காதல் காமமும்; விகாரக் காமமும்
சிம்புவின்
பாடலையிட்டு தொடர் விமர்சனங்களும், கண்டனங்களும், சிம்புவை நீதி மன்றுக்கு இழுத்தலும்
பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. இவை அவசியமானவைதான். பெண்களின் சுயமரியாதையை மதிக்கும் ஒரு சமூகம் உருவாகவேண்டும்
என்பதில் நாட்டமுள்ளவர்கள் இவ்வித மான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வரவேற்கப்படவும், வாழ்த்தப்படவும்
வேண்டிய தொன்றேயாகும்.
ஆனால்,
இவ்வித எதிர்ப்பியக்கங்கள் ஓரு விவகாரம் தழுவியதாகவும், அப்பப்போ எழுந்து தணிவதாகவும்
மட்டும் இருக்குமானல், இவை பரவிவரும் விகாரகாமச் சிந்தனையைத் தடுக்கவோ அல்லது காமவெறிச்
செயல்களின் பரவல் வேகத்தையும், பரப்பையும், அளவையும் குறைக் கவோ செய்யும் என்று எண்ணத்தோண்றவில்லை.
அனைத்து பிரபல்ய சினிமா நடிகர்களும், பெரிய நெறியாளர்களும், பண முதலைத் தயாரிப்பாளர்களும்
ஒரு “விசிலடிச்சான்” இரசிகர் கூட்டத்தை தம்முடன் வைத்திருப்பதற்காக விகாரக்காமத்தைப் பயன்படுத்துவது ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்துவருகிறது.
இது இனியும் தொடரும். சினிமா
நடிகர்கள் மட்டுமல்ல, கிராமப்புற நடனங்களும் இவ்விதமே உள்ளன. இந்நடனங்களில் நிறைந்துவளியும்
விகாரகாமக் காட்சிகளையும் இசையையும் கிராமமே திரண்டுவந்து ஆறஅமர உட்கார்ந்து குடும்ப
உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி இரசித்துப் பார்க்கவில்லையா? மக்கள் மத்தியில் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தொலைக்காட்சி விளமபரங்களில் விகாரக்காமம் பொங்கிவழியவில்
லையா? இவை அனைத்தையும் அப்பப்போ கண்டித்தும் விமர்சித்தும் கொண்டிருப்பதால் மட்டும்
காமவிகாரக்காமப் படைப்புகளை நிறுத்தி விடலாமா?
முடியாது
என்றே சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில், விகாரக்காமத்தை ஒரு இன்சுவையாக இரசிப்போர் கூட்டம்
பெருகிக் கொண்டே போகிறது. இச் சுவை பெரும்பான்மையோரின் செல்லப்பிராணியாக மாறியுள்ளது.
இச்சுவை இன்று பெருமளவு லாமமீட்டும் ஒரு அனைத்துலக சந்தைப் பொருளாகவும் மாறியுள்ளது.
அவரவர்களின் சுவைக்கேற்ப இது மதிப்பூட்டப்பட்டு பல்வேறு வடிவங்களில் சந்தைக்கு வருகிறது.
உப்பில் லாப் பண்டம் குப்பையில் என்பது போல், விகாரக்காமமில்லா கலைப் படைப்புகள் குப்பையில்
என்று கூறும் நிலையைக் கடந்து விட்டோம். விகாரக்காமம் தன்மட்டில் தானே ஒரு கலைப்படைப்பாக
மாறிவிட்டது. பாலூட்டி, தாலாட்டி, சீரூட்டி வளர்க்கும் விகாரக்காமம் எனும் இச்செல்லப்பிராணி
வெறிகொண்டு தம்மவர்களைக் கடித்துக் குதறும் போதுதான் கோபம் கொள்கிறார்கள் ,கொத்தித்தெழுகிறார்கள்.
இந்திய சமூகமே விகாரக்காமச் சுவைநாட்ட சமூகமாக மாறிவருகிறது.
விகாரக்காமத்தைக்
கையாள்வதில் நாம் முகங்கொடுக்கும் பிரச்சனைதான் என்ன? காமம், காதல்காமம் எனும் தனது
இயல்பான நிலையை மீறி விகாரக்காமமாக வடிவம் கொள்வதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும்.
காமம்
என்பதென்ன?
மனிதன்
உட்பட அனைத்து விலங்கினங்களும் அனுபவிக்கும் இன்பத்தின் அதியுச்ச இன்பம் அதுதான். இது
அனைத்து உணர்வுகளையும் ஒருமுகப் படுத்துகிறது, மன, உடல் இயக்கங்களில் ஒரு சமசீர்த்தன்மையைப்
பேணுகிறது, இயல்பான மன, உடல் இயக்கத்தைப் பேணுவதில் இதற்கு இணையாக வேறு எதுவுமேயில்லை.
காம இன்பம் காண்பது எவ்விதம் என்பது ஒரு கலை. தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டிய
ஒரு கலை.
பெண்
வழிச்சமூகம் காமத்தை தனது உச்சத்தில் வைத்துக் கொண்டாடியது. பெண்ணின் நிர்வாண நிலை
‘பிரகுரிதி’ என நாமமிடப் பட்டு போற்றி வணங்கப் பட்டது. வெவ்வேறு புணர்ச்சி நிலைகள்
கோவிற் சிப்பங்களாகவும் ஓவியங் களாகவும் எல்லோரும் பார்க்கும்படி வெளிப் படுத்தப்பட்டன.
அவை தரிசனத்துக்குரிய மனித நிகழ்வுகளாக போற்றப் பட்டன. அவை படுக்கை அறைகளுக்கும், குளியலறைகளுக்கும்
வரையறுக்கப்பட்டதொன்றாக இருக்கவில்லை என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மனமும் உடலும்
ஒன்றிணைந்து இரண்டறக்கலந்து, பரஸ்பர சம்மத்தத்துடன் தமது உடல் இச்சைகளைப் பரிமாறிக்
கொள்ளல்தான் புணர்தலாகும். அப்புணர்தலும், அப் புணர்தலுக்கு முன்பும் பின்புமான கூடி
வாழலுந்தான் காமம். இது நினைத்து, நினைத்து இன்புற வேண்டிய ஒரு கலை. இக் கலை தாந்திரம்
என அழைக்கப்பட்டது, இது நூல்வடிவில் காமசூத்திரம் என்றழைக்கப் பட்டது. புணர்ச்சி காம
உறவின் ஒரு அங்கமே. புணர்ச்சிக்கான வாய்ப்பு இல்லாத நிலையிலும், புணர்ச்சிக்கான உடலாற்றல்
பலவீனப்பட்ட நிலையிலுங்கூட காதற்காமம் வாழும். காதலும் காமமும் ஒரு நாணயத்தின் இரு
பக்கங்கள் எனக்கூறுவது கூடத் தவறு, இரண்டும் ஒன்றுதான். ஆகையால்தான் காதற்காமம் எனும்
பதத்தைப் பயன்படுத்துகிறேன். நிராகரிக்கப் படவேண்டியது காமமல்ல, விகாரக்காமமே.
வி காரக் காமம் என்பதென்ன?
மனங்களின்
ஒன்றிணைதலைப் புறக்கணித்து, வேண்டாவெறுப்பாகவோ, காமஇச்சையின் கணநேர உந்துதலாலோ அல்லது
புறநிலைக் கட்டாயத் தினாலோ இரு உடல்கள் தமக்குள் புணர்ந்து கொள்வதுதான் காதலற்ற காமமாகும்.
ஆகையினால் இப்புணர்வுகள் எவரினது மனத்தையும் திருப்திப்படுத்தாது. மனம் திருப்தியடையாத
படசத்தில் உடலும் திருப்தி யடையாது. பெரும்பான்மையான கணவன் மனைவிகளின் நிலையும் இதுதான்.
காதலற்ற காமத்தால் திருப்தியடையாத மனமும், திருப்தி யடையாத உடலும் காமவெறுமைக்கும்,
காமப் பிறள்வுகளுக்கும் உள்ளா கின்றன. காமவெறுமையும், காமப்பிறள்வும் விகாரக்காமத்தை
மேலும் மேலும் தூண்டிவிடுகிறது. காதல்க் காமம் இருந்த மனங்களில், காதற்க் காமம் இருக்கவேண்டிய
மனங்களில் விகாரக்காமம் குடியேறுகிறது.
இவர்கள்தான்
காலப்போக்கில் (காமுகர்களாக) மாறுகிறார்கள். ஆண்கள் மட்டுந்தான் காமுகர்கள் என்பதில்லை,
பெண்களும் உள்ளார்கள். ஆண் காமுகர்களில் ஒரு பகுதியினர் வன்முறைப் புணர்ச்சியாளர் ஆகிறார்கள்,
பெண் காமுகர்களில் ஒரு சாரார் கள்ளக் காதலின் நாயகியாகிறார்கள். இன்னோர் பகுதி காமுக
ஆண்களும் பெண்களும் தெரிந்தே காதலை பொழுது போக்காக கருதுபவர்கள் ஆகிறார்கள். மற்றோர்
பகுதி ஆண், பெண் காமுகர்கள் குழந்தைகளையும் காமுகர்களாக்கி வருகிறார்கள்.
காதலை
நிராகரிக்கும் சமூகத்தில், காமத்தைத் தீட்டாகக் கருதும் சமூகத்தில், மனப்பொருத்தமில்லா
கணவன் மனைவியரை வகைதொகை யின்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில், வர்ணாச்சிரமக்
குடும்பக் கௌரவத்தை பாதுகாக்கும் பொறுப்பை பெண்மீது சுமத்தி அவளின் காதற்க் காமத்தை
அடக்கிவரும் சமூகத்தில், காமவிகாரந்தான் சமூகத்தின் பிரதான சிந்தனையோட்டமாக மாறியிருப்பது
ஒன்றும் ஆச்சரியமானதல்ல. சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் அதற்குத்தகுந்தால்
போல் திட்டமிட்டே செதுக்கப்பட்டுவருகிறது.
சிம்பு
என்னும் கலைஞர் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல. அதற்காக சிம்பு தண்டிக்கப்படவேண்டியவர்
அல்ல என்று அர்த்தப்படாது. பாலினச் சந்தையில் விகாரக்காமத்துக்கான கோரல் (demand) இருக்கும்வரை புதிய புதிய உற்பத்தியாளர்கள்
தோன்றிக்கொண்டே இருப்பார்கள். அது ஒரு சுதந்திர நவீன சந்தையாகும், இணைய வர்த்தகம் அங்கு
கொடிகட்டிப் பறக்கிறது. சிம்பு போன்றவர்களுக்கு எதிரான போராட்டம் ஒரு முடிவல்ல. காதற்காமத்துக்கான
தடைகளை அகற்றுவதற்கான போராட்டமே முடிவாக அமையவேண்டும். அதாவது இபோராட்டத்தின் இறுதிக்
குறிக் கோள் அதுவாகவேண்டும். பெரியார் மரபு தொடரவேண்டும்.
- அ.கௌரிகாந்தன்
No comments:
Post a Comment