கௌரி லங்கேஷ்க்கு மரணமில்லை.
கர்னாடகாவின்
(பெங்களூரில் வசிக்கும்) மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப் பட்ட
செய்தி கிடைக்கும்வரை அவரை நம்மில் பலருக்கும் தெரிந் திருக்காது. அதனை அவரும்
தெரிந்துவைத்திருப்பார். தாம் குறிவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் யாரால்
குறிவைக் கப்பட்டிருக்கிறோம் என்பதையும்கூட அவர் அறிந்து வைத்திருப்பார். அர்னாப்
போல ஊடகவியலில் நக்கிப்பிழைத்து சுகவாழ்வு வாழ இயலும் என்பதையும் அவர் அறியாதவர்
அல்ல. ஆனாலும் கௌரி ஏன் மரணத்தை பரிசளிக்கின்ற பெரிய அங்கீகாரமளிக்காத வாழ்வை
தெரிவு செய்ய வேண்டும்?
காரணம் அவர் வாழ்வதன்
பொருளை உணர்ந்தவர். தன் சுயத்தை மதிக்கவும் அதனை மறைத்துக்கொண்டு வாழும் போலி
சுகவாழ்வை வெறுக்கவும் கற்றிருந்தார். அவர் இந்துத்துவ எதிர்நிலைப்பாடு என்பதில்
மட்டும் உறுதியாக இருந்திருகவில்லை. பாஜக எதிரணியில் உள்ள காங்கிரஸ் நடத்திய
திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களை அவர் எதிர்த்தார். காங்கிரஸ் மந்திரிகள் ஜார்ஜ்,
சிவகுமார் ஆகியோரது ஊழல்களை கடுமையாக அம்பலப்படுத்தி வந்தார். சுருங்கச்சொன்னால்
அவர் தன் கொள்கையின் வழிநின்று மகிழ்ச்சியை கண்டடைந்தார். ஒரு சித்தாந்தத்தின்
மீதான வெறுப்பு அவரை வழிநடத்தியதாக யாரும் கருதிவிட வேண்டாம் என்பதற்காக இதனை குறிப்பிட
வேண்டியிருக்கிறது. ஒரு பொறுப்பான பத்திரிக்கையாளரின் எந்த தகுதியிலும் அவர்
சமரசம் செய்துகொள்ளவில்லை.
மரணம் ஒவ்வொரு நாளும் நம்
பின்னால் நின்றுகொண்டுதான் இருக்கிறது. ஒரு டெங்கு கொசுவாலோ, குடிகார
வண்டியோட்டியோ, தெருவில் நிற்கும் வெறிநாயோ யாரால் வேண்டுமானாலும் உங்களுக்கு
மரணத்தை பரிசளிக்க முடியும்.
எல்லோருக்குமான அந்த நீண்ட பட்டியலில் கௌரிக்கும் கல்புர்கிக்கும் இந்தித்துவ
அடிப்படைவதிகள் எனும் அபாயம் கூடுதலாக இணைந்திருந்தது. எப்படி சொறிநாய்க்கு பயந்து
நீங்களும் நானும் வீட்டுக்குள் முடங்குவதில்லையோ அப்படியே கௌரியும் இந்துத்துவ
அடிப்படைவாதிகளுக்கு பயந்து முடங்கியிருக வில்லை. இந்துத்துவாவின் கொலைப்
பட்டியலில் இருந்து தப்பிப்பது அவர் இலக்காக இருந்திருக்க முடியாது. ஒரு கொசுவோ
அல்லது ஒரு மதவெறியனோ யாரலோ அல்லது எதுவாலோ கொல்லப்படும் வரை ஒவ்வொரு நாளையும்
வாழ்ந்துவிடுவது என்பதையே துணிச்சல் கொண்ட எல்லோரும் தீர்மானமாக
கொண்டிருக்கிறார்கள். கௌரி லங்கேஷ்சும் அப்படியே வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர்
குறித்த செய்திகள் சொல்கின்றன.
அடிப்படைவாதம், ஊழல்
போன்றவற்றை எதிர்ப்பது மட்டுமல்ல கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம்
செயற்பாட்டாளர்களை கர்னாடகாவுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். பிணை விதிமுறை
காரணமாக தார்வாடில் 2 மாதங்கள் தங்கியிருந்த போதுகூட அந்த பகுதியில் மக்களை
ஒருங்கிணைக்கும் பணியை செய்தார். கர்நாடகா என்பது குஜராத்தின் சற்றே காரம் குறைவான
நகல். அங்கே தலித் ஆதரவு செயல்பாடுகளை தொடர்ந்து ஒருங்கிணைக்க அசாத்திய துணிவு
வேண்டும். அது கௌரிக்கு இருந்த்து. கர்நாடக பார்ப்பனீய அடாவடித்தனங்களை
எதிர்ப்பதிலும் இடதுசாரி, தலித் மற்றும் மனித உரிமை இயக்கங்களை ஓரணியில்
திரட்டுவதிலும் அவர் தொடர்ந்து தொய்வின்றி பணியாற்றியிருக்கிறார்.
தபோல்கர், பன்சாரே,
கல்புர்கி ஆகியோரை கொன்ற 7.65 மில்லி மீட்டர் நாட்டுத்துப்பாக்கிதான் கௌரியையும்
கொன்றது. அப்படியானால் அடிப்படைவாதம் வென்றுவிட்டது என்று பொருளா?
கொலைகள் மூலம்
ஜெயிக்கலாம் என்றால் சர்வாதிகாரிகளால் உலகை எளிதாக ஆண்டிருக்க முடியும். நிஜம்
அப்படி இருந்திருக்கவில்லை, இருக்கப்போவதும் இல்லை. வெறும் சொற்களை ஆயுதமாகக்
கொண்ட கௌரி எனும் ஒடிசலான பெண் மொத்த இந்தியாவையும் ஆளும் தீவிரவாதிகள் பற்றி
அச்சமின்றி தன் இறுதிநாள் வரை வாழ்ந்தார். ஆனால் எல்லா ஆயுதங்களும் இருந்த ஹிட்லர்
ஒரு கோழையாக எலியைப்போல ஒளிந்தே வாழ்ந்தார். துப்பாக்கிகள் சிந்தனையை கொல்லும்
எனில் அவை தபோல்கரை, பன்சாரேவை கொன்றபோதே கௌரி உருவாகாமல் தடுத்திருக்க முடியும்.
மனித இனம் துப்பாக்கிகளை செய்யக் கற்பதற்கு பன்னெடுங்காலம் முன்பே சிந்திக்க
கற்றுக் கொண்டுவிட்டது. சிந்தனைத் திறன் உள்ளவரை கௌரிகளும் பன்சாரேக்களும்
உருவாகிக்கொண்டே இருப்பார்கள். கண்ணையா குமாரை இந்துத்துவ பொறுக்கிகள் நீதிமன்ற
வளாகத்திலேயே தாக்கினார்கள். அரசு, போலீஸ், நீதிமன்றம் என எதுவும் உன்னை
காப்பாற்றாது என்பதை அவர்கள் கண்ணையாவுக்கு தங்கள் வன்மம் நிறைந்த மொழியில்
சொன்னார்கள். ஆனால் கண்ணையா அதன்பிறகுதான் இன்னும் வீரியத்தோடு சமூகப்பணிக்கு
வந்தார்.
பகத்சிங், 23 வயதில்
தூக்கிலேற்றப்பட்ட நாள்வரை அவருக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தது. மன்னிப்பு
எனும் ஒற்றை வார்த்தை அவரது நீண்ட ஆயுளை உறுதி செய்திருக்கும். ஆனால் அவர் நீண்ட
வாழ்நாள் எனும் வாய்ப்பை தெரிவு செய்யவில்லை, மாறாக வாழ்வை தெரிவு செய்தார்.
யானுஷ் கர்ச்சாக் எனும் மருத்துவர் வார்சா நகரில் ஆதரவற்ற சிறார்களுகான விடுதி
ஒன்றை நிர்வகித்து வந்தார். ஹிட்லரின் படைகள் அந்த நகரை கைப்பற்றியபோது ஆதரவற்ற
சிறார்களை கொல்ல உத்தரவிடப்பட்டது. ராணுவ அதிகாரி யானுஷுக்கு இரண்டு வாய்ப்புக் களை
வழங்கினார் ஒன்று விடுதியை விட்டு வெளியேறி வாழ்வது அல்லது விடுதியில் உள்ள
குழந்தைகளோடு சேர்த்து கொல்லப்படுவது. அவர் தயக்கம் ஏதுமின்றி இரண்டாம் வாய்ப்பை
தெரிவு செய்தார். மரணம் அருகாமையில் இருந்த அந்த தருணத்திலும் அவர் தம் பிள்ளைகள் அச்சமின்றி
அச்சூழலை கழிக்க உதவினார். கல்புர்கி, கௌரி, பன்சாரே, தபோல்கர் எல்லோருக்கும்
காலம் அப்படியான ஒரு வாய்ப்பை வழங்கிற்று. அவர்கள் சமரசம் செய்து பிழைத்திருப்பது
எனும் வாய்ப்பை மகிழ்வோடு புறக்கணித்தார்கள். தம் கொள்கைகளுக்காகவும்
மக்களுக் காகவும் உழைத்தார்கள்… சுருங்கச்சொன்னால் அவர்கள் வெறுமனே
பிழைத்திருக்கவில்லை ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்தார்கள்.
சூழல் நமக்கும் அப்படியான
ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வலதுசாரி சித்தாங்களின் பின்னால் போய் வேறு காரணங்களால்
சாகும்வரை வாழ்வதா (அங்கேகூட ரியல் எஸ்டேட், கள்ளக்காதல் விவகாரங்களால்
கொல்லப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அவர்களில் சிலர் அந்த சித்தாந்தங்களின்
வழிநின்று மரணத்தை தழுவுகிறார்கள்), அல்லது அதனை எதிர்த்து நின்று கொல்லப்படும்
வாய்ப்போடு வாழ்வதா அல்லது எதுக்கு வம்பு எனும் பார்வையாளனாக வாழ்வதா எனும்
வாய்ப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. உயிரோடிருப்பதற்கான காரணங்களும் தேவைகளும்
நம் எல்லோருக்கும் இருக்கிறது. அவை ஒரு நாய்க்கும் பன்றிக்கும்கூட இருக்கிறது.
அவைகளுக்கு வலதுசாரிகளால் ஒருபோதும் தொந்தரவு வரப்போவதில்லை. வலதுசாரிகளின்
லிஸ்டில் இல்லாத அந்த நாய்களைப்போல வாழ்வதா அல்லது அவர்களால் கொலைப் பட்டியலில்
இருந்த கௌரியைப்போல வாழ்வதா என்பது முற்றிலுமாக உங்கள் விருப்பத்தின்பாற்பட்டது.
கௌரியைப்போல இருப்பது எனும் கம்பீரமான வாழ்வு அல்லது அவரைப்போக செத்துவிடக்கூடாது
எனும் கோழைத் தனமான வாழ்வு என இரு வாய்ப்புக்கள் எல்லோர் முன்னாலும்
இருக்கிறது.
முடிவெடுக்கும் முன்னால்
ஒன்றை நினைவில் வையுங்கள். எந்த பாதுகாப்பும் இல்லாத கௌரி தன் சிந்தனையும்,
கொள்கையும் தந்த துணிவோடு உலகின் மாபெரும் தீவிரவாத இயக்கத்தையும் அதன் துணை
அமைப்புக்களையும் எதிர்கொண்டார். ஆனால் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு
பல்லாயிரம் கோடி நிதியோடு இயங்கும் அமைப்பு எந்த பெரிய அமைப்பு பலமும் இல்லாத
அவரது சிந்தனையை கண்டு அஞ்சி, கொன்று ஒழிக்கும் எல்லைக்கு சென்றது. கௌரி தன் கடைசி
ஆயுள் காப்பீட்டையும் முடித்துக்கொண்டு அந்த பணத்தைக் கொண்டு கண்ணையா குமாரை
இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் அனுப்ப உத்தேசித்திருந்தார். கண்ணையவை தம் மகனாக
வரித்துக்கொண்டார். எதிரிகளை எதிர்க்கும் துணிவு மட்டுமல்ல அதனைக் கடந்து
மற்றவர்களை அரவணைக்கும் கனிவும் நிறைந்தவர் அவர்.
சாகும்வரை வாழ்ந்துவிடும்
பெருவாழ்வா அல்லது சாவுக்கு காத்திருக்கும் அற்ப வாழ்வா என்பதில், நான் கௌரியின்
வழியையே தெரிவு செய்வேன். கௌரி, கல்புர்கி, பன்சாரே என வலதுசாரிகளால் கொல்லப் பட்ட
எண்ணற்ற போராளிகளுக்கான உண்மையான அஞ்சலி அதுதான்
https://villavan.wordpress.com/2017/09/11/கௌரிக்கு-மரணமில்லை/
No comments:
Post a Comment