும் இன்று வரை
நடைபெறவில்லை. அழிந்து போனவர்களில், சேதம் அடைந்து போனவர்களில் பெரும்
எண்ணிக்கையினர் இன்னமும் அழிந்த நிலையிலும் சேதமடைந்த நிலையிலும் உயிரைப்
பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். மக்களின் இந்நிலை மக்களால் மேற்கொள்ளப்பட
வேண்டிய நிரந்தர தியாகங்களாக அர்த்தப்படுத்தப்படுகின்றன. ‘இவ்வித
தியாகங்கள் இன்றி தமிழ்த் தேசியம் வளர முடியாது’ என்றும் வாதிடப்படுகிறது.
‘தேசத்திற்காக மக்கள் வேள்வித் தீயில் கருக்கப்படுவதில் என்ன தப்பு?’
என்றும் கேட்கப்படுகிறது. ‘சும்மா இருந்தால் சுதந்திரம் வராது’ என்பது
அடுத்த அறிவுரை. மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலையையும், தேசத்தின்
அரசியல் அந்தஸ்து நிலையையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வெவ்வேறு சமூக
நிகழ்வுகளாகக் கருதுவது தான் தேசியர்களின் இவ்வித பார்வைகளுக்கான காரணமா?
முன்னையது தேசத்தின் அகநிலை தொடர்பானது, பின்னையது புறநிலை தொடர்பானது. இவை
இரண்டிற்கும் (அகத்திற்கும், புறத்திற்கும்) இடையேயான தொடர்பைப் புரிந்து
கொள்வதில் தமிழ்த்தேசியர்கள் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கருதலாமா?
இல்லை, இது அறிவில் உள்ள குறைபாடல்ல, அரசியல் பார்வையில் உள்ள
குறைபாடேயாகும். தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியை அளவிடும் அளவுகோல் எது
என்பதே இங்குள்ள பிரச்சினை. மனக்கிளர்ச்சிகளையும் (sentimental feelings)
இன உணர்ச்சிகளையும் (racial feelings) மையமாகக் கொண்ட பற்பல அளவுகோல்கள்
முன்வைக்கப்பட்டாலும், அத் தேசத்தின் இறையாண்மை உரிமையின் அளவும், அத்தேச
மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலையின் அளவுந்தான் ஒரு தேசியத்தின்
வளர்நிலையை அளவிடுவதற்கான அளவுகோல்களாகும். இறையாண்மை, புறநிலை தொடர்பானது.
அது பதில் வினைகள் மூலம் எதிர்கொள்ளப்படுவது. மக்களின் சமூக பொருளாதார
வாழ்நிலையோ, அகநிலை தொடர்பானது. இது முதல்வினை மூலம்
எதிர்க்கொள்ளப்படவேண்டியதாகும்.
தமிழ் தேசத்தின் இறையாண்மை உரிமையின் மட்டம் என்னவாக
உள்ளது. அதிகாரப் பரவலாக்கல் முழுமையாகவே நிராகரிக்கப்பட்டுவிட்டது.
தனித்துவம் பற்றி எவரும் முணுமுணுக்கக் கூடாத முறையில் அனைவரின் வாய்களும்
பூட்டுப் போடப்பட்டுவிட்டது. பராம்பரிய தமிழ் பிரதேசத்தின் நிலவளமும்,
நீர்வளமும் எந்தத் தடங்கலும் இன்றி அபகரிக்கப்பட்டு வருகின்றன.
பௌத்த-சிங்கள மயமாக்கல் மிக இலகுவாகவும் மிக வெளிப்படையாகவும் நடைபெற்று
வருகின்றன. தமிழ் தேசத்தின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்கு கடமைப்பட்ட
இறையாண்மை மிக்க அரசியல் அமைப்புகள் அனைத்துமே தமது இறையாண்மையை இழந்து
நிற்கின்றன. சிற்சில அரசுகளில் தங்கி நிற்கும் இறையாண்மை இல்லா அரசியல்
அமைப்புகளே பரந்து காணப்படுகின்றன. அவர்களே வணங்கா முடியர்களாகப் பவனி
வருகிறார்கள். இவை அனைத்தும் தமிழ்த் தேசியம் வளர்ந்துவிட்டதற்கான
அடையாளங்களா? இல்லை. 2009 முள்ளிவாய்கால் தோல்விக்குப் பின் தமிழ்த்
தேசியம் வீழ்ந்துள்ளது. அது தனது இறையாண்மையை முற்றாக இழந்து
காணப்படுகிறது. தனது பதில் வினையாற்றலை தான் விரும்பியபடி பிரயோகிக்க
முடியாமல் முடங்கிப் போய் உள்ளது. பிற அரசுகளின் தாளத்துக்கு ஒப்ப தனது
பதில் வினையாற்றலை செயற்படுத்தும் அளவுக்குப் பலவீனப்பட்டுள்ளது.
இனி, முதல் வினைக் களத்திற்குச் செல்வோம். மக்களின் சமூக பொருளாதார
வாழ்நிலையின் மட்டம் என்னவாக உள்ளது? இங்கு வெவ்வேறுபட்ட இருவித மட்ட
(level) நிகழ்வுப் போக்குகள் நடைபெற்று வருகின்றன. இதனால்
இவ்விவகாரத்தைவிட்டு இரு வெவ்வேறுப்பட்ட அரசியல் பார்வைகள் நிலவுகின்றன.
இப்பார்வைகள் தம்மைத் தோற்றுவித்த நிகழ்வுப் போக்குகள் போன்று வெறுமனே
வெவ்வேறுபட்டவைகளல்ல, ஒன்றை ஒன்று மூர்க்கமாக நிராகரிக்கும் பகைமைத் தன்மை
பெற்றவைகளாகும். இவ்வெவ்வேறு நிகழ்வுப் போக்குகள் தமிழ் தேசியத்தை இரு சமூக
பொருளாதாரக் கூறுகளாகப் பிரித்துள்ளன. முதலாவது கூறு, ஆரம்பத்தில், மணி
ஒடர் பொருளாதாரத்தில் தங்கி நிற்பவர்களை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர்
படிப்படியாக புலம் பெயர்ந்தோர்களையும், புலம் பெயர்ந்தோரில் தங்கி
வாழ்பவர்களையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது.
இரண்டாவது கூறு, தமிழ்ப் பாரம்பரிய பிரதேசங்களில் நடைபெறும் பொருளாதார
நடவடிக்கைகளில் தங்கி நிற்போர்களை உள்ளடக்கியதாகும். மிகச் சாதாரண மொழியில்
சொல்வதானால் இவ்விரு கூறுகளையும் அந்நிய நாடுகளில் தொழில் புரிவோர், உள்
நாட்டில் தொழில் புரிவோர் எனக் கூறலாம். பிரித்தானிய காலனியல் காலத்தில்
இருந்தே இவ்விரு பிரிவுகளும் வெவ்வேறுபட்ட இரு அரசியல் பிரிவுகளாக வளரும்
போக்கு ஆரம்பித்து விட்டது. இவ் இருபிரிவினருக்கும் இடையேயான அரசியல்
முரண்பாடு அவ்வப்போ பெரும் அரசியல் போராட்டங்களாக நடைபெற்று வந்துள்ளன. ஒரே
ஒரு எடுத்துக்காட்டை மட்டும் கூறி இன்றைய நிலைக்கு வருவோம். சிறிமாவோ
பண்டாரநாயக்காவுக்கு மிளகாய் மாலை அணிவித்து கோலாகல வரவேற்புக்
கொடுத்தார்கள், யாழ் மாவட்ட உள்ளுர் தொழில் புரிவோர். அதே காலப்பகுதியில்
அதே சிறிமாவோ அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக யு.என்.பியுடன் இணைந்து
பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும், சிறிலங்கா இராணுவத்துள்ளும் வினை
புரிந்தார்கள் மணி ஒடர் பொருளாதார அணியினரின் அரசியல் தலைவர்கள்.
அந்நிய நாடுகளில் தொழில் புரிவோர்க்கும், உள்நாட்டில் தொழில்
புரிவோர்க்கும் இடையேயான அரசியல் முரண்பாடு தமிழ்த் தேசியத்தின் அக
முரண்பாடாகும். உயர் சாதிய நில உடமையாளர்கள், சைவத்துவவாதிகள், காலனியல்
தரகர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகிய அனைவரும் அந்நிய நாடுகளில் தொழில்
புரிவோருடன் இணைந்திருந்தனர். இது ஒரு அரசியல் முன்னணி. இதுதான் மணி ஒடர்
பொருளாதர முன்னணியாகும். இவர்கள் தவிர்ந்த பிறர் வேறோர் பக்கம், அவர்கள்
உள்நாட்டில் தொழில் புரிவோரின் முன்னணியாகும். இவ் இருசாராரும் இடையேயான
வினைகள் தான் தமிழ் தேசியத்தின் தொடர்ச்சியான முதல் வினையாகும்.
இன்று இப் பிரிவுகள் இரண்டும் புலம் பெயர்ந்தோர் பிரிவு என்றும்,
தாயகத்தில் தொழில் புரிவோர் பிரிவு என்றும் உருவெடுத்துள்ளது. முதல் வினை
தொடர்கிறது. இதன் அர்த்தம் புலம் பெயர்ந்தோரின் ஆக்கக் கூறுகளும், மணி ஓடர்
பொருளாதார முன்னணியின் ஆக்கக் கூறுகளும் ஒன்று என்பதல்ல. மூலக்கூறுகள்
வர்க்கக் குணம்ச மாற்றமும் பெற்றுள்ளன. ஆனால் உள்நாட்டில் தொழில்
புரிவோரின் முன்னணியின் மூலக்கூறுகளும், தாயகத்தில் தொழில் புரிவோரின்
ஆக்கக் கூறுகள் பெருமளவு மாற்றத்திற்கு உள்ளாகவில்லை. முன்னர் மணி ஒடர்
பொருளாதார அணி வடமாகாணத்திற்குள் மட்டும் செயல்பட்டது ஆனால்
புலம்பெயர்ந்தோர் அணி, இலங்கை முழுமைக்கும் பரந்துள்ளது. அது மட்டும் அல்ல
புலம் பெயர்ந்தோர் அணி, தமிழ் பேசும் மக்களின் கீழ் மட்டத்தில் கணிசமான
தொகையினரையும் தற்போது உள்ளடக்கியுள்ளது அதாவது புலம்பெயர்ந்தோரின்
வர்க்கச் சேர்க்கை மணியோடர் முன்னணியினதையும் விட குணாம்சரீதியாக
வேறுபட்டது.
இருந்தும் சமூகப் பொருளாதார அந்தஸ்திலும் சமூக பண்பாட்டுக்
கூறுகளிலும் அரசிய-பொருளாதார நோக்கிலும் புலம்பெயர்ந்தோர் அணியும்
தாயகத்தில் தொழில் புரிவோர் அணியும் முற்றிலும் வெவ்வேறான குணாம்சம்
கொன்டவர்களாக மாறி உள்ளார்கள். தாயகத்துத் தமிழர்கள் ஒரு முழுமையான தனி
அலகாக (unit) உள்ளனர். இவ் அலகே தேசியம் என அழைக்கப்படுகிறது. ஆனால் புலம்
பெயர்ந்தோர் இவ்விதமான ஒரு தனி அலகாக இல்லை. அவ்விதம் இல்லாதிருப்பதற்கான
சமூகப் பொருளாதாரக் கூறுகளை நோக்கி அவர்கள் வேகமாக நகர்ந்து வருகிறார்கள்
இவர்களுக்கென்று பொதுப் பிரச்சனைகள் உண்டு ஆனால் அப்பிரச்சனைகள் அவர்களைத்
தனி அலகாக இணைக்கும் வல்லமையற்றவை. புலம் பெயர்ந்தோர் தத்தமது நாடுகளில்
தாம் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்வதற்காக தமிழீழத்
தேசியர் என்றோர் அரசியல் அடையாளத்துடன் தம்மை ஒரு அரசியல் அணியாக ஆக்கிக்
கொள்வது அவசியமானதாக உள்ளது. இம் முயற்சியில் அவர்கள் பல வெற்றிகளைப்
பெற்றும் வருகிறார்கள். ஆனாலும் புலம் பெயர்ந்தோர் அனைவரும் தனியொரு
அரசியல் அணியாக அணிதிரள்வது என்றுமே சாத்தியமில்லை. அவர்களின் சமூக
பொருளாதார நிலைமை அதை அனுமதிக்காது. பல டசின் (dozen) அரசியல் குழுமங்களாக
அணிதிரளலாம். இக்குழுக்கள் சில பத்து முன்னணிகளாக மாறலாம். ஏனெனில்
அவர்களின் அரசியல் நோக்கம் மிகவும் குறுகிய பரப்பளவிலானது. “தமிழீழத்
தேசியம்” அவர்களுக்கு ஊறுகாய் போன்றது. ஊறுகாய் இல்லாமலும் அவர்களால் உணவு
உண்ணமுடியும். சுவைகள் மாறுபடும் (tastes differ). அவ்வளவே. ஊறுகாய்கள்
எவ்விதம் சுவை பல ஆயிரம் வகைப்படுமோ புலம் பெயர்ந்தோரின் அரசியல் அணிகளும்
அவ்விதமே பல வகைப்படும். அவர்களில் பெரும்பான்மையோர் தமது அவலங்களுக்கு
நிரந்தரத் தீர்வு கண்டுவிட்டார்கள். தமிழீழத்தில் நடந்த, நடக்கின்ற,
நடக்கப்போகின்ற எந்த அவலங்களும் அவர்களின் வாழ்கையின் நிச்சயத் தன்மையை
எந்த வழியிலும் பாதிக்காது சிலவேளைகளில் அவை இவர்களுக்கு உதவக் கூடும்.
இவர்கள் வாழும் நாடுகளின் இறைமைக்கு எந்த ஆபத்தும் இல்லை அது பாதுகாப்பாகவே
உள்ளது. இவர்களின் இறைமையும் பாதுகாப்பானதாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாகப்
பார்க்கும்போது தமிழ் தேசியம் வளர்ந்துதான் உள்ளது என்ற இவர்களின்
கூற்றுக்கான காரணம் இவர்கள் வளர்ந்து வருவதுதான்.
தமிழ் பேசும் மக்களின் அவலங்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதற்கான காரணமும்
இதுதான். அந்த அவலங்கள் அனைத்தும் தியாகங்களாக இவர்களின் கண்களுக்குத்
தென்படுவதற்கான காரணமும் இதுதான். புலம் பெயர்ந்தோரின் வாழ் நிலை
மட்டத்தையும் அவர்களினதும், அவர்கள் வாழும் நாடுகளினதும் இறைமையின்
மட்டத்தையும் அளவு கோல்களாகக் கொண்டு நோக்கில் தமிழ்த் தேசியம்
வளர்ந்துதான் வருகின்றது என்பதுவும் உண்மை, எந்த மறுப்பும் இல்லை. ஆனால்
தாயக நிலமையைக் கொண்டுதான் இவ் வளர்ச்சி மதிப்பிடப்படவேண்டும் அதுதான்
உண்மையான மதிப்பீடாக அமையும். இதன்படி, தமிழ் பேசும் மக்கள் தம்மால்
தனித்து நின்று எதிர்கொள்ள முடியாதளவிற்கான அவலங்களுக்கு உள்ளாக்கப்
பட்டிருக்கிறார்கள் என்பதுவே உண்மையாகும். அதேபோல் தமிழ்த் தேசியம் இதுவரை
இல்லாதளவிற்கு தனது இறைமை பறிக்கப்பட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளது தனது
இறைமையைப் பாதுகாக்கவும் மீட்கவும் தானே முன்னின்று போராடும் வலுவை இழந்து
அன்னிய நாடுகளிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலைக்கு தாழ்ந்துள்ளது
என்பதே உண்மை .
பாகம் 2-(III) சேணங்கட்டிய குதிரைகள் (தமிழ் மக்கள்)
இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இத்தவறை, அரசியல் பார்வையில் உள்ள
குறைபாடாகவே முன்னர் குறிப்பிட்டிருந்தோம். தமிழ்த் தேசியர்களின்
சாமனியர்களைப் பொறுத்தவரை இது உண்மை இது அவர்களின் இயல்பான தவறாகும். ஆனால்
தமிழ்த் தேசியத்தின் வலது சாரிப் பிரிவினரைப் பொறுத்த வரையில் இது ஒரு
திட்டமிட்ட அரசியல் சதியாகும். தமது தேர்களை (இயக்கங்களை) இழுக்கும் சேணம்
கட்டிய குதிரைகளாகவே இவர்கள் மக்களைக் கருதுகிறார்கள். தேரோட்டி காட்டும்
திசையைத் தவிர வேறு எத்திசை நோக்கியும் குதிரைகள் தமது பார்வையைத்
திருப்பக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாகும். இவர்கள் என்பது தமிழ்த்
தேசியத்தின் வலதுசாரி அணியினரையே ஆகும். தேரோட்டியையும் (தலைவர்) தாமே
நியமனம் செய்து கொள்வார்கள். இதுதான் 80-கள் வரையான நடைமுறையாக இருந்து
வந்தது. 70களில் தமிழ் இளைஞர்கள் இந் நடைமுறையை மாற்ற விரும்பினார்கள்.
புதிய அத்தியாயத்தை எழுத முன்வந்தார்கள். நடந்தவை பற்றியும் நடக்கப்போபவை
பற்றியுமான விவாதங்கள் பட்டிதொட்டி எங்கணும் நடைபெற்றன. மாக்ஸியத்தை
நோக்கியும் இளைஞர்களின் கவனம் திரும்பியது. சிந்தனைக் களத்தில் இதைத்
தமிழ்த் தேசியத்தின் பொற்காலம் எனக் கருதலாம்.
இவ் விவாதங்கள் இருவகையாக நடைபெற்றன. ஒன்று, தேரோட்டியை
மையங்கொண்டிருந்தது. தேரோட்டிகளின் தவறுதான் பிரதானமானது, தேரோட்டி
மாற்றப்பட வேண்டும், என்பதே இவ்வணியினரின் குறிக்கோளாக இருந்தது. அதாவது
வரலாற்றின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் வரலாற்றின் சரியான திசைவழிக்கும்
தவறான திசைவழிக்குமான காரணம் தனிநபர்களே என்பதே இவர்களின் கருத்தாக
இருந்தது. மேலும் சொல்வதானால் வரலாற்றின் திசைவழி, சமூக நிகழ்வுப்
போக்குகள், தனிநபர்கள் ஆகிய முத்தரப்புக்கும் இடையே உள்ள உறவில்
தனிநபர்களையே கருவாக, மைய விசையாகக் கருதினர். சமூக நிகழ்வுப் போக்கை
முற்றாகவே நிராகரித்தனர். அது சக்தி மிக்க தனிநபர்களின் எடுப்பார்
கைப்பிள்ளை எனக்கருதினர். இதனால் கோழைத்தனமும், பகட்டுத்தனமும் மிக்க
முன்னாள் தேசியத் தலைவர்களுக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட்டது. தனிநபர்
அரசியல் எதிரிகளை இல்லாதொழிப்பதற்கான அரசியல் முன்னெடுத்துச்
செல்லப்பட்டது. ஆளுமையும், துணிச்சலும், உயர்ந்த தனிநபர் பண்புகளும் கொண்ட
தலைவர்களையும் தொண்டர்களையும் உருவாக்குவதில் துரிதமாகவும் இதய
சுத்தியுடனும் செயற்பட்டனர். இதில் வியக்கத்தக்க மக்களின் பாராட்டுக்குரிய
பல வெற்றிகளும் பெற்றனர். ஆனால் குதிரையின் சேணம்
அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பது பற்றி இவ்வணியினர் சிந்திக்கவேயில்லை.
அடுத்த அணியினர், யாரோ ஒருவரின் தேரை (வரலாற்றை) இழுப்பவர்களாக மக்கள்
இருக்கக் கூடாது. மக்கள் தமக்கான தேரை (வரலாற்றை) தாமே உருவாக்கிக் கொள்ள
வேண்டும். எனக் கருதுபவர்களாக இருந்தனர். இதுவரை இருந்து வந்த முறையில்
தீவிர மாற்றத்தை உருவாக்க முயன்றனர். கோட்பாட்டு மொழியில் சொல்வதனால்
இவர்கள் சமூக நிகழ்வின் (ஒருமையின்) முக்கியத்துவத்தைப் புரிந்து
கொண்டிருந்தனர். ஆனால் இவர்களின் தவறு இவர்கள் மொத்த சமூக நிகழ்வுகளின்
(பன்மையின்) முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை. சமூகத்தின் இயங்கு
நிலை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சமூக நிகழ்வுப் போக்குகளின் கூட்டுத்
தொகுப்பினது கூட்டான இயங்கு நிலையாகும். சமூகத்தில் வினை புரிய
வேண்டுமானால் அதன் அனைத்து நிகழ்வுப் போக்குகளிலும் வினைபுரிய வேண்டும்.
அனைத்து சமூக நிகழ்வுப் போக்குகளிலும் வினை புரிதலுக்கு சம முக்கியத்துவம்
கொடுக்கவேண்டும் என்பதுவுமில்லை. இவ்வித வினை புரிதல்கள் ஒரே
விதமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் வினை புரிய வேண்டும்.
இதைத்தான் “பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்” என மாவோ கூறியுள்ளார்.
இது விடயத்தில் இரண்டாவது அணியினர் விட்ட தவறுகள் என்ன?
பகுதி 2-(IV) அனைத்தையும் கவ்விப் பிடித்திருந்த மதத்தை எவருமே கண்டுகொள்ளவில்லை.
நவகாலனியல் சமூகக் கட்டுமானத்தில் அனைத்து மக்களையும் தழுவிய மைய சமூக
நிகழ்வுப் போக்குகள் நான்காகும். அவையாவன, வர்க்கம், சாதியம், மதம், தேசியம்.
இரண்டாவது அணியினரில் மிகச் சிலர் வர்க்கம் சாதியம், தேசியம் ஆகிய
மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். பலர் சாதியத்திற்கும்
தேசியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். மிகப் பலர் தேசியத்திற்கு
மட்டும் முக்கியத்துவம் கொடுத்தனர். இடது சாரிகளாக அறியப்படும் சிலர்
வர்க்கம், சாதி இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இவர்களில்
எவருமே மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் மக்களைக் கொண்டே
மக்களின் வரலாற்றை எழுத வைக்கும் தமது உயர்ந்த இலட்சியத்தில் இவ்வணியினரில்
எவருமே வெற்றி பெறவில்லை. மதத்தின் மீது வினைபுரிதலைக் கைவிட்டதுதான்,
வெற்றி பெறாமைக்கான பிரதான காரணமாகும். இக்கூற்றை சற்று காலந்தாழ்த்தி
விளக்குவோம். தற்போது இந்த மாறுநிலைக் காலகட்ட முயற்சிகளுக்கு என்ன நடந்தது
என்பதைப் பார்ப்போம்.
தமிழ்த்தேசியம் இறைமை மிக்கதாக வளரப்போகிறது என்பதை தேசிய, சர்வதேசிய
பிற்போக்கு சக்திகள் அனைவரும் புரிந்து கொண்டனர். ஜனநாயக மறுப்புத்
தேசியர்களான தமிழர் விடுதலைக் கூட்டணி, விதேசியரான தொண்டமான், ஐரோப்பிய
அரசுகளுக்கு மாமா வேலை பார்க்கும் கிறிஸ்துவ மதபீடங்கள், நிலப்பிரபுத்துவ
மரபுகளைப் பாதுகாத்துவரும் சைவ மடங்கள், சிங்கள பேரினவாத அரசு, சிங்கள
பேரினவாத அரசியல் கட்சிகள் , ஐரோப்பிய அரசுகள் சார்புப் புலம் பெயர்ந்தோர்
அமைப்புகள், தமிழ் நாட்டின் தமிழ் வலதுசாரி தேசியர்கள், அண்மையிலும்
தூரத்திலும் இருக்கும் வல்லரசுகள் ஆகியோரையே அனைத்துப் பிற்போக்குவாதிகள்
என்ற கூறுகிறோம்.
இப்பிற்போக்குச் சக்திகள் தமிழ்த் தேசியத்தை திசை மாற்றத்
திட்டமிட்டனர். பிஞ்சுகள் காயாகிக் கனிகளாக முன்னரே அவற்றை வெம்பலாக்கும்
முயற்சிகளில் தனித்தும் கூட்டாகவும் ஈடுபட ஆரம்பித்தார்கள். சிறிலங்கா
அரசு, தன் பங்கிற்கு இன உணர்ச்சிகளைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு இன
ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. கிறிஸ்துவ மதபீடங்கள் தம் பங்கிற்கு
வன்முறைக்கு வழிகாட்டின. வல்லரசுகள் தம் பங்கிற்கு ஆயுதங்களை வழங்கினர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தம் பங்கிற்கு செயற்கையான பதட்டத்தை ஏற்படுத்தும்
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சைவ மடங்கள் தம் பங்கிற்கு போராளிகளை
அவதாரங்கள் ஆக்கின. இவ்விதம் எல்லோருமாகச் சேர்ந்து தேன்கூட்டுக்கு
புகையடித்தனர். தேனீக்கள் தவிர்க்க முடியாமல் கூட்டைவிட்டு அணி அணியாக
வெளிவந்தன. (புகையடிக்கப்பட்ட மாம்பிஞ்சுகள் தெருவோரச் சந்தைக்கு வந்தன,)
விளைவு தேனீக்கள் கூட்டம் கூட்டமாக நெருப்பில் வீழ்ந்தன. ராணித் தேனீ
தனிப்படுத்தப்பட்டாள். கூட்டழிப்பு (இன ஒழிப்பு) நடவடிக்கை சுலபமானது.
வெம்பல்கள் தெருவோரம் எறியப்பட்டன. பிற்போக்கு சக்திகள் வெற்றி பெற்றன.
முள்ளிவாய்க்கால் அழிவின் பின் தமிழ்த்தேசியம் அடுத்த மாறுநிலைக்
கட்டத்துள் (மூன்றாவது) பிரவேசித்துள்ளது. ஆனால், இன்றைய 2010-கள் அன்றைய
1970-கள் போன்றதல்ல. அன்று எதிர்கால நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
இளமைத் துடிப்பும், தேடல் அவாவும், புத்தாக்கச் செயற்பாடுகளும்
கரைபுரண்டோடின. ஆனால் இன்று இவற்றில் எதுவுமே காணப்படவில்லை. தமிழ்த்தேசியம் பற்றிய எதிர்கால நம்பிக்கையின்மையும், தன்னம்பிக்கையின்மையும்,
அனைத்தையும் இட்டுச் சந்தேகமும், தேடலில் அப்பட்டமான சோம்பேறித்தனமும்,
முதிர்ச்சியின் ஆளுமைக்குப் பதிலாக முதுமையின் சோர்வும், புத்தாக்கத்தில்
தயக்கவாதமும் மிக்கதான அழுது வடியும் நிலையையே காண்கின்றோம். இதுதான்
யதார்த்தமாகும். இந்த யதார்த்தை ஏற்றுக் கொண்டுதான், புரிந்து கொண்டுதான்
அடுத்த நடவடிக்கை பற்றிச் சிந்திக்கவேண்டும்.
அதைவிடுத்து ‘விடுதலை உணர்வு அழிந்ததாக வரலாறேயில்லை’ ‘நியாயம் ஒரு நாள்
வெல்லும்’ ‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், சூது விலகும் தர்மம்
வெல்லும்’ போன்ற வரலாற்றின் பொதுப் போக்கை அல்லது பொது நியதிகளை வரலாற்றின்
அனைத்து நிலைகளுக்கும் பயன்படுத்தி தற்திருப்திப்பட்டுக் கொள்வதில் எந்த
அர்த்தமும் இல்லை. இவ்விதமான தற்திருப்திகளும் சுய தேற்றல்களும்
வேலைக்குதவாது. தேசத்தின் இறைமை பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால்
தமிழ்த்தேசியர்கள் தமது இறைமையைப் பலிகொடுக்கக் கூடாது.
வரலாற்றின் பாதை ஒரு நேர் கோடல்ல. அது பல திருப்புமுனைகளைக் கொண்டது.
ஒவ்வொரு திருப்புமுனைக்கும் இடையேயான கால இடைவெளி மிகக் குறுகியதாகவும்
இருக்கலாம். மிக நீண்டதாகவும் இருக்கலாம். எகிறிப் பாய்தல் (புரட்சி)
எழுச்சி (பரிணாமம்) , வீழ்ச்சி , தோல்வி, பின் வாங்கல், இயல்பான தேக்கம்,
திடீர் தேக்கம், திடீர் பின்வாங்கல்(எதிர்ப்புரட்சி), இயல்பான அழிவு,
எதிர்பாரா அழிவு, அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய ஊக்குவிப்பு இவ்விதமாக பல
திருப்புமுனைகளைக் கொண்டதுதான் வரலாறாகும். சில தலைமுறைகளுக்கு நீடிக்கும்
வீழ்ச்சியும் உண்டு (எ.கா. மலையகத் தமிழ்த் தேசியம்) மிகச் சில
வருடங்களுக்குள் நடந்து முடியும் பாய்ச்சல்களும் உண்டு (எ.கா. கீயுபப்
புரட்சி) வரலாற்றின் பொதுநியதிகளை குறிப்பான கட்டத்திற்குப் பிரயோகித்து
தற்திருப்தி கொள்ளக் கூடாது. குறிப்பான கட்டத்திற்குரிய குறிப்பான
நியதிகளைப் புரிந்த கொள்ள வேண்டும்.
காதலுக்குரிய தடைகளைத் தூக்கி எறிந்து காதலர்களையும் காதலையும்
திரைஅரங்குகளிலாவது வாழ வைக்கத் திராணியற்ற கதாசிரியர்களும் இயக்குநர்களும்
காதலர்களைப் பிரித்துவிட்டு அவர்களிடையேயான காதலைக் கொன்றுவிட்டு
“காதலர்கள் வென்றதும் இல்லை, காதல் தோற்றதும் இல்லை,” எனச் சுடலைஞானம்
பேசுவது போல், “விடுதலை இயக்கங்கள் வென்றதும் இல்லை, விடுதலை தோற்றதும்
இல்லை” என்று சுடலை ஞானம் பேசிப் பலனில்லை.
இந்நிலைமை எவ்விதம் வெற்றி கொள்ளப்படும் என்பது பற்றிய சொல்லாடல்
இக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்நிலைமையில் இருந்து
விடுபடுவதற்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு என்பதுவே இக்கட்டுரையின்
சொல்லாடல் பரப்பாகும். தொடர்வோம்.
எதிர்மறை அம்சங்களே தற்போதைய
மாறுநிலைக்கட்டத்தின் தலைமைப் போக்காக இருந்தாலும் நேர்மறை அம்சங்களைக்
கொண்ட எதிரோட்டங்களும் இருக்கவே செய்கின்றன. கடந்த காலத்தைப் பற்றிய
ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது காலந்தாழ்த்தியாவது ஆரம்பித்துள்ளது. ஆனால்
70-கள் எவ்விதம் தனிநபர்களை மையங்கொண்டிருந்ததோ அதே போல் 2010-களும்
தனிநபர்களை மையங்கொண்டதாகவே உள்ளது. வளர்ந்து வந்த அன்றைய தமிழ்த்தேசியம்
தனக்கு அவசியமான மும்மூர்த்திகளைத் தேடித் திரிந்தது (மூர்த்தி என்பது ஆளுமை; மும்மூர்த்தி
என்பது மூவகை ஆளுமையாகும். படைத்தல், காத்தல், அழித்தல்/ஆதிப்பொதுவுடமை
சமூகத்தில் தலைமையை/தலைமைத்துவத்தை குறிக்கும் சொல்லே மூம்மூர்த்திகள். பார்பனிய மதமும்,
அதன் தொடர்ச்சியான இந்துவும் , சைவமும் இதை மூன்று கடவுளர்களாக்கி
விட்டார்கள்). வீழந்துள்ள இன்றைய தமிழ்த் தேசியமோ தம்மை
அழித்த அந்த ஒரு மூர்த்தி (அழிவு ஆளுமை) – (மூன்று மூர்த்திகளும் இணைந்து
செயற்பட்டால் தான் வரலாறு ஆக்கப்பூர்வமான தலைமையைப் பெறுகிறது அழிவு
மூர்த்தி மட்டும் செயற்படுமானால் வரலாறு நாகசகாரத் தன்மை பெறுகிறது) – யார்
எனக் தேடித் திரிகிறது. ஒவ்வொருவரினது உள்ளுணர்வும் இவ் அழிவில் “உனக்கும்
பங்குண்டு” என கூறி வருகிறது ஆனால் இதை எவரும் வெளிக்காட்டாமல் பிறர் மீது
பழி சுமத்தி வருகிறார்கள். குற்றவுணர்வாலும், குற்றம்சாட்டும் உணர்வாலும்
அல்லலுறுவோர் பலராகும். அடுத்தடுத்து வெளிவரும் ‘சுய நினைவு மீட்புப்
படைப்புகள்’ இதற்கோர் எடுத்துக்காட்டாக அமைகின்றன. ஒவ்வொரு படைப்புகளும்
தனிநபர்களை மையங்கொண்டதகாவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுவதாகவுமே
உள்ளது.
தாழ்வுச் சிக்கல்களும் வேண்டாம், தாழ்வுச் சிக்கலை அடித்தளமாகக் கொண்ட
சந்தேகங்களும் வேண்டாம். ஏனெனில் இத் தவறுகள் தனிநபர்களின் தவறுகளல்ல,
அல்லது இத் தவறுகளுக்கு எந்தத் தனிநபரையும் பொறுப்பாளர்களாக ஆக்க முடியாது.
இதன் பொருள் தனி நபர்கள் தவறே இழைக்காதவர்கள் என்பதல்ல. தனிப்பட்ட
வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி தவறிழைக்காதவர்கள் இருவர். ஒருவர்
இன்னும் பிறக்காதவர், மற்றவர் இனியும் வாழாதவர் (இறந்தவர்). வரலாற்றின்
சரியான திசைவழிக்கும், தவறான திசைவழிக்கும் எந்தத் தனிநபரும் காரணமல்ல.
தனிநபர்களின் பங்கு வரையறுக்கப்பட்டதும் நிபந்தனைக்கு உட்பட்டதுமாகும்.
வரலாறு சரியான திசைவழியில் செல்வது. தம்மால் தான் என்று யாரும் கர்வம்
கொள்ளவும் கூடாது, வரலாறு தன்னால்தான் கெட்டது என யாரும் தாழ்வுச் சிக்கல்
கொள்ளவும் கூடாது. இதற்காக தம்மை நோகவும் கூடாது, பிறரை நொந்துக் கொள்ளவும்
கூடாது. தனிநபர்களால் வரலாற்றைச் செதுக்கவும் முடியாது, சிதைக்கவும்
முடியாது. அது தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு
சுதந்திர நிகழ்வாகும்.
வரலாறு – சமூக நிகழ்வுப் போக்கு – தனிநபர்கள் ஆகிய மூன்று
பிரிவுகளுக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்பு பற்றிய பகுதிக்குள் மீளவும்
செல்வோம்.
சமூக நிகழ்வுப் போக்கு சுதந்திரமானது என்பது முன்னர் கூறப்பட்டது.
தனிநபர்களின் விருப்பு வெறுப்புடன் ஒப்பிடும் போதுதான் அது சுதந்திரமானதே
தவிர, மற்றும்படி அதன் செயற்பாடும் பல்வேறு நிபந்தனைகளுக்கு
உட்பட்டதேயாகும். தமக்குள் பகைமையும் சிநேகமும் கொண்ட சமூக நிகழ்வுகள்
ஒன்றையொன்று சார்ந்திருத்தல் தான் அந்த நிபந்தனையாகும். குறிப்பிட்ட ஒரு
காலத்தில் எந்த சமூக நிகழ்வுப் போக்கு வரலாற்றின் பிரதான நிகழ்வுப் போக்காக
உருவாகுகின்றது என்பதைத் தீர்மானிப்பது இந்த சார்புநிலைதான். வரலாற்றின்
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வுப் போக்கு முன்னிலை
வகிக்கும். இன்னோர் காலகட்டத்தில் இன்னோர் நிகழ்வுப் போக்கு முன்னிலை
வகிக்கும். அது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு
தேர்வாகும். அவ்விதமானால் தனிநபர்களுக்கும் சமூக நிகழ்வுப் போக்குக்கும்
இடையேயான தொடர்புகள் எவ்விதமானவை . தனிநபர்களால் நிகழ்வுப் போக்கில் தமது
விருப்பத்தைச் செலுத்த முடியாதா? சமூக நிகழ்வுப் போக்கு தனிநபர்களின்
அவசியத்தை நிராகரிக்கின்றதா? எனும் கேள்விகள் எழுகின்றன. இல்லை, ஆம் என்று
ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத இக்கட்டான கேள்விகள்.
இங்கு வரலாறு எனக்கூறப்படுவது, சமூகத்தில் நிலவும் சமூக நிகழ்வுப்
போக்குகளின் ஒட்டுமொத்த தொகுப்பையே ஆகும். இவ்விதம் எடுத்துக்கொண்டால்,
வரலாற்றை சமூதாயத்தின் மனம் அல்லது மூளை என்று கூறலாம். ஆகவே வரலாற்று
அறிவு அல்லது வரலாற்று உணர்வு, என்பது சமூக நிகழ்வுப் போக்குகளின்
தொகுப்பைப் பற்றிய அறிதலும், புரிதலுமாகும், தெற்காசிய சூழலில் வர்க்கம்
சாதியம், மதம், தேசியம் மற்றும் அதனுடைய கிளைச் சமூக நிகழ்வுப் போக்குகள்
ஆகியன பற்றிய அறிதலும் புரிதலுமாகும்.
சமூக நிகழ்வுப் போக்கு எனக் கூறப்படுவது எடுத்துக் கொள்ளப்பட்ட
அவ்வரலாற்றுக் காலகட்டத்தில் மேலோங்கி நிற்கும் அல்லது முதன்மை வகிக்கும்
சமூக நிகழ்வுப் போக்கையேயாகும்.
சமூக அரசியப்பார்வையில், தனி நபர்கள் எனப்படுபவர்கள், மக்கள் திரளின்
கூட்டுப்பார்வை நிலையில் இருந்து உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ, உயர்வான
முறையில் வேறுபட்டோ அல்லது தாழ்வான முறையில் வேறுபட்டோ நிற்பதுடன் மக்கள்
திரளுடன் எந்தப் பின்னிப் பிணைப்பும் இன்றி வாழும் மனிதர்களாகும். இங்கு
இரு நிபந்தனைகள் உண்டு. ஒன்று மக்கள் திரளிடம் இருந்து வேறுபட்டிருத்தல்,
மற்றையது மக்கள் திரளுடன் எந்தப் பின்னிப் பிணைப்பும் அற்றிருத்தல். இவ்வித
மனிதர்கள் தனித்து வினைபுரிந்தாலும், கூட்டாக வினைபுரிந்தாலும் இவர்கள்
தனிநபர்கள்தான். தனிநபர்கள் என்பதன் அர்த்தம் தனியாக நிற்கும் நபர்கள்
என்பதல்ல. தனிநபர் என்பது கூட்டுக்கு எதிரான சொல்லல்ல. அது ஒருமைச்
சொல்லல்ல.
தனி நபருக்கு எதிரான பதம் சமூக நபர் என்பதேயாகும். சமூக நபர் என்பவரும்
தனிநபர் போலவே மக்கள் திரளின் உணர்வு மட்டத்தில் இருந்து வேறுபட்டவராகவே
இருப்பார். ஆனால் தனிநபர் போலன்றி, இவர் மக்கள் திரளுடன் பின்னிப்
பிணைந்தவராக இருப்பார். இதுதான் தனி நபர்களுக்கும் சமூக நபர்களுக்கும்
இடையேயான ஒற்றுமை வேற்றுமையாகும். எடுத்துக்காட்டுகளுடன் சொல்வதானால்
60-களில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் தமிழ் பேசும் மக்களிடையே
இருந்த சமூகநபர் அரசியல் அமைப்புகளாவன மலையகத் தொழிற்சங்கங்கள், , இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சி (சீன சார்பு), சமஸ்டிக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி
ஆகிய நான்குந்தான் ஏனைய அரசியல் அமைப்புகள் அனைத்தும் தனிநபர் அமைப்புகளே
அதாவது குழுக்களே. பெரிய தேசியக் கட்சிகள் கூட வடக்கில் குழுக்களுக்குரிய
தன்மையுடனேயே செயற்பட்டன. பெரும் போராட்டங்களை நடத்திய விடுதலைப்புலிகள்
கூட ஒரு பெருங்குழுவே. சண்முகதாசனின் தலைமையில் இருந்து விலகிய அரசியல்
அமைப்புகளும் குழுக்களே.
அரசியல் கட்சிகள் அல்லாத அரசியல் சமூக நிறுவனங்களில்
மதமும், சாதியுமே இரு பெரும் சமூகநபர் அமைப்புகளாகும். மதம் ஒரு
சமூகநிறுவனமாகவும் (social institution). அதே வேளை ஒரு சமூக அமைப்பாகவும்
(social organisation) இருந்து வருகின்றது. சாதியம் ஒரு சமூக நிறுவனமாக
மாத்திரமே நிலவி வருகிறது. காலத்துக்குக் காலம் அது ஒரு சமூக அமைப்பாக
முளைவிட்டாலும் (சிறுபான்மைத் தமிழர் மகாசபை , தீண்டாமை ஒழிப்பு வெகுஜன
இயக்கம்) நிரந்தர ஆயுள் பெற்ற சமூக அமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை.
வர்க்கம் எனும் அரசியல சமூக நிறுவனம் வட மாகாணத்தில் தனது தனித்துவத்தை
வெளிக் கொணரும் அளவிற்கான எந்த பரந்த விரிந்த சமூக நிகழ்வுப் போக்கையும்
இன்று வரை தோற்றுவிக்கவில்லை. ஆகையினால் அதற்கென்றோர் சமூக அமைப்பு எதுவுமே
இது வரை வடகிழக்கில் தோன்றவில்லை. ஆனால் மலையகத் தமிழர் மத்தியில்
தொழிற்சங்கம் எனும் சமூக அமைப்பாக திடம் பெற்றுள்ளது. வடக்கில் வர்க்கம், சாதியத்தின் ஊடாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறது. தேசியம் 80-களின்
பிற்பகுதி வரை வெறுமனே சமூக அமைப்புகளைத் தான் கொண்டிருந்ததே தவிர
(சமஸ்டிக் கட்சி, தமிழர் , விடுதலைக் கூட்டணி) ஒரு சமூக நிறுவனமாக
மாறவில்லை. ஆனால் தற்போது தேசியம் ஒரு சமூக நிறுவனமாக வளர்ந்துவருகிறது.
அமைப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனி இது வளரும். இவ்விதம் நோக்கில்
தமிழ்த்தேசியத்தின் அரசியல் முன்னணிப் பிரதேசமாக விளங்கும் வடமாகாணத்தில்
செயற்பாடுள்ள சமூக நிறுவனமாக விளங்கி வருவது. மதமும், சாதியமும்
மட்டுந்தான். தேசியம் ஒரு பிந்திய வரவே. இவற்றுள் சாதியம் தற்போது
தனக்கென்று அமைப்பெதனையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மதமோ பலமிக்க சமூக
நிறுவனமாக இருப்பதுடன் பலமிக்க சமூக அமைப்பாகவும் உள்ளது. பலமிக்க சமூக
நிறுவனமாக இருப்பதால் மதம், மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் சிந்தனை
முறையையும் தீர்மானிக்க கூடிய வல்லமை பெற்றுள்ளது. பலமான அமைப்பாக
இருப்பதனால் அனைத்து அரசியல் கட்சியினுள்ளும் தனது செல்வாக்கைச் செலுத்தும்
வலுமிக்கதாக இருந்து வருகின்றது. இதனால சமூகத்தில் நடைபெறும் அரசியல்
ஒட்டப் பந்தயத்தில் மதம் எனும் ஒட்டக்காரனே முன்னிலை வகிக்கிறான்.
பௌத்தவீரன் எல்லோரினதும் கண்களுக்குத் தெரிகிறான். இஸ்லாமிய வீரனும்
அவ்விதமே ஆனால் சைவவீரனோ அனைவரினது கண்களிலும் மண்ணைத் தூவுவதன் மூலம் தான்
காணாப் பொருளாக ஆகியுள்ளான்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகூட(சீன சார்பு), மதத்தின் செல்வாக்கிற்கு
விதிவிலக்கானதல்ல. ஆலய, தேநீர் கடைப் பிரவேசம் உடல் சார்ந்த தீண்டாமையே
ஆகும். கம்யூனிஸ்டுகள் உடல் சார்ந்த தீண்டாமையையே எதிர்த்தார்கள். அதிலும்
பொதுவாழ்வில் உடல் சார்ந்த தீண்டாமை எதிர்க்கப்பட்டது. கோயிலுக்குள்
இருக்கும் கடவுளை தரிசிக்கத் தடை போடும் சாதீயத் தடிப்பை விலகி நிற்கத்தான்
போரிடப்பட்டதே தவிர கோவில்களுள் இருக்கும் கடவுளர்களுக்கு எதிரான எந்தக்
கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. இப்போராட்டம் நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை
தகர்ப்பதற்கான போராட்டத்துடன் இணைக்கப்படாததால் இது வெறுமனே ஒரு
முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தமாகவே முடிவடைந்தது.
இவ் இயக்கம் சைவ ஆலய வழிபாட்டு முறையில் ஒரு சீர்திருத்தமாகவும்
அமைந்திருந்தது. சைவம், இறையியல் கோட்பாடு என்ற முறையில் சாதிய ஏற்றத்தாழ்வு
மனித உடல்களுக்கானதல்ல ஆன்மாவுக்கானது என்றே கூறுகிறது. அதாவது தீண்டாமை
உடலுக்கானதல்ல. அது ஆன்மாவுக்கானதே என்பது சைவ கோட்பாடாகும். ஆனால்
இக்கோட்பாடு நாயன்மார் காலத்திலேயே மீறப்பட்டது. இதனால் சைவத்தின் ஒரு
பகுதியினர் இக்கோட்பாடுகளுக்கு எதிராகப் போரிட்டார்கள். திருமூலர் இதில்
பிரதானமானவர். சாதிய மறுப்புவாதியான இவர் கோவிலில் வழிபாட்டு முறைகளில்
வைதீக ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அவர் ஒரு சிவபக்தன். அத்துடன்
நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் இடையேயான தத்துவார்த்த (மெய்யியல்)
முரண்பாட்டுக்கான நடைமுறைப் பிரச்சனைகளில் சாதியமும் ஒன்றாகும். ஆழ்வார்கள்.
தீண்டாமையை எதிர்ப்பதில் தீவிர ஈடுபாடுகாட்டினார்கள். நாயன்மார்களைப் போல்
பேச்சளவில் சாதிய எதிர்ப்பும் செயலில் உடல்ரீதியாக தீண்டாமைப்
பாதுகாப்பிலும் ஈடுபட்டவர்களாக இருக்கவில்லை. ஆனால் இறையியல் என்ற முறையில்
வைணவ இறையியல் , சைவ இறையியலையும் விட வேதாந்தத்துடன் அதிக நெருக்கம்
கொண்டதாக இருந்தது. சைவத்தின் வைதீகப் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகநாவலருக்கு
எதிராக சைவத்தின் அவைதீகப் பிரிவைச் சேர்ந்த அருட்பிரகாச வள்ளலார் உள்
நுழைவை மறுத்த சிதம்பரம் சிவன் கோவிலுக்கு எதிராக ஒரு புதிய கோவிலையே
கட்டினார். அனைவரையும் சமமாக மதிக்கக் கூடிய வழிபாட்டு முறைகளை
உருவாக்கினார். அவரால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறைகளும் அதற்கான
கோட்பாடுகளும் ‘அருட்பா’ என அழைக்கப்பட்டது. அது அருட்பா அல்ல. மருட்பா
என்பதே ஆறுமுக நாவலரின் தர்க்கம் . அதற்கடுத்தாக ஈ.வே. ராமசாமிப் பெரியார்
பார்ப்பனிய மதத்திற்கு எதிரான கண்டனக் கணைகள் தொடுத்தார். இவரின் கணைகள்
கடவுளர்களையும் மத நிறுவனங்களையும் சாதிய அதிகாரபீடங்களையும் கிலி கொள்ளச்
செய்தன. அதே சமகாலத்தில் அம்பேத்காரும் இந்துக் கடவுளர்களுக்கும் இந்து
மதத்திற்கும் எதிராக பெரும் போராட்டத்தையே நடத்தினார். யாழ்ப்பாண வாலிபர்
காங்கிரஸ் 1920களில் இருந்து 1930கள் வரை கல்வியில் தீண்டாமைக்கு எதிராக
இயக்கத்தையே நடத்தியது.
“1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம்இ 30ம்இ 31ம் திகதிகளில் யாழ்ப்பாண
றிசர்வ் மண்டபத்தில் நடைபெற்ற வாலிபர் காங்கிரஸின் 1-வது மாநாடு
நிறைவேற்றிய 10 தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானமாக அமைந்தது, தமிழர்கள்
மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தீண்டாமைக்கு எதிரான குரலாகும்.
அதை ஒழிப்பதற்கு காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செயல்படுத்த
வேண்டும் என அத்தீர்மானம் வலியுறுத்தியது. இம் மாநாடு திரு. ஹண்டி
பேரின்பநாயகத்தின் தலைமையிலேயே நடைபெற்றது. இக் காங்கிரஸ் உருவாக்கத்திலும்
அதைச் செயற்படுத்துவதிலும் இவரே பிரதான பொறுப்பு வகித்தார். “ஹண்டி
பேரின்பநாயகமும் அவருடன் இணைந்த நண்பர்கள் சிலரும் வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணக் கல்லூரியில் தொழில் செய்து வந்த தாழ்த்தப்பட்டவர்களின்
வீடுகளுக்குச் சென்று தேநீர் சிற்றுண்டி அருந்தி தீண்டாமைத் திமிர்
கொண்டோரின் சவாலை முறியடித்தனர் என்றும் அறிய முடிகிறது ……”
……………“வருடா வருடம் நடைபெற்று வந்த வாலிபர் காங்கிரஸ் மாநாடுகளில்
தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களும் தீர்மானங்களும் பிரதான இடத்தைக்
கொண்டிருந்தன. இதற்குக் காரணம் வாலிபர் காங்கிரஸ் இளைஞர்கள், இந்திய தேசிய
இயக்கத்தின் தீவிர கருத்துக்களால் கவரப்பட்டிருந்தமையும் பரந்த கல்வி
அறிவைப் பெற்றிருந்தமையுமாகும். விவேகானந்தர், காந்தி, பாரதி போன்றோரது
காலனி எதிர்ப்புக் கருத்துக்களும் சமூக சீர்திருத்த சிந்தனைகளும் இவ்
இளைஞர்களை அதிகளவு ஆட்கொண்டிருந்தன.”………………..
………..“1927ம் ஆண்டு கார்த்திகையில் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம்
செய்தார். வாலிபர் காங்கிரஸ் அவரை யாழ்ப்பாணம் அழைத்திருந்தது. காந்திக்கு
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வரவேற்புக் கொடுப்பதற்கான தயாரிப்புக்
கூட்டங்களைக் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வந்தார்கள். சில இடங்களில்
நடைபெற்ற கூட்டங்களில் சாதி வெறியர்கள் தலையிட்டு காந்திக்கு வரவேற்புக்
கொடுக்கும் அதேவேளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதில் சமத்துவம் கொடுக்கக்
கூடாது என வாதிட்டனர். இவ்வளவிற்கும் மத்தியிலும் 26-11-1927-ல் யாழ்
முற்றவெளியில் காந்தி வரவேற்கப்பட்டார். வரவேற்புக் கூட்ட மேடையில்
தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும் வீற்றிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.” இந்த வரவேற்புக் கூட்டம் விபுலானந்தர் தலைமையிலேயே
நடைபெற்றது. 1925-ல் நடைபெற்ற இரண்டாவது மாணவர் காங்கிரஸும் இவரின்
தலைமையிலேயே நடைபெற்றது. (1925 – ஏப்ரல் – 26)”…….
…….“1928ல் கீரிமலை வைத்திலிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மாநாடு சமூக
ஒருமைப்பாட்டு மாநாடாக நடைபெற்றது. விபுலானந்தர் தலைமையில் நடைபெற்ற
இம்மாநாட்டில் சுயராச்சியக் கட்சித் துணைத் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி.
நாளந்தாக் கல்லூரி அதிபர் ஜி. கே. டபிள்யு. பெரேரா, தொழிற் சங்கவாதி ஏ. ஈ.
குணசிங்கா, கௌரவ ஆ. கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை ஓர்
நாடளாவிய மாநாடாகக் கொள்ள வைத்தனர்” இந்த மாநாட்டில் சமபந்தி சமபோசனம் என்ற
நடவடிக்கையை அமுல்படுத்துவதில் மண்டப உரிமையாளன் பல தடங்கல்களை
ஏற்படுத்தினான் என்பது கவனிக்கத்தக்கது……………………….”
…………….“1929ம் ஆண்டு சித்திரை மாதத்தில் காங்கேசன்துறையில் அமைக்கபட்ட
பந்தலில் 4வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து
வந்திருந்த தமிழ்த் தென்றல் கல்யாணசுந்தர முதலியார் தலைமை தாங்கினார். இம்
மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சுதந்திரமாகவும்
சமத்துவமாகவும் பங்கு கொண்டனர். வாலிபர் காங்கிரஸின் சமபந்தி, சமஆசனம் என்ற
உறுதியான நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது. இது பற்றி 13-4-1929-ல் டெயிலி
நியூஸ் பத்திரிகை எழுதுகையில் “யாழ்ப்பாணத்தில் புரட்சிகர நடவடிக்கை” என
வர்ணித்தது. இந்த மாநாட்டின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக்
குழுவில் ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்தைச் சேர்ந்தவரும், சமூக நலன் விரும்பும்
கல்வி கற்ற இளைஞனுமான திரு. யோவேல் போல் அவர்களும் தெரிவு
செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்…………….
…………….இந்த இடத்தில் யோவேல் போல் பற்றி சிறிது கூறுவது அவசியமானது.
அப்போதுதான் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் கால சமூக-அரசியற் பின்னணியை நன்கு
புரிந்து கொள்ள முடியும். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தீண்டாமைக்கு
எதிராக முனைப்புமிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது
“தீண்டத்தகாதோரை” பிரதிநிதித்துவம் செய்யும் தனியான ஸ்தாபனம் ஒன்று
யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்ற
பெயருடன் 16-7-1927-ல் இது உதித்தது. இது கிறிஸ்துவ பின்னணியிலேயே
தோற்றுவிக்கப்பட்டது. “உயர் சமூகத்தை”ச் சேர்ந்த கிறிஸ்தவரான நெவில்
செல்லத்துரை என்பவரே இதன் தலைவராக இருந்தார். மிஷனரிக் கல்லூரி இளைஞர்களாய்
இருந்த திரு. யோவேல் போல், திரு. டி. ஜேம்ஸ் ஆகிய இருவரும் இணைக்
காரியதரிசிகளாக இருந்தனர். 1927-ல் காந்தியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது
யோவேல் போல் தலைமையில் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் ஒரு வரவேற்புப்
பந்தல் அமைத்தது. இப் பந்தல் சாதி வெறியர்களால் எரிக்கப்பட்டது. யோவேல்
போல் மீண்டும் அதே இடத்தில் பந்தல் அமைத்து காந்திக்கு வரவேற்புக்
கொடுத்தார். 1928-ம் ஆண்டு இவரின் முன்னெடுப்பில் உடுவில் பெண்கள்
பாடசாலையில் சமஆசன சமபோசன இயக்கம் நடைபெற்றது. வெற்றியும் தந்தது.
பாடசாலைகளில் சமஆசனம், சமபோசனம் தொடர்பாக இவர் இருமுறை தேசாதிபதியைக்
கண்டுள்ளார். இது நடந்தது 1928, 1929-லாகும். இது தொடர்பாக இவர் டொனமூர்
ஆணைக் குழுவிடமும் சாட்சிபகன்றார். ……………………..
………….யோவேல் போலின் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் நோக்குடனும்
இவ்விதமான போராட்டத்தில் ஈடுபடுவதற்காக யோவேல் போலை கௌரவிக்கும்
நோக்குடனுமே அவரை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தனது நிர்வாகக் குழு
அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்தது போலும்.
1930-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு, சமஆசனம், ஆலய பிரவேசம்.
மிருகபலிநீக்கம் போன்ற சமூகநீதிகளை முன்கொணரும் மாநாடாக இருந்தது.
இம்மாநாடு சமூக நீதியை நிலைநாட்டிக் கொடுமைகளைக் களைய முற்படக்கூடிய பல
ஆலோசனைகளை முன் வைத்தது. (நன்றி; ‘யாழ்ப்பாண சமூக உருவாக்கமும்
விபுலானந்தரும் 1920களில்’ அ. கௌரிகாந்தன், சாளரம் வெளியீடு. முதற்பதிப்பு:
பெப்ரவரி 1992)
யாழ்-நிலவுடைமை வர்க்கத்தின் தத்துவார்த்தப் பிரதிநிதியான
ஆறுமுகநாவலரின் சிந்தனைக்கட்டுமானத்துக்கு நேரெதிரான
சிந்தனைக்கட்டுமானத்தைக் கொண்டிருந்த விபுலானந்த அடிகளார் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் பிரதானிகளில்
ஒருவராகும். மேற்கூறிய அதே நூலில் விவேகானந்தர் பற்றிக் கூறப்பட்ட சில
கருத்துக்களைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறோம்.
“சமூக சீர்திருத்தத்தைப் பொறுத்த வரையில் இவர் ஒரு புரட்சிகர சமூக
சீர்திருத்தவாதி என்று அப்படியே கூறி விடமுடியாது. அவர் வாழ்ந்த காலத்தில்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாளித்துவத் தன்மைபெற்ற பொருளாதாரம் ஒன்று
துரிதமாகத் திணிக்கப்பட்டு வந்தது. பொருளாதார பரிணாமம் (படிமலர்ச்சி) ஒன்று
நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரித்தானியர்களே இந்த மாற்றத்தைப் புகுத்தி
வந்தார்கள். வெளியில் இருந்தே இந்தத் திணிப்பு மேற் கொள்ளப்பட்டது.
விபுலானந்தரோ, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸோ, இராமகிருஷ்ண சங்கமோ இந்த
மாற்றத்தையிட்டு எதுவும் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.
அம்மாற்றத்தை ஏற்றுக்கொண்டது போலவே தென்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம்
புதியதோர் மத்தியதரவர்க்கம் துரிதமாகத் தோன்றி வளரத் தொடங்கியது. அதாவது,
சமூகத்தின் ஒரு மிகக் கணிசமான பகுதியினர் மேல் நோக்கிய சமூக
அசைவியக்கத்திற்கு உள்ளாகினார்கள். (upward social mobility) இம் மேல்
நோக்கிய சமூக அசைவியக்கத்துக்கான ஏணியாகச் செயற்படக்கூடிய புதிய பொருள்
உற்பத்தி நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் பரவlலாகத் தோன்றவில்லை. தென்
இலங்கையே இதற்கான களமாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதியைப் பொறுத்து
கல்விவாய்ப்பொன்றே இதற்கான ஏணியாக இருந்தது. இதனால்தான் 1920-களிலும்
1930-களிலும் வடக்கு கிழக்கில் தோன்றிய சமூகசீர்திருத்த இயக்கங்கள்
கல்விச் சீர்திருத்த இயக்கங்களாகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டன. கல்விச்
சீர்திருத்த இயக்கம் மறைமுகமான அரசியல் பொருளாதார இயக்கமாகவும் இருந்தது.
யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி அடக்கு முறை கல்வியின் பரவலைத் தடுக்கும்
ஒரு பலமிக்க சமூக காரணியாக இருந்ததனால் இக் கல்விச் சீர்திருத்தங்கள், சாதி
பேதத்திற்கு எதிராகவும் போர் தொடுத்தன. சம-ஆசனம் சம-போசனத்தின் சமூக
உள்ளடக்கம் இதுதான். இலசவக்கல்வி, தாய்மொழிக்கல்வி, கல்வியை அரசு
பொறுப்பெடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளின் சமூக காரணிகளும்
இவைதான். ஆகவே விபுலானந்தரின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் கல்வி
சீர்திருத்தத்தின் ஊடாகவே அமைந்திருந்தன.
…………….விபுலானந்தர் பின்பற்றிய சமூக சீர்திருத்தம் அன்றைய
காலகட்டத்திற்கு அவசியமான அனைத்து சமூக பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்று
கூறமுடியாவிட்டாலும், அவர் தமிழ் பேசும் மக்களுக்கு அவசியமான ஒரு சமூக
சீர்திருத்தத்தைப் பின்பற்றினார் என்பதுவும், அது புரட்சிகரமான கூறுகளைக்
கொண்டிருந்தது என்பதுவும் மறுக்க முடியாத உண்மைகள்.”
இந்தியத் தேசியத் தந்தையாக அழைக்கப்படும் காந்தியும் உடல் தீண்டாமை
ஒழிப்பில் வினைபுரிந்தவர் தான். தீண்டப்படாதோர் இந்து சமயத்தை விட்டு
விலகிப் போகக்கூடாது என்பதற்காக அவர்களை ஹரிஜனங்கள் என அழைத்தார். தீண்டாமை
ஒழிப்பு இயக்கங்களையும் நடத்தினார். இது சாதியம் தொடர்பாக அம்பேத்கார்
புரிந்த முதல் வினைக்கு எதிரான பதில் வினையேயாகும். ஆனால் தேசியத் தந்தை
உருவாக்க விரும்பியது இந்து ராஜ்யத்தையேயாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது அம்பேத்காரையும் பெரியாரையும் எதிர்த்து
வெளிப்படையான அரசியல் போராட்டங்கள் நடத்தாவிட்டாலும் இவ்விருவருடனுமான ஒரு
பனிப்போரை இன்றுவரை நடத்திக் கொண்டே இருக்கிறது .இந்தியத் தேசிய
உருவாக்கத்திலான முதல்வினையாற்றலில் இவர்களின் பங்கு குறை கூற முடியாதது
என்று கூறுவதற்கில்லை ஆனால் குறைத்து மதிப்பிட முடியாதது. இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி இவர்களின் முதல்வினையாற்றலில் பகைமைக் கண்ணோட்டத்தை
வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பதில்வினையாற்றலில்
இவர்கள் எதிர்மறைச் செயல்பாடுள்ளவர்கள் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின்
கருத்தாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்நிலைப்பாடு பற்றி
எதுவும் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம்
யாழ்ப்பாணப் பாடசாலையிலும், பஸ் வண்டிகளிலும் தீண்டப்படாத மாணவர்கள் மீது
பிரயோகிக்கப்பட்ட உடல் தீண்டாமையை சட்டரீதியாக இல்லாமல் செய்தது. அதே
நேரத்தில் இதே சுதந்திரக் கட்சி கொவிகம சாதியினர் தவிர்ந்த வேறு எவரும்
இலங்கையின் பிரதமர்களாக வரக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தது
என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
சைவ ஆலயப் பிரவேசம் என்பது சமத்துவம், சகோதரத்துவம் எனும்
முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையின் ஒரு பகுதியேயாகும். ஆகவே நவகாலனியல்
சமூக அமைப்பில் செயற்பட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் இதயபூர்வமாக தீண்டாமை
ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியது அவசியமே ஆனால் சமதர்ம சமூக அமைப்பை
தமது குறிக்கோளாகக் கொண்டவர்களின் கடமை நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை
பலவீனப்படுத்தி தகர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர சீர்திருத்தி
பலப்படுத்துவதாக இருக்கக்கூடாது
இப்போராட்டங்களுடன் ஒப்பிடும் போது மனித உடல்களுக்கு எதிரான பொதுஇட
தீண்டாமையை எதிர்த்து 1960-களின் பிற்பகுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ட
கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் தன்மையை
(ஆலயப் பிரவேசமும், தேனீர் கடை பிரவேசமும்) சாதிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டமாக
இருந்ததா? அதாவது நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை பலவீனப்படுத்தி
தகர்ப்பதாக இருந்ததா? அல்லது நிலப்பிரபுத்துவக் கட்டுமானத்தை
சீர்திருத்திப் பாதுகாப்பதாக இருந்ததா?
சைவம், மேல்சாதி கீழ்சாதி என மக்களைப் பிரித்துவைக்கும் சித்தாந்தமாக
மட்டும் இருக்கவில்லை, சைவர்கள் அசைவர்கள் எனவும் மக்களை இரு கூறுகளாகப்
பிரித்தது. தாவர உணவு உயர்வானதாகவும் புலால் இழிவானதாகவும் ஆக்கப்பட்டது,
உயர்வான உணவு சைவ உணவானது தாழ்வான புலால் அசைவமானது. தாவர உணவு
முதல்நிலைப்படுத்தப்பட்டு அது சைவமானது. புலால் உணவு அதற்கு எதிரானதாக
ஆக்கப்பட்டு அசைவமானது. உணவை இவ்விதம் எதிர் எதிர் அணிகளாகப்
பிரிக்கவேண்டியது அவசியமற்றது ஆனால் சைவம் சாதிய வேறுபாட்டின் அடிப்படையில்
பிரித்தது.
இரு (உயர்ந்த, தாழ்ந்த) கூறுகளாகப் பிரிக்கப்பட்டது மக்கள் மட்டுமல்ல
கடவுளர்களும் இரு கூறுகளாக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின்
கடவுளர்கள் வர்க்க ஒடுக்குமுறையின் கடவுளர்களல்ல. அவர்கள் மக்களால்
உருவாக்கப்பட்ட மூர்த்திகளினதும் மக்களின் மூர்த்திகளினதும் குறியீடுகளே.
அவர்கள் மக்களில் ஒருவராகவே இருந்தனர். காதல்/காமம் புரிந்தனர். கள்ளுண்டனர்.
புலால் உண்டனர். மக்களுடன் ஒன்றுகூடிக் கூத்தாடினர். இக் கடவுளர்கள் நின்று
கொல்லும் தெய்வங்களல்ல, அன்று கொல்லும் அரசர்களாகவே கருதப்பட்டனர். குற்றம்
புரிந்தவர்களை இறந்தபின்னர் நரகத்துக்கு வா எனக் கூறி அங்குவைத்துத்
தண்டனை கொடுக்கும் தெய்வங்களல்ல, நல்லது செய்தோரை மோட்சத்துக்கு அனுப்பும்
தெய்வங்களுமல்ல. இத் தெய்வங்கள் குற்றம் செய்தோரை அப்பப்போ தண்டிக்கும்
என்றே மக்கள் நம்பினர். தெய்வங்கள் தண்டிக்காவிட்டாலும் தெய்வத்தின்
பெயரால் தாம் தண்டிப்போம் என மக்கள் நம்பினர். தண்டிக்கவும் செய்தார்கள்.
தண்டித்தும் வருகிறார்கள்; அதேபோல் நல்லது செய்தோர் மோட்சம் போவதாக இம்
மக்கள் நம்பவில்லை. நல்லது செய்தோரை நடுகல்லாக்கி தம்முடனேயே தங்கவைத்துக்
கொள்கின்றனர். அவர்களும் தெய்வங்களாகி விடுகிறார்கள். இவற்றில் சில
தெய்வங்கள் சில குடும்பங்களுக்கு மாத்திரமே உரியவர்களாக உள்ளார்கள்.
அநீதிக்கு எதிரான போராளிகள் தெய்வமாக்கப்படுதலே பொதுவான வழமையாக உள்ளது.
இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்கள் மென்மையும் பால்வடியும் முகமும்
கொண்டவர்களல்ல. ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமல்ல இறுக்கமான
முகபாவமும் கூர்ந்து நோக்கும் கோபக் கண்களும் உள்ளவர்களாகவோ, இல்லையேல்
எந்த உருவமும் இல்லாத கல்லாக உள்ளனர்.
வேதாந்தமும் சைவமும் எவ்வளவு முயன்றும் இத் தெய்வங்களை ஒடுக்கப்படும்
மக்களிடையே இருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் இம் மக்களை
முற்றாக தம்முடன் இனைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. தமது தோல்வியை தமது
வெற்றியாக மாற்றிக் கொண்டார்கள். சைவம், அசைவம் என்ற பிரிவை உண்டாக்குவதன்
மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளர்களையும் தீண்டத்தகாதவர்களாக்கி
விட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளர்கள் அசைவக் கடவுளர்கள்
ஆனார்கள். சைவக் கோவில்கள் அனைத்தும் ஆகம முறைக் கோவில்களேயாகும். இக்
கோவில்களில் சிவனும், சிவனுடைய குடும்பத்தினரும் மாத்திரந்தான்
நடுநாயகர்களாகும். இவர்கள் மட்டும்தான் உள்வட்டத்துள் இடம் பெறுவர். ஏனைய
தெய்வங்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் தெய்வங்கள் விளிம்பு நிலையில்
அல்லது `கண்ணூறு`, `நாவூறு` படுவதைத் தடுக்கும் நிலையில்
வைக்கப்பட்டிருப்பார்கள்.
இவ்விதம் நடந்தும், மக்கள் பணியவில்லை. தமது கடவுள்கள் மேல் உள்ள
நம்பிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை. சைவக் கடவுளர்களுக்கு போட்டியாக தமது
கடவுளர்களை வளர்த்து வந்தார்கள். தமக்கென்று சொந்தக்கோவில்கள், சொந்த
அனுட்டானங்கள், தமக்கென்று சில சடங்குகள் ஆகியவற்றை நடத்தி வருகிறார்கள்.
சாதியம் சைவத்துடன் போராடி தனக்கென்றோர் புதிய மதத்தை உருவாக்கியுள்ளது.
இது நிலப்பிரபுத்துவ சிந்தனைக் கட்டுமானமான சைவத்திற்கு எதிராக சாதியம்
நடத்திவரும் முதல் வினையாகும்.
சைவ ஆலயப்பிரவேசங்கள் சைவத் தூய்மையை உடைப்பதற்குத் துணை புரிந்துள்ளதா
அல்லது அசைவ அணியினரில் சிலர் சைவ வர்க்கக் கட்டுமானத்துள் பிரவேசிக்கத்
துணைபுரிந்துள்ளதா என்பது ஆராயப்படவேண்டும். ஆனால் அசைவர்களின் கோவில்கள்
மிகத்துரிதமாக சைவ ஆகமகத் கோவில்களாக மாறிவருகின்றன என்பது மட்டும் உண்மை.
குடமுழுக்கு செய்தல் , கலசம் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் மூலம் அசைவம்,
சைவமயமாகி வருகிறது. வன்னிப்பகுதியில் இம்மாற்றம் மிகத் தெளிவாகவே
தெரிகிறது. முன் கதவால் ஆயுதத்தின் உதவியுடன் நுழையும் பௌத்தத்தை நோக்கி
மக்களின் கவனத்தைத் திருப்பி அதற்கெதிராக பதில்வினையாற்றக்கோரும்
யாழ்-சைவ-வெள்ளாளத் தேசியம், சத்தம் சந்தடியின்றி அசைவத்தை
சைவமயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சைவ-வேளாள மேலாண்மையை
வடமாகாணம் முழுமையும் பலப்படுத்துவதே அதன் நோக்கமாகும். இது தேசிய
உருவாக்கத்தை வளர்ப்பதற்கான ஒரு முதல்வினையல்ல. தேசிய உருவாக்கத்தை
சிதைப்பதற்கானதொரு முதல்வினையாகும்.
தொகுப்பாகக் கூறுவோமானால் வர்க்கப்போராட்டமும், மதசார்பின்மையை
ஆதரித்தும் மத ஆதிக்கத்தை எதிர்த்துமான எந்தப் போராட்டமும் (சமூக நிகழ்வுப்
போக்கு) வடகிழக்கு மாகாகணங்களில் தனித்துவ நிகழ்வாக நடைபெறவில்லை.
சாதியம், தேசியம் ஆகிய இரு சமூக நிகழ்வுப் போக்குகளின் ஊடாகவே பிற அனைத்து
சமூக நிகழ்வுப் போக்குகளும் தம்மை வெளிப்படுத்தியும் தமது தேவைகளைப்
பூர்த்தி செய்தும் வருகின்றன. இவை இரண்டினும் செயற்பாடுகளுக்கு அடித்தளமாக
இருந்து வருவது மதமேயாகும்.
பகுதி 2-(V) தேசிய உருவாக்கத்தில் முதல்வினையும் பதில் வினையும் முடிவாக வளரும்.
நன்றி: எதுவரை on August 11, 2012
No comments:
Post a Comment