Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Tuesday, 6 August 2013

மகிந்தவின் வெற்றி நமக்கு நல்லதா? என்ன நினைக்கிறீர்கள்? : ஆசிரியர் லோகன்

இந்தக் கேள்வியானது தன் மட்டில் தானே தனக்கான பதிலாகவும் உள்ளது.. 2008 ஆம் ஆண்டில் இருந்து இவ்விதமான பல கேள்விகள் இலங்கை மக்களிடையே கேட்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் மிகச் சிலவே, இன்று வரை நிலவி வருகின்ற அரசியலில் அடிப்படை மாற்றங்களுக்கான தேடலில் இருந்து எழும் கேள்விகளாக உள்ளன அல்லது அவ்விதம் கேட்பவர்கள் மிகச் சிலராகவே உள்ளனர். அதே நேரம், நிலவும் அரசியலில் சிற்சில மாற்றங்கள் செய்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஒட்டுகள் போட்டு, இதை இவ்விதமே தொடர முடியாதா என்ற ஆதங்கத்தில் இருந்து கேட்பவர்கள் தொகையோ மிக மிக அதிகமாகும். முன்னைய மிகச் சிலர் தமது சிந்தனைக்கு இரை தேடுகின்றார்கள். அவர்கள் தமது கேள்விகளுக்குத் தயார் நிலை விடையைத் தேடவில்லை மாறாக விடையைக் கண்டுபிடிப்பதற்கான அணுகுமுறையையும் அதற்கு அவசியமான தகவல்களையும் தேடுகிறார்கள்.
பின்னையவர்களோ தயார் நிலை விடையைத் தேடுகிறார்கள். தமது மனதில் பதிந்துள்ள எண்ணத்தை ஏற்றுக்கொண்ட(ஒத்துபோகும்) மனிதர்களைத் தேடுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் `குண்டாஞ்சட்டிக்குள் குதிரையோட்டவோ`, `சுற்றியும் சுற்றியும் சுப்பற்ற கொல்லைக்குள் நிற்கவோ` முற்படுகிறார்கள்.

இக்கேள்வி, என்னிடமும் கேட்கப்பட்டது.

இக் கேள்வியே தப்பு. இலங்கையில் நடந்த பாரளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியாவது வெற்றிபெற்றதா? வாக்களிக்க மறுத்தவர்கள்தானே வெற்றிபெற்றார்கள். தேர்தல்கள் ஒரு வெற்றுச் சடங்காக மாறிவிட்ட நிலையில் தேர்தல்களில் இப்போது யாரும் வெல்வதி்லை, வெல்ல வைக்கப்பட்டு ஆட்சியைப் பிடித்து விடுகிறார்கள். ஆகவே மகிந்த ஆட்சியைப் பிடித்தது சரியா என்பதே கேள்வியாக இருக்கமுடியும். ஆகவே நான் இக்கேள்வியை அந்தக் கோணத்தில் இருந்தே ஆராய முற்படுகிறேன். இதற்கான பதில் சொல்ல வரவில்லை. பதிலைக் கண்டுபிடிக்க எனக்குத் துணையாக இருக்கும் அணுகுமுறையையும் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

சரியான விடையை நோக்கி நகர்வோம்.

‘நமக்கு’ என்பது யாரைக் குறிக்கிறது? இலங்கையில் உள்ள தேசிய இனங்கள் ஒவ்வொன்றையுமா? அல்லது எல்லோரையும் உள்ளடக்கிய இலங்கையரையா? இது முழு இலங்கைக்கும் பொதுவான பிரச்சனை என்பதால் ‘நமக்கு’ என்பதன் மூலம் நான் இலங்கையரையே குறிப்பிடுகிறேன். எந்த இலங்கையர்? தேசிய இன நீக்கம் செய்யப்பட்ட இலங்கையரையா? இல்லை, தேசிய இனங்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டு இத்தனித்துவங்களுக்கிடையில் ஒரு நேர்மையான சமநிலை பிறழா உறவைப் பேணுபவர்களை மாத்திரமே இலங்கையர் எனக் குறிக்கிறேன். இலங்கையருக்குப் பொதுவான பிரச்சனைகள் அனைத்தும் தமிழர்களுக்கும் பொதுவான பிரச்சனைதான். அதே நேரம் தமிழர்களுக்கான தனியான பிரச்சனைகளும் உண்டு, மறுக்கவில்லை, இருந்தும், இக்கட்டுரை பொதுவான பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

2000 ஆம் ஆண்டில் இருந்து உலகம் இரு முகாம்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு உண்மையாகும். மஹிந்தவின் வெற்றி, மேற்குலகின் தோல்வி என்பதுவும், சரத், றணில் ஆகியோரினது தோல்வி, ஆசிய உலகின் வெற்றி என்பதுவும், புரிந்து கொள்ளப்பட்டதேயாகும். இருந்தும் நாம் மேலும் புரிந்து கொள்ள வேண்டியது, உலகளாவிய இந்த முரண்பாட்டின் அரசியல் தன்மை என்ன என்பதேயாகும். வெவ்வேறு காலகட்டங்களில் நிலவி வந்துள்ள உலகளாவிய முரண்பாடுகளின் அரசியல் தன்மைகளை நோக்குவோம்.

முதலாம் உலக யுத்த முரண்பாடு:

காலனியல் ஆதிக்கத்திற்காக மூலதன ஆதிக்க நாடுகளிடையே நிலவிய முரண்பாடாகும். இதில் எந்த முற்போக்கு அம்சமும் இருக்கவில்லை. இரண்டுமே பிற்போக்கு முகாம்கள் தான்.

இரண்டாம் உலக யுத்த முரண்பாடு:

 உலக முழுமையையும் முற்று முழு எதேச்சாதிகாரத்தின் (பாசிசத்தின்) ஆளுகையின் கீழ் கொணர்வதற்காக என அமைக்கப்பட்ட ‘பாசிச முன்னனி’ ஒரு புறம். பாசிசத்தை எதிர்த்த நேச நாடுகள் முன்னணி மற்றோர் புறம். பல காலனியல் நாடுகளை உள்ளடக்கிய இந்த நேச நாடுகள் முன்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா சோவியத் சோஷலிசக் குடியரசு ஆகிய நாடுகள் பிராதான பாத்திரம் வகித்தன.

முன்னையது பிற்போக்கு முன்னணியாகவும், பின்னையது மூலதன ஆதிக்க நாடுகள், சோஷலிச நாடுகள், காலனி நாடுகள் ஆகியனவற்றின் முற்போக்கு முன்னணியாகவும் இருந்தது. இந்த உலகளாவிய முரண்பாடு உலக வளர்ச்சிக்கு உதவிய ஒரு முற்போக்கு அரசியல் இயக்கமாகும். உலகின் அனைத்து வகை அரசியல் இயக்கங்களும் இரு கூறுகளாகப் பிரிந்தன.

விடுதலை இயக்கங்கள் அனைத்துமே நேச நாடுகள் முன்னணியுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டன. சில விதிவிலக்குகளும் இருக்கவே செய்தன. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் இதில் ஒன்று. அதே போல் இந்த நேச நாடுகள் முன்னணி பல தவறுகளையும் செய்துள்ளது. இஸ்ரவேல் அதில் ஒன்று. இருந்தும் இது ஒரு முற்போக்கு முன்னணிதான்.

முதலீட்டிய முகாமும், சோசலிஸ முகாமும்:

50 களிலும் 60 களிலும் உலகம் முதலீட்டிய முகாம், சோசலிஸ முகாம் என இரு கூறுகளாகப் பிரிந்திருந்தன. முதலீட்டிய முகாம் அமெரிக்கத் தலைமையிலும் சோசலிச முகாம் சோவியத் குடியரசின் தலைமையிலும் செயல்பட்டன.

சோஷலிச முகாமின் துணை அமைப்புகளில் நடுநிலை நாடுகள் அணி பிரதான பாத்திரம் வகித்தது. முதலீட்டிய அணி என்ற உலகாளவிய இராணுவ அமைப்புகளையும் , சோஷலிச அணி, என்ற இராணுவக் கட்டமைப்பையும் கொண்டிருந்தன. அதே போல் முதலீட்டிய அணி தனக்கென சக்தி மிக்க உலகளாவிய பொருளாதாரக் கட்டுமானங்களையும் கொண்டிருந்தது. ஆனால் சோசலிச அணி இவ்விதமான பொருளாதாரக் கட்டுமானங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இது தான் அதனுடைய மிகப்பெரும் பலவீனமாகும். இம்முரண்பாடு மிகவும் முற்போக்கான முரண்பாடாகும். உலகின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவி புரிந்தது. பிரென்சியப் புரட்சியின் பின்பான உலக வரலாற்றில் இது ஒரு பொற்காலமாகும்.

முதலாம் உலகம், இரண்டாம் உலகம், மூன்றாம் உலகம் :

70 களும் 80 களும் உலகம், முதலாம் உலகம், இரண்டாம் உலகம், மூன்றாம் உலகம் என மூன்று முகாம்களாக பிரிந்திருந்த காலகட்டமாகும். சோசலிஸ உலகின் தலைமை நாடாகவிருந்த சோவியத்பூனியன் அதன் எதிர்மறைக்குச் சென்றது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சமூக ஏகாதிபத்தியமாகவும், ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் ஊடாகச் செலுத்தப்பட்ட அதிகாரத்துவ எதேச்சாதிகாரமாகவும் மாறியது. முற்றுமுழு அதிகாரத்துவத்தின் முதலாவது வடிவம் பாசிசம் என்றால் அதன் இரண்டாவது வடிவம் தான் சமூக பேரகங்காரமாகும். சமூக பேரகங்காரத்தின் வளர்ச்சியினால் சோவியத் யூனியனானது சமூக ஏகாதிபத்தியமாக உருவானது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் உலகின் இரு பெரும் ஏகாதிபத்திய வல்லரசுகளாக மாறின. இவை இரண்டுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடைபெற்று வந்தது. இவ்விரு நாடுகளும் முதலாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்டன. பிற முதலாளித்துவ நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலகம் எனவும், இவை தவிர்ந்த பிற குறைவிருத்தி நாடுகள் அனைத்தும் மூன்றாம் உலக நாடுகள் எனவும் என அழைக்கப்பட்டன. பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் இருந்தாலும், மக்கள் சீனமே இம் மூன்றாம் உலக நாடுகளின் முன்னணியாகத் திகழ்ந்தது. அமெரிக்கா எதிர் சோவியத் யூனியன் ஒரு முற்போக்கு முரண்பாடல்ல.

இரு வல்லரசுகள் உலக ஆதிக்கத்திற்காக தமக்குள் போராடிக் கொண்டன. மூன்றாம் உலக நாடுகளும் மக்களும் இந்த முரண்பாட்டில் யார் பக்கமும் நிற்கவில்லை. அவ்விதம் நின்றால் அது முன்வாசலால் ஒநாயை விரட்டி பின்வாசலால் துருவக் கரடியை உட்புக விடுவதாகவோ அல்லது அதன் தலைகீழாகவோ தான் அமையும் என மக்கள் சீனம் எச்சரித்தது. இந்த எச்சரிக்கையையும் மீறி சில நாடுகள் ஒநாயை விரட்டி கரடியிடமும் கரடியை விரட்டி ஒநாயிடமும் அகப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆப்கானிஸ்தான் ஓர் உதாரணம்.

ஆனால் மூன்றாம் உலகிற்கும், முதலாம் உலகிற்கும் இடையேயான முரண்பாடோ முற்போக்கானது. இரண்டு ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் இடையேயான மோதல் ஒரு உலக யுத்தமாக மாறாமல் தடுத்து நிறுத்தியது இந்த மூன்றாம் உலக முன்னணி தான். மூன்றாம் உலகம் ஒன்றிணைந்து முதலாம் உலகத்தை எதிர்த்திராவிட்டால் இரண்டாம் உலகிற்கும், மூன்றாம் உலகிற்கும் இடையேயான முரண்பாடுகள் தணிக்கப்பட்டிருக்காவிட்டால, உலகின் சில பகுதிகளில் அணுகுண்டுகள் விழுந்திருக்கக்கூடும். உலகளாவிய இந்த முரண்பாட்டை வழிநடத்திச் சென்ற மக்கள் சீனத்துக்கு இதற்காக உலகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டது. அதே போல் இந்தப் பனிப்போரைப் பயன்படுத்தி மூன்றாம் உலக நாடுகள் தம்மை வளர்த்துக் கொள்வதை சாத்தியப்படுத்தியதும் இந்த மூன்றாம் உலக முன்னணி தான்.

அமெரிக்காவின் தனி ஆதிக்கம்:

1990 களில் உலகம் அமெரிக்காவின் தனி ஆதிக்கத்தில் இருந்தது. அமெரிக்க எதிர்ப்பு முகாமுக்கு உலகளாவிய தலைமை எதுவும் இருக்கவில்லை. சோவியத் யூனியன் உடைந்ததனால் அமெரிக்கா அதீத பலம் பெற்றிருந்தது. மூலதன ஆதிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் தலைமையில் மீண்டும் ஒன்றிணைந்து கொண்டன. இதனால் அமெரிக்கா தனிக்காட்டு ராஜாவானது. உலக வரலாற்றில் 50-களும் 60-களும் ஓர் எழுச்சியானால்இ 90 கள் ஓர் வீழ்ச்சியாகும். அது பொற்காலமானால் இது ஓர் இருண்ட காலமாகும்.

2000 ஆண்டுகள் (இன்றைய நிலை)

ஆனால் இந்த இருண்டகாலம் நீடிக்கவில்லை. பல ஜனநாயகப் புரட்சிகளையும, தேசிய விடுதலைப் போராட்டங்களையும் சமூகப் புரட்சிகளையும் நடத்திய இன்றைய உலக மக்கள் பாரிஸ் கம்யூன் காலத்து தொட்டில் குழந்தைகளல்ல. 10 வருடத்துள் அவர்கள் மீண்டும் எழத் தொடங்கிவிட்டார்கள். உலக மக்களின் இருண்ட காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுதந்திர சந்தை முதலீட்டியப் பொருளாதார மந்த நிலையானது மக்களின் எழுச்சியை துரிதப்படுத்தியது. இவற்றின் விளைவால் உலக முதலீட்டியம, மீண்டும் இரு கூறுகளாகப் பிரியத் தொடங்கிவிட்டது. பூகோளரீதியாகச் சொல்வதனால் , ஒன்று மேற்கு முகாம் மற்றையது ஆசிய முகாம். ஆசிய முகாம் என்பது ஆசிய நாடுகளின் முகாமல்ல. உலகின் ஐந்து கண்ட நாடுகளும் இதில் உள்ளன.

ஆனால் அனைத்து வழியிலும் மேற்கு முகாமிற்கு எதிரான உலகளாவிய முன்னணியில் சீனாவின் பங்களிப்பே பிராதனமானதாக உள்ளது. டொலர் மைய உலக நிதிப் பரிமாற்றத்திற்கு எதிராக எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லாத உலகளாவிய பொது நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் சீனா மிக விரைவில் வெற்றிபெறும். அதே போல் USA விற்கு போட்டியான ஒரு உலகளாவிய கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் சீனா முயன்று வருகிறது. யாருமே முன் வைத்திராத தேசிய நாணயத்தின் சுயாதிபத்தியம் என்றோர் கோரிக்கையை சீனா உலகரங்கில் முன்வைத்துள்ளது. இது எந்தத் தேசிய நாணயத்துடனும் தொடர்பில்லாத ஒரு சர்வதேச பொது நாணயத்தை உருவாக்குவதிலான முதல் நடவடிக்கையாகும். இது டாலரின் ஆதிக்கத்திற்கு கிடைக்க இருக்கும் நெற்றிப் பொட்டு அடியாகும். மொத்த உலக உற்பத்தி என்று பார்த்தாலும் BRIC நாடுகள் மேற்குலகை மேவும் நாள் தொலை தூரத்தில் இல்லை. இந்தக் காரணங்களால் தான் இதை ஆசிய முதலீட்டியம் என அழைக்கிறேன்.

முதலீட்டிய உலகம் இரண்டாகப் பிரிந்துவிட்டது என்பது கண்கூடு. இப்பிளவு வளர்ந்தும் வருகிறது. இவ்விரு முகாம்களையும் எவ்விதம் புரிந்து கொள்வது? மேற்குலகை சோசலிசத்திற்கு முன்னைய முதலீட்டியம் என்றும் ஆசிய முதலீட்டியத்தை சோசலிஸத்தின் உலகளாவிய வீழ்ச்சிக்குப்; பின்னைய முதலீட்டியம் என்றும் அழைக்கலாமா? சோசலிஸம் ஏன் வீழ்ந்தது? உள்நாட்டில் ஜனநாயக மத்தியத்துவம் இருந்த இடத்தில சமூக பேரகங்காரவாதம் ஆட்சிக்கு வந்ததுதான் காரணம்.

சமூக பேரகங்காரவாதத்தின் வெளிநாட்டுக் கொள்கை தான் சமூக ஏகாதிபத்தியமாகும். ஆகவே இந்த ஆசிய முதலீட்டிய முகாமை சமூக ஏகாதிபத்திய மூகாம் என அழைப்பதே பொருத்தமானது. இந்த முகாமில் எல்லாவகை பேரகங்காரவாதிகளும் உள்ளார்கள். சாதியப் பேரகங்காரவாதிகள், மதப் பேரகங்காரவாதிகள், இனப் பேரகங்காரவாதிகள் சமூகப் பேரகங்காரவாதிகள் எனச் சகலரும் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் இது அனைத்து வகை பேரகங்கார அரசுகளின் கூட்டணியாகும். இக்கூட்டில் உள்ள அரசுகள் அனைத்துமே சமூக ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவை அனைத்துமே தத்தம் சொந்த நாடுகளின் தேசிய ஜனநாயகப் போராட்டங்களுக்கும் எதிரானவர்கள்.

ஆகவே நம் முன்னால் ஆர்ப்பாட்டம் இட்டுத் திரியும் இரு உலகங்களும் உண்மையிலேயே இரு வெவ்வெறு உலகங்களல்ல. முதலாம் உலகம்,  அதாவது ஏகாதிபத்திய உலகம் இரு கூறுகளாகப் பிரிவுபட்டு தமக்குள் பனிப்போர் நடத்திக் கொண்டுள்ளன. ஒன்று நிதி மூலதன ஏகாதிபத்தியம் (மேற்குலக முதலீட்டியம்=மே.மு) மற்றையது சமூக ஏகாதிபத்தியம் (ஆசிய முதலீட்டியம்=ஆ.மு) இந்த இரு முகாம்களின் குணவியல்புகளைத் தொகுப்போம்.

முதலீட்டியத் தன்மையில்

மே.மு.:- சுதந்திர வர்த்தக முதலீட்டிய முகாம் (லிபரல்)

ஆ.மு. :- அரசு கட்டுப்பாட்டு முதலீட்டிய முகாம்

பொருளாதாரக் கட்டமைப்பில்

மே.மு.:- G 7, IMF, WB, ADB, USAID இத்தியாதி.

ஆ.மு. :- BRIC, உருவாகிவரும் நிலையில் உள்ள பிற அமைப்புகள்.

சிவில் முறைமையில்

மே.மு.:- நவ- லிபரல் முகாம்

ஆ.மு.:-சமூக-பேரகங்காரவாதிகளினதும், அரச அதிகாரத்துவ வாதிகளினதும், அரசியல் கட்சிகளினதும், எதேச்சாதிகாரத்தையே தமது சிவில் ஒழுங்குகளாகக் கொண்டவை.

நிதி மூலதனக் கையாளலில்

மே.மு.:- டாலர் ஆதிக்க முகாம். டாலருக்கு ஒரே நேரத்தில் தேசியப் பரிமாணம், அனைத்துலகப் பரிமாணம் ஆகிய இரண்டும் உண்டெனச் செயல்படும் முகாம். அதே வேளை பிற நாணயங்களிள் தேசிய பரிமாணத்தைக் கணக்கில் கொள்ளாத முகாம். நாணயச் சந்தையில் சுதந்திர வர்த்தகக் கோட்பாட்டை தீவிரமாக எதிர்க்கும் முகாம்

ஆ.மு. :- நீதி மூலதனத்தை எதிர்க்கும் முகாமல்ல, மாறாக தமது சொந்த வளர்ச்சிக்காக நிதி மூலதனத்தை மேலும் மேலும் சார்ந்திருப்பதுடன், பிற நாடுகளைச் சுரண்டுவதற்கும் நிதி மூலதனத்தை பயன்படுத்தவும் செய்கிறது. ஆனால், அதே நேரம் நாணயச் சந்தையில் அமெரிக்க டாலரின் ஏகபோகத்தை எதிர்க்கவும் செய்கிறது..

இராணுவ நடவடிக்கைகளில்

மே.மு; அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் உள்ளடக்கிய வட-அத்லாந்திக் ஒப்பந்த அமைப்பு( North Atlantic Treaty Organization NATO) எனும் பலமிக்க ஒரு இராணுவ அமைப்பைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழும் இவ் இராணுவக்கூட்டு தற்போது ஆசியாவினுள்ளும் நுழைய ஆரம்பித்துள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தானை நுழைவாயிலாக அமைத்துள்ளது. இதைவிட சில இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராணுவக்கூட்டு, ஜப்பானுடன் இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம், டியக்கோகாசியா, பிலிப்பைன், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் எனப் பெரும் உலகளாவிய படைப்பலத்துடன் உள்ளது..

ஆ.மு: உலகளாவிய இராணுவக் கூட்டமைப்பு ஆரம்ப நிலையிலேயே உள்ளது. எந்த அன்னிய நாட்டிலும் படைத்தளங்கள் இல்லை. எந்த அன்னிய நாட்டுக்கு எதிராகப் படையெடுக்கவும் இல்லை. ஆனால் இம்முகாமில் உள்ள நாடுகளில் அநேகமானவையும் இம் முகாமின் நட்பு நாடுகளும் தத்தமது சொந்த நாட்டுக்குள்ளேயே ஒரு தேசிய ஜனநாயக ஒடுக்குமுறை யுத்தத்தை நடத்திக் கொண்டுள்ளன. இவற்றில் சிற்சில நாடுகளில் வர்க்க ஒடுக்குமுறை யுத்தமும் நடக்கின்றன. இந்தியா இவ்விரு யுத்தங்களின் களமாக வளர்ந்து வருவதைக் காணலாம். மேற்கு நாடுகள் தமது நட்பு நாடுகளில் இவ்வித யுத்தங்களை ஊக்குவிக்கின்றன அந் நாடுகளை இராணுவமயப்படுத்தி வருகின்றன.

உலகளாவிய இராணுவச் சமநிலையில்

மே.மு:- அனைத்து வழியிலும் இதுவே சக்தி பெற்றது. இது, அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் அனைத்துலக அளவில் நிறுவனமயமான சக்திளைக் கொண்டுள்ளது. ஆகவே மூலோபாய ரீதியில் மேற்குலகு இன்றும் தாக்குதல் நிலையிலேயே  உள்ளது. மேற்குலகே இன்றும் உலகின் மேலாதிக்க சக்தியாக உள்ளது. சமீபத்திய பொருளாதார நெருக்கடி ஒரு பின்னடவே தவிர வீழ்ச்சியல்ல. இருந்தும், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியும் சமீபத்திய இராணுவரீதியான தோல்விகளும், டாலரின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு எழுந்துள்ள சவால்களும், தந்திரோபாயரீதியில் மேற்குலகை தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது. முறிந்து போவதைத் தவிர்ப்பதற்காக வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது. இத் தந்திரோபாயத்தின் விளைவுதான் பராக் ஒபாமாவாகும்.

ஆசிய முகாம்:

இது மேற்குலகைவிட பலவீனமானதாக உள்ளதுபோல் தெரிந்தாலும் இது வெறும் புறத்தோற்றமே. இதன் பிரதான உறுப்பினர்களான சீனா, ருஷ்யா, இந்தியா பிரேஸில் ஆகியனவற்றின் கூட்டுத்தொகை, தமது பிரமாண்ட பூகோளப்பரப்பு, பூதாகரமான ஜனத்தொகை, அதிகளவிலான பொருள் உற்பத்தி, எண்ணிலடங்கா இயற்கை வளங்கள், பிரமிக்கத்தக்க படையணி மற்றும் படைக்கலங்கள் ஆகியவனவற்றால் உலகளாவிய நிறுவனங்களையும் விட சக்திமிக்கதாகவே உள்ளது. ஆனால் உலகளாவியளவில் இன்னும் நிறுவனமயமாகவில்லை. இதனால் இந்த சமூக ஏகாதிபத்திய அணி மூலோபாயரீதியில் தற்காப்பு நிலையிலேயே உள்ளது. ஆனாலும், 2008 ல் இருந்து இன்று வரை இம் முகாம் தந்திரோபாயரீதியில் தாக்குதல் நிலைக்கு நகர்ந்துள்ளது..

1970 களுக்கு முன்னர் இருந்தது போல் அமெரிக்க டாலரை மீண்டும் அமெரிக்க தேசிய எல்லைக்குள் துரத்தி அடிப்பதில் இவ்வணி வெற்றி பெற்றால், இவ்வணி மூலோபாயரீதியிலும் தாக்குதல் நிலைக்குச் செல்வது ஆச்சரியமானதாக இருக்காது.

இதுதான் இந்த முரண்பாட்டின் அரசியல் குணாம்சமாகும். ‘நமக்கு’ நல்லது நடக்கவேண்டுமானால், நாம் யாரை ஆதரிப்பது? முன் கதவால் வந்து நிலை பெற்றுவிட்ட மேற்கு முகாமை விரட்டிவிட்டு பின் கதவால் வரும் பேரகங்கார முகாமை வரவேற்பதா? அல்லது பின் கதவு நுழைவை எதிர்த்து மேற்கை ஆதரிப்பதா? ‘நாம்’ ‘நாமாக’ இருப்போம். அப்போதுதான் ‘நமக்குச்’ சேரவேண்டியதை எவருக்கும் காவுகொடுக்காமல் ‘நமதாக்கிக்’ கொள்ளமுடியும்.

அப்படியானால், புரட்சியை வேண்டிநிற்கும் மக்களுக்கும், சுதந்திரம் வேண்டிநிற்கும் நாடுகளுக்கும் தன்னாட்ச்சி உரிமை வேண்டிநிற்கும் தேசங்களுக்கும், உலகளாவிய அளவிலான தனியான அணி எதுவுமே இல்லையா? இந்த உண்மை கசப்பானதுதான் அதற்காக நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமே இல்லை என்று புலம்பத் தேவவையில்லை. பிராந்திய ரீதியான அணிகள் உருவாகத்தொடங்கியுள்ளன. தேசிய இனங்களின் சிறைக்ககூடங்களின் ஒன்றியத்திற்குப் பதிலாக தேசங்களின் தன்னாட்சி உரிமையையும் நாடுகளின் சுதந்திரத்தையும் ஏற்றுக்கொண்ட தெற்காசிய நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் ஒன்று அமையவேண்டும் என்றோர் குரல் எழத் தொடங்கியுள்ளது. ‘நாம்’ ‘நாமாக’ இருப்பதற்கு, இவ்வித முன்னணியை நோக்கி நகர்ந்தால் என்ன?

இவ்வுலகளாவிய முரண்பாடு,  இலங்கைத்தீவில் எவ்விதம் செயற்பட்டுள்ளது? முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு, அய்ரோப்பாவில் முளைவிடத் தொடங்கிய பாசிசவியலிற்கு இலங்கையிலும் நண்பர்கள் இருந்தார்கள். தொழிற்சங்கவதி ஏ.இ. குணசிங்கா இதில் பிரதானமானவர். இவர்தான் சிங்களப் பேரகங்காரவாதத்தை இலங்கையின் ‘சுதந்திர’ அரசியலுக்கு கொணர்ந்தவராகும். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின்போது இது ஒரு தனியணியாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

1950களின் முற்பகுதிவரை, இலங்கை ஆளும் வர்க்கங்கள் தமக்குள் எந்த மோதல்களும் இன்றி நேசநாடுகள் அணியையே சார்ந்திருந்தன. நேசநாடுகளிலும் குறிப்பாக/மிகத்துல்லியமாக அமெரிக்க-பிரித்தானிய பாதந்தாங்கிகளாக இருந்தனர். இதனால் ஐக்கிய தேசியக்கட்சி(ஐ.தே.க) ஆரம்பத்தில் இருந்தே சிங்களப் பேரகங்காரவாதிகளின் கட்சியாகவும் இருந்தது. SWRDபண்டாரநாயக்காவின் தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சியின்(சி.ல.சு.க) தோற்றத்துடன் தான் உலகளாவிய முரண்பாடு இலங்கையிலும் செயல்படத் தொடங்க்கியது.

தனது ஆரம்ப நாளில் இருந்து இன்றுவரை, சி.ல.சு.க-யும் அதன் நண்பர்களும் மே.மு-க்கு எதிரான உலக அணியுடனேயே தம்மை இனங்காட்டி வருகிறார்கள். அதேபோல் ஐ.தே.க-யும், அதனது கூட்டாளிகளும் தமது ஆரம்பநாட்களில் இருந்து இன்றுவரை, மே.மு-உடனேயே தம்மை இனங்காட்டி வருகிறார்கள். இலங்கை முதலாளியம் இரு கூறுகளாகப் பிளவுபட முன்னர், இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள்  தனியொரு அணியாக இருந்து தமது சொந்த அமைப்புகளையும், மக்கள் அமைப்புகளையும் உருவாக்கி வந்தார்கள். அதே நேரம் சிங்களப் பேரகங்காரவாதத்திற்கு எதிரான அணியாகவும் இருந்தார்கள்.

இதனால் 1930களில் இருந்து 1950களின் நடுப்பகுதிவரையான காலம் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்துக்கும், இலங்கையின் ‘சிறுபான்மை இன மக்களுக்கும்’ வசந்தகாலமாக இருந்தது. ஆனால் 50களின் நடுப்பகுதியில் இருந்து இன்றுவரை இலங்கை இடதுசாரிக் கட்சிகள் பண்டாரநாயக்கா அணியினரை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அணியெனக் கூறி அதன் நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். இதன் மூலம், தேசியப் பேரகங்காரவாதிகளுக்குத் துணைபோனது மாத்திரமல்ல தாமும் அதே வகையினராக மாறிவிட்டார்கள். முடிவில், அவர்கள் சுயத்தை இழந்து, தமது மக்களையும் கைவிட்டு, தம்மைத் தாமே அழித்தும் கொண்டார்கள்.

மறுபக்கத்தில், மேற்கு முகாமிற்கு ஆதரவாக இருந்த தமிழ்த் தலைவர்கள், ஐ.தே.க-யின் ஆரம்பகாலத்தில் இருந்து 1980களின் நடுப்பகுதிவரே ஐ.தே.க-யின் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். தேசியப் பேரகங்கார வாதத்தையும்விட(தே.பே) லிபரல் பேரகங்காரவாதம்(லி.பே) மென்போக்கானது என்பதே இவர்களின் நியாயமாக இருந்தது. 58-ஐவிடஇ 77-ம் 83-ம் மென்மையானதுபோலும். தேசிய இன நலனைவிட வர்க்க நலன் மேன்மையானது என்பதே உண்மையாகும். தேசிய பேரகங்காரவாதம், தமது இடது நண்பர்களை கொலுப்பொம்மையாகவாவது வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் லிபரல் பேரகங்காரவாதம் இத் தமிழ்த் தலைவர்களை கருவேப்பிலையாக்கித் தூக்கி எறிந்துவிட்டது. யுத்த காலத்தின் போது இவ்விரு அணியினராலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய தமிழ் நண்பர்கள் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
இதே கதை இனியும் தொடரவேண்டுமா? நம்மை இழக்காமல், நம்மைக் காவுகொடுக்காமல், உலகளாவிய முதலீட்டிய முரண்பாடுகளையும் தேசம் தழுவிய முதலீட்டிய முரண்பாடுகளையும் நமது வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஆனால் நாம் கொலுப் பொம்மைகளாகவும், கருவேப்பிலைகளாகவும் மீண்டும் மீண்டும் மாறக்கூடாது.

நன்றி:  இனிஒரு (May 2010)

No comments: