Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Saturday, 17 June 2017

பெண் உறுப்பில் கிளிட்டோரிஸ் வெட்டி எடுக்கும் நிகழ்வு

Google+Originally shared by Kalaiy Arasan

இலங்கையில், முஸ்லிம் சமூகத்தில், பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கிளிட்டோரிஸ் சிதைப்பு சடங்கு பற்றி பலரும் பலவிதமாகப் பேசத் தொடங்கி உள்ளனர். இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், அது பற்றிய தெளிவு, அதை விமர்சிப்பவர்களிடமும் சிலநேரம் இருப்பதில்லை.

பெண் உறுப்பில் கிளிட்டோரிஸ் வெட்டி எடுக்கும் நிகழ்வு, மிகவும் இரகசியமான முறையில் நடக்கிறது. ஒரு பழைமைவாத சமூகத்தில் ஆண்களும், பெண்களும் தமக்கென இரகசியங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகின்றது. அதைப் பயன்படுத்தி, இந்த விடயத்தைப் பற்றி பெண்கள் ஆண்களுக்கு சொல்வதில்லை.

அதற்காக முஸ்லிம் ஆண்கள் எல்லோருக்கும் இந்த விடயம் தெரியாது என்று சொல்ல முடியாது. சில தகப்பன்மாருக்கும், கணவன்மாருக்கும் தெரிந்திருக்கலாம். இருப்பினும், இன்றைக்கும் அரசியல் ஆண்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், பொது வெளியில் இது கடுமையாக மறுக்கப் படுகின்றது.

அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமான தோற்றப்பாடு அல்ல. தெரிந்தோ தெரியாமலோ ஒட்டுமொத்த சமூகமும் அதில் பங்களிக்கிறது. ஆகையினால், முஸ்லிம் ஆணாதிக்க அரசியல் களத்தில் இந்தப் பிரச்சினையை முன்வைப்பதற்கு, பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும் முஸ்லிம் பெண்ணியவாதிகளால் மட்டும் தான் முடியும். இஸ்லாமியரல்லாத பிற சமூகங்களை சேர்ந்த முற்போக்காளர்கள், இதை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக மட்டுமே அணுக முடியும்.

முதலாவதாக, இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நடக்கும் சடங்கு அல்ல. ஆப்பிரிக்காவில், கிறிஸ்தவ சமூகத்திலும் கிளிட்டோரிஸ் சிதைப்பு சடங்கு பின்பற்றப் படுகின்றது. அதற்காக, ஒரு மதம் என்பதால் இஸ்லாத்தை குற்றத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் அர்த்தம் அல்ல. (மதத்தை விமர்சிப்பதே பாவ காரியம் என்ற மனப்பான்மை இன்னும் பலரிடம் மாறவில்லை.)

இரண்டாவதாக, இது ஆயிரமாயிரம் வருடங்களாக தொடரும் பண்டைய கால மரபு ஆகும். அது இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவிலும் இருந்திருக்கலாம். இன்றைய அரேபியர்கள் தம்மிடையே அந்தப் பழக்கம் இல்லை என்று மறுப்பார்கள். அது ஆப்பிரிக்கர்களுக்கே உரிய தனித்துவம் என்று சாதிப்பார்கள். அதுவும் தவறு தான்.

சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க மனித உரிமைகள் நிறுவனம், ஈராக்- குர்திஸ்தான் பிரதேசத்தில் கிளிடோரிஸ் சிதைப்பு சடங்கு நடப்பதாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தது. குர்திஸ்தான் அரசு அதை உத்தியோகபூர்வமாக மறுத்திருந்தது. அந்தளவு தலைக்குனிவை உண்டாக்கி இருந்தது.

தம்மை மதச் சார்பற்ற தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளும் குர்திய மக்கள் மத்தியிலும் இந்தப் பழக்கம் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கலாம். ஆனால், எங்கெல்லாம் பழமைவாத மரபுகள் கோலோச்சுகின்றனவோ, அங்கெல்லாம் இது போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.

பிரித்தானியாவில் பெருமளவிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் சிறிய அளவிலும், இந்தக் கிளிட்டோரிஸ் சிதைப்பு சடங்கு நடைபெறுகின்றது. குறிப்பாக, சோமாலியாவில் இருந்து வந்த குடியேறிகள் சமூகத்தில் அது சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.

கடந்த சில வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, அங்கு கிளிட்டோரிஸ் சிதைப்பு தடை செய்யப் பட்டுள்ளது. அதனால் பல சோமாலியர்கள், தாயகத்திற்கு சுற்றுலா சென்று வருவது என்ற சாட்டில் இந்த சடங்கை நிறைவேற்றுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் சோமாலிய, எத்தியோப்பிய, சூடானிய குடியேறி சமூகங்களில் மட்டுமே இந்தப் பிரச்சினை உள்ளதாக பேசப் படுவதால், அரபு முஸ்லிம்கள் இதை இஸ்லாமிய மதத்திற்கு அப்பாற்பட்ட விடயம் என்று சாதிக்க முனைகின்றனர்.

பெரும்பான்மை அரேபியர்கள் மத்தியில் கிளிட்டோரிஸ் சிதைக்கும் மரபு இல்லையென்றால், அதன் அர்த்தம் அங்கு இடம்பெற்ற சமுதாய மாற்றம் தான். இஸ்லாம் என்ற மதம் அல்ல. இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் இருந்த காலத்தில், அரேபிய சமுதாயம் பல நாகரிக மாற்றங்களை எதிர்கொண்டிருந்தது.

இருப்பினும், கிராமிய மட்டத்தில், அல்லது தொலைதூர பிரதேசங்களில் இந்த வழக்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால், இன்றைக்கும் குர்திஸ்தான் பகுதிகளில் நிலைத்திருந்தது எப்படி? அவர்கள் குர்தியர்கள் தான். இருப்பினும், அரேபியர்கள் மத்தியிலும் மிகச் சிறிய அளவில் இரகசியமாக நடக்கிறது. அதை யாரும் வெளியே சொல்வதில்லை என்பதற்காக அந்தப் பழக்கம் இல்லை என்று அர்த்தம் அல்ல.

ஒரு மதம் (இங்கே : இஸ்லாம்), பழமைவாத சம்பிரதாயம் தொடர்பான விமர்சனத்தில் இருந்து தப்ப முடியாது. ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த பண்டைய கால மரபுகளை மதங்கள் சட்டங்களாக மாற்றி விட்டுள்ளன. அதாவது, இன்று நாங்கள் எப்படி "சட்டத்திற்கு கட்டுப்பட்டு" நடக்கிறோமோ, அதே மாதிரி அந்தக் கால மக்கள் மதம் சொன்ன சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப் பட்டனர்.

ஒரு மதமானது, பண்டைய கால மரபுகளில் சிலவற்றை நிராகரித்து, சிலவற்றை ஏற்றுக்கொள்கின்றது. அது நிராகரிக்கும் விடயங்கள் அதிகாரம் சார்ந்ததாகவும், அது ஏற்றுக் கொள்ளும் விடயங்கள் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்காகவும் இருந்துள்ளன.

உதாரணத்திற்கு, பத்துக்கும் குறையாத தெய்வங்களை சிலையாக வைத்து வழிபட்டு வந்த அரேபியர்களின் மதச் சம்பிரதாயம் மாற்றப் பட்டு, ஓரிறைக் கொள்கையை ஏற்க வைக்கப் பட்டனர். இதனை இஸ்லாம் செய்த இமாலய சாதனை என்று மத நம்பிக்கையாளர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

பலதெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஓரிறைக் கொள்கையை புகுத்தியது அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற தேவைப் பட்டது. ஆனால், அதே தெய்வங்களை வழிபட்ட மக்களின் மரபு வழிப் பழக்க வழக்கங்ககளை, புதிய மதமான இஸ்லாம் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், அதை நியாயப் படுத்தியும் வந்தது.

இங்கு தான் கிளிட்டோரிஸ் சிதைப்பு தொடர்பான தெளிவின்மை தொடங்குகின்றது. இறைதூதர் முகமது பெண் உறுப்புச் சிதைப்பை அங்கீகரித்தமைக்கான ஹாடித் வாக்கியம் உள்ளதாக இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். பிறப்புறுப்பில் வெட்டும் சடங்கானது, "ஆண்களுக்கு மரபுக்கு உரியதாகவும் (சுன்னா), பெண்களுக்கு மகிமை பொருந்தியதாகவும் (மக்ருமா) இருக்கிறது" என்று அந்த ஹாடித் வாக்கியம் சொல்கின்றது. (தகவல்: Sami A. Aldeeb Abu Sahlieh, a Palestinian-Swiss specialist in Islamic law)

ஆண் சிறுவர்களுக்கு குறியின் முன்தோலை சிதைக்கும் வழக்கம் இஸ்லாத்திற்கு முந்தியது. இன்றைக்கும் யூதர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். எத்தியோப்பியாவில் கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்து கொள்கிறார்கள். பண்டைய காலத்தில் யூதர்களின், பின்னர் கிறிஸ்தவர்களின் மரபாக இருந்ததை தான் இஸ்லாமும் பின்பற்றியது. அதே மாதிரி, பெண் பிள்ளைகளுக்கான கிளிட்டோரிஸ் சிதைப்பும் இஸ்லாத்திற்கு முந்திய மரபு தான்.

இந்த இடத்தில் மதம் குறித்த தப்பெண்ணம் ஒன்றும் நிலவுகின்றது. பைபிளிலும், குரானிலும் ஒரே மாதிரியான பழமைவாத பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லப் பட்டுள்ளன. இருப்பினும், கிறிஸ்தவ மதம் மாறி விட்டது, இஸ்லாம் இன்னும் மாறவில்லை என்பார்கள். எந்த மதமும் மாறுவதில்லை. "ஆண்டவரின் ஆணைப்படி நடக்கும்" மதங்கள் எவ்வாறு மாற முடியும்?

இங்கே முக்கியமானது மதம் அல்ல, அதைப் பின்பற்றும் மனிதர்கள் தான். ஐரோப்பாவில் நடந்த லிபரல் புரட்சிகள், அரசையும், மதத்தையும் பிரித்து வைத்தன. லிபரலிசம் என்ற புதிய சித்தாந்தப் படி மக்களை சிந்திக்க வைத்தனர்.

முஸ்லிம் நாடுகளிலும் லிபரலிசம் பரவி உள்ளது. இருப்பினும், ஆட்சியாளர்கள் தமது நன்மைக்காக பழமைவாத மரபுகளை கொண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். தேர்தல் நடந்து கட்சிகள் மாறுவதால், சமூகத்தில் எந்த மாற்றமும் வந்து விடாது. அதற்கு ஒரு சமூகப் புரட்சி அவசியம். 

No comments: