Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Tuesday 11 August 2015

எதுவரை – உரையாடலுக்கான பொதுவெளி
 
தேசியமும் மதமும்—01

தேசியமும் மதமும்—01

-கைமண்

மேற்கண்ட தலைப்பிலான ஒர் ஆய்வுக்கட்டுரையை தொடர்கட்டுரையாக இவ்விதழில் எழுத அனுமதி தந்த ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.ஏற்கனவே எழுதிவைத்த கட்டுரையை பகுதி பகுதியாக இங்கு பிரசுரிக்கவில்லை. வாசகர்களின் ஆக்கபூர்வமான பின்னூட்டல்களையும், நேரடியான கருத்துப் பரிமாற்றங்களையும் உள்வாங்கிய வண்ணமே கட்டுரை தொடரும். இவ் ஆய்வை ஒரு புலமைசார் ஆய்வாக முன்னெடுத்துச் செல்லாமல் தன்னுணர்வூட்டல் ஆய்வாக எடுத்துச் செல்ல விரும்புவதே அதற்கான காரணமாகும்.
தன்னுணர்வூட்டும் ஆய்வென்பது தனியாளாகச் செய்யாமல் ஆய்வின் கருப்பொருளில் நாட்டமுள்ளவர்களுடன் இணைந்து, முடிந்தவரை கூட்டாகச் செய்வதாகும். ஆய்விற்கான தகவல் மூலங்களில் மக்கள் கணிசமான பங்காற்றுவர். ஆய்வின் முடிவுகளை உருவாக்கிக்கொள்வதில் மக்களின் முன்னோடிகளும் பங்கேற்பதைச் சாத்தியப்படுத்துதல். ஆய்விற்கு முன்னர், இணக்கம் குறைந்ததாகவும் முரண்நிறைந்ததாகவுமே காணப்படும் முன்னோடிகளினது கருத்துக் கட்டுமானம், ஆய்விற்குப் பின்னர் முரண் குறைந்ததாகவும் இணக்கம் நிறைந்ததாகவும் பரிமாணம்பெறும். ஆய்வின் முன்னோடிகள் தமக்குத் தேவையான கருத்துக் கட்டுமானத்தை தாமே உருவாக்கிக் கொண்டவர்களாகவும், ஆய்வு மனப்பான்மையை சுயமுயற்சியின் மூலம் கூட்டாக வளர்த்துக் கொண்டவர்களாகவும் அமைவர். எச் சமுக நிகழ்வு இவ்வாய்வின் கருப்பொருளாக இருக்கிறதோ அச் சமுக நிகழ்வின் இயக்கக் கோட்பாட்டை இனங்கண்டு தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான கருத்துக்கட்டுமானத்தை செழுமைப்படுத்துவதே இவ்வாய்வின் குறிக்கோளாகும்.
ஒரு சமுக நிகழ்வுப் போக்கின் இயக்கத்தைப் புரிந்து கொள்ளல் ஒரு புலமைசார் பயிற்சியாக இருக்க் கூடாது. தேசிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டதிற்கு சாதகமான முறையில் அந் நிகழ்வுப் போக்கில் வினைபுரிவதற்கானதாகவே இருக்கவேண்டும். தன்னுணர்வூட்டும் ஆய்வானது கருத்துக் கட்டுமான செழுமைப் படுத்தலுக்குப் பங்களிக்கும் அதேவேளையில் வினைபுரிபவர்களின் அணியொன்றையும் கூடவே உருவாக்கிக் கொள்கிறது.
சமகால சமுக நிகழ்வுப்போக்குபற்றிய ஆய்வுகளுக்கு இவ் ஆய்வுமுறை நிறைந்த பலனைத்தரும். இவ் ஆய்வின் கருப்பொருளாக அமையும் சமுக நிகழ்வுப்போக்கு இலங்கை மக்கள் தமக்கிடையேயான இன, மொழி, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வாழும்  இணக்கப் போக்கான ஒரு வாழ்க்கைமுறையேயாகும். அதாவது மக்கள் தமக்கிடையே இசைபட வாழும் வாழ்க்கைமுறையாகும். இசைபட வாழ்தல் எனும் நிகழ்வுப் போக்குக்கான தடைகளை இனங்காணலும், அத்தடைகளை நீக்கி இசைபடவாழும் உறவுமுறை சுமுகமானதாகவும் இயல்பானதாகவும் அமைவதற்குரிய வழிவகைகளைக் கண்டுபிடிப்பதுவுமே இவ் ஆய்வின் குறிக்கோளாகும். இவ் வழிவகைகளை பல்வேறு தளங்களில் தேடவேண்டியுள்ளது. அரசியல் தளமும், பண்பாட்டுத்தளமும் இவற்றில் பிரதான இரு மேற்கட்டுமானத் தளங்களாகும். அதேவேளை பொருளாதர வடிவமைப்பே பிரதான அடிக்கட்டுமானமாகும்.
மேற்கட்டுமானத் தளங்களில் அரசியல் தளமே இங்கு தலைமைப் பாத்திரம் வகிக்கின்றது. ஆனால் அரசியல் தளத்திற்கு உறுதுணையாக இருக்கும் பண்பாட்டுத்தளத்தில் ஏதாவது பாரிய கோளாறுகள் ஏற்படுமானால் அரசியல் தளத்திலான முயற்சிகளில் வெற்றிபெற முடியாது. இலங்கை மக்கள் தங்கள் தேசிய கௌரவத்தையும், தேசிய நலனையும், சுயாதிபத்தியத்தையும். தன்மானத்துடன் கூடிய சமாதானத்தையும்  ஏற்படுத்துவதற்காக உள்ளூரளவிலும் உலகளவிலும் தொடர்ச்சியான பல முயற்சிகள் எடுத்தவண்ணமேதான் உள்ளாரகள். ஆனால் இம்முயற்சிக்கான அரசியல் தளத்தில் மக்கள் அடுக்கடுக்கான பல தோல்விகளை சந்தித்து வருகிறார்கள். மக்களின் இப்போராட்டங்களால் இலங்கையின் ஆழும் வர்க்கங்கள் வர்க்க ஏறுதிசையில் முன்னேறி வருகின்றன. ஆனால் மக்களோ வர்க்க இறங்குதிசையில் சறுக்கி மேலும் மேலும் பள்ளத்தில் வீழ்ந்துவருகிறார்கள். இசைபட வாழ்ந்த மக்கள் இன்று தமக்குள் பகைபடவும், பகைவர்களுடன் இசைபடவும் வாழ்வதே பிரதான ஓட்டமாகக் காணப்படுகிறது.
இலங்கை மக்களின் பண்பாட்டுத்தளம் பாரியளவிற்குச் சீர்கெட்டிருப்பதே இத்தோல்விகளுக்கான காரணம் என்பதே இவ்வாய்வின் முன் அனுமானமாகும். இப் பண்பாட்டுச்சீரழிவுக்கான பிரதானமானதும் தலைமையானதுமான காரணி மதங்களேதான் என்பதே ஆய்வின் அடுத்த முன் அனுமானமாகும். இதனால் தேசியங்களுக்கும் மதங்களுக்குமான தொடர்பே இவ் ஆய்வின் பிரதான கருப்பொருளாகின்றது. தேசியமெனும் பதம் இன்றைய அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. அன்று விஜயன் அவேதப் பார்ப்பனியரின் துணைகொண்டுதான் இயக்கரையும் நாகரையும் தோற்கடித்தான், அடுத்ததாக அசோகவம்சம் பௌத்தத்தின் துணைகொண்டுதான் மக்கள் குடியரசுகளைத் தோற்கடித்து நிலவுடமை அரசுகளைத் தோற்றுவித்தது. இலங்கையின் ஹீனயான பௌத்தத்திற்கு எதிராக தென்னிந்திய மஹாயான பௌத்தம் நடத்திய போராட்டங்கள்தான் ஹீனாயானாவைப் பார்ப்பனமயப்படுத்தியது. இதன் மூலந்தான் ஹீனயானம் முழு நிறைபெற்ற நிலவுடைமை வர்க்க நிறுவனமாக பரிணாமம் பெற்றது.
அதற்கடுத்ததாக ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புக்கு பிரதான துணைப்படையாக விளங்கியது  கிறிஸ்துவ மதபீடங்களேயாகும், இன்று பௌத்த சிங்களவர் முழு இலங்கையையும் காலனிகொள்வதற்கு பெரும் உதவியாக விளங்கிவருவது பௌத்தமேயாகும். இடையே, பஞ்சமரை அடக்கும்  சைவ வெள்ளாளரின் முயற்சிக்குத் துணைநின்றது சைவ ஆகமேயாகும். நவகாலனிய சூழலுக்கு ஏற்ற முறையில் சிங்கள பௌத்தத்தை பேரினவாதமயப்படுத்தியது அநகாரிக தர்மபாலாவின் தலைமையிலான பௌத்த மறுமலர்ச்சி இயக்கமேயாகும். இந்தவரலாறுகள்தான் தேசியமும்-மதமும் எனும் ஆய்வின்  வரலாற்றுக் களங்களாக உள்ளன. இங்கு தேசியமெனும் பதம் தற்போது அது குறித்து நிற்கும் அர்த்தத்தை குறித்து நிற்கவில்லை என்பதைக் காட்டுகிறதல்லாவா? வேறு சொற்பதம் கிடைக்கவில்லை, கிடைத்தால் அறியத்தாருங்கள்.
இது மதங்கள்பற்றிய தனியான ஆய்வல்ல. இலங்கையின் மதங்கள் பற்றிய தகவல்கள் முன்னுரையின் முதல் இரு பகுதியாகவும் முன்வைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முன்அனுமானங்களே ஆய்வின் கருதுகோள்களாகவும் அமைகின்றது. இக்கருதுகோள்களை வாய்ப்புப் பார்ப்பதே-பரிசீலிப்பதே-ஆய்வுக்கட்டுரையின் உள்ளடக்கமாகும். இலங்கை முழுமைக்குமான மதசார்பற்ற அரசொன்றுக்கான அரசியல்யாப்பொன்றை உருவாக்குவதை நோக்கி இவ்வாய்வு  செல்லவேண்டும் என விரும்புகிறேன் முறையாக நடத்தப்பட்டால் இது சாத்தியம் என்ற நம்பிக்கையுண்டு. அனைத்துலக ரீதியிலான நாஸ்திகர் குழுவொன்றின் இலங்கைக் கிளை இவ்வித உத்தேசயாப்பொன்றை முன்வைத்து அது பற்றிய திறந்த விவாதத்தையும் நடத்திவருகிறது என்பதை ஒரு தகவலாக மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவ்வித ஆய்வு ஏற்கனவே முறையாத் தொடங்கிவிட்டன என்பதை சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.
முன்சொன்னவைமட்டும் இவ் ஆய்வின் கருதுகோள்களாக இருக்கமுடியாது. இவை இவ் ஆய்வின் திசை தொடர்பான கருதுகோள்கள் மாத்திரமேயாகும். இதில் இணக்கம் உள்ளவர்கள்தான் ஆய்விற்குள் கூட்டாக நுழையலாம். இச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவோ அல்லது பிரதான ஆதரவாளர்களோ அல்லது பெரும்பான்மையான வாசகர்களோ இக்கருதுகோள்களுடன் இணக்கம் காணாவிட்டால் அவர்கள் இவ்வாய்வை பயனற்றதாகவோ, காலவிரயமானதாகவோ கருதலாம். சிலவேளைகளில் இது நாசகார விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு அந்நிய சதி என்றும் கருதக்கூடும். மத ஒற்றுமையைக் குலைப்பதற்காக தேசிய இயக்கத்துள் நாஸ்திகத்தின் ஊடுருவல் என்று போர்க்கொடி தூக்கவும் கூடும். ஆகவே துரோகி என்ற பட்டமும் கிடைக்கக்கூடும்.
நூல்சார் புலமையாளர்களுடனோ அல்லது அரசு சார்பற்ற ஆய்வு அமைப்புகளுடனோ இவ்வாய்வு தொடர்பாக எவ்விதத் தொடர்பும் இதுவரை கொள்ளவில்லை. நடைமுறைசார் புத்திஜீவிகளுடனேயே (எதிர்கால மக்கள் புலமையாளர்கள்) முதலில் தொடர்பு கொள்ளவிரும்புகிறேன். ….. இணைய சஞ்சிகையூடாக தொடர்பு கொள்கிறேன். நீட்டிய நேசக்கரங்களுக்கு எதிர்மறை அர்த்தம் கற்பித்து பகமைப்போக்கை வளர்க்க கொம்பு சீவிவிடுவோரே ஒரு பெரும் அணியாக இணையங்களில் வலம்வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேவேளை ஊர்கூடித்தான் தேரிழுக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு, சிறுதுரும்பும்கூட பல் துலக்க உதவும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இசைபடவாழும் போக்குள்ளவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்ந்து வருகின்றனர் என்பதுவும் தெரியும். அவ்விதம் வளர்ந்து வருபவர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்கிவிக்கவேண்டுமெனும் கருத்தை இச்சஞ்சிகையின் அமைப்பாளர்களில் ஒருவரான திரு, பௌசர் அவர்கள் இவ்விதமாக முவைக்கிறார்.
“மிக வெளிப்படையாக பேச வேண்டுமானால் பல்வேறு கருத்து நிலை,பார்வை அணுகுமுறை கொண்ட ஒரு சமூக சூழலில் அதன் அனைத்து தளங்களிலும் மிக அடிப்படையாக இருக்க வேண்டிய பன்மைத்துவ இருப்பிற்கும் அதன் உரிமைக்குமான முக்கியத்துவத்திற்கு  கதவடைப்பு செய்து வெகுகாலமாயிற்று. நமது சமூகங்களின்  பரப்பில்  தொடர்ச்சியாக நிலவுகின்ற இறுக்கமான போக்குகளும் ஒற்றைப்பரிமாண நிறுவுதலும் எதிர் நிலைக்குத் தள்ளும் விமர்சன கதையாடல்களும் பிற போக்குகளை பார்க்க மறுக்கின்ற மேலாதிக்கமும் பகைமுரண்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.”……. “இந்த இறுகிப்போன சூழலின் இரும்புத்திரையில் ஒரு சிறு நெகிழ்ச்சிப்போக்கையாவது ஏற்படுத்திவிட முடியாதா என்கிற மனத்தவிப்போடு,காலத்தேவையை கருத்திற் கொண்டு,அந்தந்த காலச்சூழல் கோரி நிற்கிற பணியை நம்மால் முடியுமானவரை ஆற்ற வேண்டும் என்கிற புரிதலுடன் பல்வேறு கருத்து ,பார்வை கொண்ட நண்பர்கள்/ ந‌ண்பிகள் இணைந்து அண்மைக்காலமாக ஒரு சிலமுயற்சிகளை கருத்து செயற்பாட்டு தளத்தில் எடுத்து வருகிறோம்.”
அவரையும் தெரியாது, அவரின் நண்பர்களையும் தெரியாது. அனால் அவரின் அபிலாசைகள் புரிகிறது. அவ் அபிலாசைகள் வெற்றிபெறும் என நம்புகிறேன். அவ் அபிலாசைகளுக்குத் தோள் கொடுத்திட விரும்புகிறேன். ஏனெனில் நானும் அவர் சொன்னவாறேயுள்ளேன்.  (காலத்தேவையை கருத்திற் கொண்டு,அந்தந்த காலச்சூழல் கோரி நிற்கிற பணியை நம்மால் முடியுமானவரை ஆற்ற வேண்டும் என்கிற புரிதலுடன்)
அந் நம்பிக்கையினதும் விருப்பினதும் வெளிப்பாடுதான்  இவ்வாய்வு முன்மொழிவு இச் சஞ்சிகையில் வருவதற்கான காரணமாகும்.
அடுத்த இதழில் இருந்து எனது பார்வையை விரிவாக முன்வைக்கிறேன்..உங்கள் கருத்துகளையும் எதிர்பார்த்து……….
 
7 Comments

  1. Muththu
    ராஜன் குறை கிருஷ்ணன்,
    Rajan wrote: “புலமைசார் ஆய்வு (academic research) கிடையாது என்று தன்னை அறிவித்துக்கொள்ளூம் எழுத்து, புலமைசார் எழுத்துக்களுடன் எத்தகைய உறவைப் பேணும் என்பது தெரியவில்லை. நவீன தேசிய அரசின் முக்கிய அடிப்படையே மதச்சார்பின்மைதான் என்பதை எத்தனையோ ஆய்வாளர்கள் பல்வேறு தேசங்களின் வரலாற்றுப் பிண்ணனியில் விளக்கியுள்ளார்கள். பிரச்சனை என்னவென்றால், நவீன அரசியல் முதலீட்டிய வளர்ச்சியை இலட்சியமாகக் கொண்டு நடைபெற தேசத்தின் உட்குழுக்களாக உள்ள அடையாளங்களை அரசியல் அணீகள் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. குறிப்பாக தேர்தல் அரசியல் மெஜாரிட்டி என்னும் எண்கள் அடிப்படையில் அரசியலதிகாரத்தை தரும்போது பெரும்பான்மையினரின் அடையாளம், சிறுபான்மையினரின் அடையாளத்திற்கு எதிராக கட்டமைக்கப்படும் சூழல் உருவாகிறது. இதற்கும் இறையுணர்வு, பண்பாடு போன்ற தொன்மை இழைகளுக்கும் உள்ள தொடர்பு பலவீனமானது. எனவே, மதசார்பற்ற தேசிய அரசியலை உருவாக்கவேண்டும் என்ற விழைவு சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் முயற்சியை ஒத்தது என்றுதான் சொல்லவேண்டும். சக்கரம் ஏன் ஓடவில்லை என்பதைத்தான் ஆய்வு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்
  2. நெடுதுயிலோன்
    நல்ல முயற்சி நாத்திகம் எனும் நாலாம் படை நாடுக்குள் நுழையும் எனில் அதை நாலு மதக்காரரும் நாத்திகப்படையை கூட்டாக எதிர்ப்பார்கள் ஆகவே நாதிகப்படை எனும் நாலாம் படையை எதிர்க்க நான்கு மதமும் மூன்று இனமும் ஒன்றாக இணையும், அதனால் நாடில் நல் இணக்கம் உருவாகி எல்லோரும் இசைபாடுவார்கள்.
    பி.கு :- நாத்திகப்படைக்கு நன்றி
  3. குலம்-கனடா
    கைமண் அவர்களின் முதல் நூலை அண்மையில்தான் இங்கு பெற்று வாசித்தேன்.அந் நூலில் கூறப்பட்ட பல விடயங்களில் உடன்பாடும் சில விடயங்களில் எனக்கு முரண்பாடும் உள்ளது. இந்த விடயங்கள் பற்றி அவருடன் உரையாடுவதெட்கு இந்த இணையம் வாய்ப்பளித்திருக்கிறது.அவர் தேசியமும் மதமும் பற்றி எழுத வந்திருப்பது மிக முக்கியமானது எனப் பார்க்கிறேன்.பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதேட்கும் இனிகருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்.
    சிங்கள மக்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியாக கொண்டுசெல்லாத இடதுசாரிகள்,தமிழ் மக்களுக்குள் சரியான அரசியல் வழிகாட்டுதல்களை வழங்காத இடதுசாரிகள் ,இதில் கைமண் உட்பட தமது வழிமுறைகள்,தவறுகள்,சரிகள் தொடர்பான விடயங்களை முதலில் எழுத வேண்டுமென விரும்புகிறேன்.ஏனெனில் இதனை முன்வைத்த பின்புதான். இன்றையநிலைமைகள் தீவிரம் பெற்றதினை பேசமுடியும் என நினைக்கிறேன். அனுபவம்,ஆழமான அரசியல் அறிவுள்ள அவர் இந்த விடயத்தினை கணத்தில் எடுப்பார் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் தொடர்ந்தும் எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.
  4. jivan_raj
    இங்கு தேசியமெனும் பதம் தற்போது அது குறித்து நிற்கும் அர்த்தத்தை
    குறித்து நிற்கவில்லை என்பதைக் காட்டுகிறதல்லாவா? வேறு சொற்பதம்
    கிடைக்கவில்லை கிடைத்தால் அறியத்தாருங்கள்.!”
    உங்களுடைய இக்கேள்வியில் எனக்கும் உடன்பாடு உண்டு. நாடு, இனம், மொழி என
    மட்டுப்படுத்தி வரையறுத்து வைத்திருபபவைகள்தான் தேசியம் அல்ல. இப்புரிதல்
    கொண்டதோர் குறைபாட்டால்தான் பண்பாட்டுத்தளத்தில் உள்ள பல முரண்பாடுகளை, அதன்
    கூறுகளைக் தேசியம் பற்றி பேசுவோர்கள் கணக்கில் எடுப்பதில்லை. சமூகம் பன்முகத்
    தன்மையில் இயங்ககின்றது. நீங்கள் சொல்வதுபோல் “மேற்கட்டுமானத்
    தளங்களில் அரசியல் தளமே இங்கு தலைமைப் பாத்திரம் வகிக்கின்றது. ஆனால்
    அரசியல் தளத்திற்கு உறுதுணையாக இருக்கும் பண்பாட்டுத்தளத்தில் ஏதாவது
    பாரிய கோளாறுகள் ஏற்படுமானால் அரசியல் தளத்திலான முயற்சிகளில் வெற்றிபெற
    முடியாது” எனற உண்மையை மறுக்க முடியாது என்னைப் பொறுத்தவரை, தேசம்,
    இன-மொழி-என்பதற்கு அப்பால், சாதியம், பெண்ணியம், போன்றவைகளும், இதுபோன்ற
    ஏனைய சமூகக் கூறுகளும் தேசியத்தின் உள்ளடக்கமே. இங்கே இது குறித்;த சரியான
    சொற்பதம் இல்லாமையால் தேசியவாதிகள் எனப்படுவோரும், ஏன் மார்க்சிஸ வாதிகள்
    மத்தியலும் இதைக் கையாள்வதில் பெரும் குழப்பம் நிலவுகின்றது. உதாரணத்திற்கு
    அண்மையில் ந. ரவீந்தின் அவர்களால் எழுதப்பட்டுள்ள இரட்டைத்தேசியம் எனும்
    கட்டுரையில் அவர் சாதியத்தை ஓர் தேசியமாகவே கணிக்கின்றார். இதில் தேசியம்
    என்றவுடன் சிலர் லெனினைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, தேசியம், சுயநிர்ணய
    உரிமை ஏனும் போக்கில், பிரிவினை எனும் போக்கிற்கும் செல்கின்றனர். இதுகொண்டு
    தேசியம் என்றால் எதுவென்ற குழப்பமும் நிலவுகின்றது. எனவே இது பற்றி சமூக
    விஞ்ஞானக் கண்ணோட்திலான ஆரோக்கியமான கருத்துப்பரிமாறல்கள் தேவை.
  5. Kalaiyarasan
    இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் தமது அரசியல் நலன் சார்ந்த தீர்வினையே முன் வைத்து வருகின்றனர். இந்தக் கட்டுரையின் ஆசிரியர் அதனை வேறொரு கோணத்தில் இருந்து அணுகுகின்றார். தேசிய இனப்பிரச்சினையின் பின்னால், அப்பாவித் தனமாக மறைந்திருக்கும் மதங்களின் பிரச்சினை குறித்து யாரும் பேசுவதில்லை. இலங்கையில், ஒரு காலத்திலும் “மதப் பிரச்சினை இருக்கவில்லை” என்று மேற்கத்திய நாட்டவரும் நினைக்கின்றனர். இன்னொரு பக்கத்தில், தமிழரின் பாரம்பரிய பூமியில், புதிதாக முளைக்கும் புத்த கோயில்கள் பற்றிய சர்ச்சை அதிகரிக்கின்றது. தமிழர்களின் பிரதிநிதிகள், இவற்றை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதாலும் தடுக்க முடியவில்லை. புத்த கோயில்கள், அவற்றை சுற்றிய சிங்கள குடியேற்றங்கள், இவற்றைப் பற்றி சர்வதேச மட்டத்தில் முறையிடப் பட்டாலும், அவை நிறுத்தப் படவில்லை. இத்தகைய பின்னணியில், இந்தக் கட்டுரை ஆசிரியர், புதியதொரு தீர்வை முன் வைக்கிறார்:
    // இலங்கை முழுமைக்குமான மதசார்பற்ற அரசொன்றுக்கான அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதை நோக்கி இவ்வாய்வு செல்லவேண்டும் என விரும்புகிறேன் முறையாக நடத்தப்பட்டால் இது சாத்தியம் என்ற நம்பிக்கையுண்டு. // -கைமண்
    இலங்கையின் முன்னை நாள் காலனியாதிக்க நாடுகளான, பிரிட்டனிலும், நெதர்லாந்திலும் மதச் சார்பற்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக, இலங்கைத் தீவு, டச்சுக் காரரின் கைகளில் இருந்து, பிரிட்டிஷார் கைகளுக்கு மாறியதற்கு, நெதர்லாந்தில் நடந்த மதச் சார்பற்ற புரட்சி காரணமாக அமைந்துள்ளது! ஐரோப்பியர்கள், தமது தாயகத்தில் இடம்பெற்ற புரட்சிகளின் பலன்களை, தமது காலனிய மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. அநகாரிக தர்மபால தலைமையிலான பௌத்த மத மலர்ச்சிக்கு, சேர்.ஒல்கொட் என்ற ஆங்கிலேயரும் பங்களித்துள்ளார். யாழ்ப்பாணத்தில், ஆறுமுக நாவலர் தலைமையிலான சைவ மத மறுமலர்ச்சிக்கும், ஆங்கிலேய அரசின் ஊக்குவிப்பு இருந்துள்ளது. ஆகவே, இன்றைய இன/மதப் பிரச்சினைக்கு காலனிய எஜமானர்கள் அத்திவாரம் இட்டுள்ளனர் என்பது தெளிவானது. இது பற்றி மேலும் ஆராயாமல், இன்றைய நிலையில், மதச் சார்பற்ற சட்டம் சாத்தியமா என்று பார்க்க வேண்டும்.
    தேர்தல் ஜனநாயக அரசமைப்பில், மதம், இனம்,சாதி ஆகிய உணர்வுகளை கிளறி விடும் அரசியல்வாதி இலகுவில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம். ஆனால், துப்பாக்கி முனையில் அனைத்தையும் புரட்டிப் போடக் கிளம்பிய ஆயுதபாணி இயக்கங்களும் அந்த விதிகளை மாற்ற முனையவில்லை. ஜேவிபி, விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கங்கள் கூட, மத நிறுவனங்களை பகைக்கவில்லை, மாறாக அரவணைத்து சென்றார்கள். ஜேவிபிக்கு சில பௌத்த குருமாரும், புலிகளுக்கு சில கிறிஸ்தவ குருமாரும் பகிரங்கமாகவே ஆதரவு வழங்கினார்கள். புலிகள் அமைப்பின் முகாம்களுக்குள் சரஸ்வதி பூஜையின் இறுதி நாளான, ஆயுத பூஜை கொண்டாடப் பட்டது.
    புரட்சிகர அமைப்புகள் கூட மதங்களை அனுசரித்து செல்லும் போக்கு, இலங்கைக்கு மட்டும் பொதுவான அம்சமல்ல. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் எல்லாவற்றிலும், மத நிறுவனங்களுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. இதற்கு மாறாக, சில குறிப்பிடத் தக்க ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மத நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, வெறும் மதச் சார்பற்ற சட்டம் மூலமே, மதவெறியை, அல்லாவிட்டால் இனவெறியை அடக்கி விட முடியாது. அதற்கு முதல், பாடசாலைகளில் மதச் சார்பற்ற கல்வி அவசியம். இலங்கையில், ஐம்பதுகளில் இருந்து கல்வி தேசிய மயப் படுத்தப் பட்டிருந்தாலும், மதம் ஒரு பாடமாக கற்பிக்கப் படுகின்றது. அதுவும் நீக்கப் பட வேண்டும்.
    மேலும், பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகளில் மக்களுக்கு மதத்தின் தேவை இருந்து கொண்டிருக்கும். சோவியத்துக்கு பிந்திய முதலாளித்துவ ரஷ்யாவில், மதச் சார்பற்ற சட்டம் உள்ளது. மதக் கல்வியும் அங்கே இல்லை. இருப்பினும், மதத்தின் பால் மக்கள் ஈர்க்கப் படுவதற்கு பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு மதச் சார்பற்ற சட்டத்தை அமுல் படுத்திய துருக்கியிலும், இன்று மதம் சார்ந்த கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை எடுத்துள்ளது. ஆகவே, மதச் சார்பற்ற சட்டம் மட்டுமே, பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. மதச் சார்பற்ற சட்டம், மதம் நீக்கப் பட்ட கல்வி, இவற்றுடன் இனங்களுக்கு இடையிலான பொருளாதார சமத்துவமும் அவசியமானது. ஒரு வேளை, உலகமயமாக்கல் அதற்கான பாதையில் அடியெடுத்து வைக்கலாம். ஆயினும், அது கூட ஒரு தீர்வாக இருக்க முடியாது. இலங்கையில் முப்பதாண்டுகளாக நடந்த போரின் முடிவில், உலகமயமாக்கப் பட்ட புதிய தலைமுறை ஒன்று உருவாகி இருந்தது. இரண்டு இனங்களிலும், அந்தப் புதிய தலைமுறை கூர்மையான இன முரண்பாடுகளை வெளிக் காட்டியது.
    கட்டுரையாசிரியரின் ஆய்விலும், முடிவுகளிலும் நான் குறுக்கிட விரும்பவில்லை. அவர் எந்தத் திசையில் கட்டுரையை நகர்த்திச் செல்லப் போகின்றார் என்பதையும் இப்போதே எதிர்வு கூற முடியாது. நான் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை கருத்தில் எடுத்து, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன் வைப்பின், அது பலரின் மனச் சாட்சியை தட்டி எழுப்பலாம்.
  6. Muththu
    நண்பர் கலையரசனின் குறிப்பு. முகநூலில் அனுப்பியிருந்தார்.

April 29/ 2012
 
No comments: